![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 23
![]() இதழ் 23 [ மே 16 - ஜூன் 15, 2006 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பழுவூர்ப் புதையல்கள்
டாக்டர் பாலாம்பாள் இத்தேவனாரைக் குறித்துத் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்ப்போம்.
i) "அக்கார நங்கையின் தந்தை என்று சொல்லப்பட்ட தேவனார், கண்டன் அமுதன் மறைவுக்குப் பிறகு கி.பி. 921ஆம் ஆண்டில் பழுவூர் அரசுக் கட்டிலேறி கி.பி. 957ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்திருக்கலாம் என்று ஊகிக்க இடம் இருக்கிறது." ii) "கண்டன் அமுதனாருக்கும் இத்தேவனாருக்கும் இடையில் விளங்கிய உறவு எத்தகையது என்று தெரியவில்லை!" iii) "இத்தேவனாருடன் திருச்சோற்றுத் துறைத் தேவனார் - நக்கன் கவடியக்கன், நக்கன் பிச்சியக்கன் சகோதரிகளின் தந்தை-கொண்டிருந்த தொடர்பு எத்தகையது என்று தெளிவாகத் தெரியவில்லை." 86 இம்மூன்று செய்திகளையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். i) அக்கார நங்கையின் தந்தையாகப் பாலாம்பாள் குறிக்கும் இத்தளி தேவனார் முதலில் மனிதரா அல்லது இறைவனா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வோம். அவனிகந்தர்வ ஈசுவர கிரக வளாகத்திலுள்ள கல்வெட்டுகளில் மூன்று, தேவனாரைப் பற்றிப் பேசுகின்றன. ஒன்று, இத்தளி தேவனார் மகளாக நக்கன் மானதிரியையும், அவர்தம் மகளாக நக்கன் கண்ட பிராட்டியையும் அறிமுகப்படுத்துகிறது. 87 இது உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டு. மற்ற இரண்டும் முதலாம் இராசராசன் காலத்தவை. இவற்றுள் இம்மன்னரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு 88, இத்தளி தேவனார் மகளாக நக்கன் மெரிய அரங்கபிரானையும், அவர்தம் மகளாக நக்கன் குமரக்கனையும் சுட்ட, இருபத்தேழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு 89 அவனி கந்தர்ப்பபுரத்துத் தேவனார் மகளாக நக்கன் பஞ்சவன் மாதேவியை அறிமுகப்படுத்துகிறது. அக்கார நங்கையின் தந்தையாக சுந்தரசோழன் காலத்தில் ஒரு தளித்தேவனார், மானதிரியின் தந்தையாக உத்தமழ்சோழன் காலத்தில் ஒரு தளித்தேவனார், மெரிய அரங்கபிரான் தந்தையாக முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு தளித்தேவனார், பஞ்சவன் மாதேவியின் தந்தையாக அதே இராசராசன் காலத்தில் ஒரு அவனிகந்தர்ப்பபுரத்துத் தேவனார் என நான்கு தேவனார்கள் இக்கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கிறார்கள். இந்நால்வரும் ஒருவரா அல்லது பலரா? இவர்கள் மனிதர்களா அல்லது இறைவனா? முதலாம் இராசராசன் காலத்துக் கல்வெட்டொன்று பகைவிடை ஈசுவரத்துத் தேவனாரைச் சுட்டியதை முன்பே பார்த்தோம். அந்தத் தேவனார் இறைவனே என்பதையும் கல்வெட்டு வரிகொண்டே தெளிவாய் உணர்ந்தோம். இந்நிலையில் 'இத்தளிதேவனார்' என்று அவனி கந்தர்வ ஈசுவரகிரகத்துக் கல்வெட்டுகள் குறிப்பதும், அந்தந்தத் தளி இறைவர்களைட்த்ஹான் என்பது எளிதாய் விளங்கும். தளியின் தேவன் இறைவன் தவிர வேறு யாராய் இருக்க முடியும்?
"திருமழுவாடி உடையார் தேவதாநம் கலைய மங்கலம் காணியாளரின்றி தேவரே காணியாளராக, இக்கலைமங்கலமுடைய பிராமணன் தேவற்கே காணியாக தேவர் ஸ்ரீபாதத்தே நீர் வார்த்துக் குடிநீக்கி இத்தேவர் தானமாக்கியே தேவரே அநுபவித்து வந்தமையில்" 91 என்பன போன்ற நூற்றுக்கணக்கான கல்வெட்டுகள் 'தேவர்' 'தேவனார்' என்ற சொற்கள் இறைவனைக் குறிப்பதை மிகத்தெளிவாகச் சுட்டுகின்றன. அரசரையும் தேவர் என்பதுண்டு. ஆனால் கோயிலின் தேவனாக எந்த அரசனும் எந்தவொரு கல்வெட்டிலும் குறிக்கப்படவில்லை என்பது இங்கு நினைக்கத்தகுந்தது. பழுவூர்க் கல்வெட்டு வரிகளைப் பார்ப்போம். "இத்தளி தேவனார் மகளார் நக்கன் அக்கார நங்கையார்" 91A "இத்தளி தேவனார் மகளார் நக்கன் மானதிரி மகள் நக்கன் கண்ட பிராட்டி" 92 "இத்தளி தேவர் மகள் மெரிய அரங்கபிரான் மகள் நக்கன் குமரக்கன்" 93 தளி என்றால் கோயில், இறைவந்தானே தளியின் முதல்வோன். ஆக 'இத்தளி தேவனார்', 'இத்தளி தேவர்' என்ற சொற்கள், அக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள கோயிலின் இறைவனைச்சுட்டுவதாகக் கொள்வதுதானே பொருந்தும். இதுபோலப் பஞ்சவன் மாதேவியின் தந்தையாகக் குறிக்கப்படும் அவனிகந்தர்ப்ப புரத்துத் தேவனாரும் இறைவந்தான். தன்னை இறைவனின் திருமகளாய்க் கருதிக்கொண்டமையால்தான் 'நக்கன் பஞ்சவன் மாதேவி' என்று அப்பெருமாட்டி அழைக்கப்படுகிறார். முதலாம் இராசேந்திரனின் மனைவியும் 'நக்கன் கருக்கமர்ந்தாள் பஞ்சவன் மாதேவி' என்று அழைக்கப்படுவதை நோக்கப்94, பழுவூர் அரசமரபில் வந்த இளவரசியர் பலர் கோயிற்பணிகளில் தங்களைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டு இறையுணர்வு கமழத் திகழ்ந்தது கண்கூடாகிறது. இந்நிலையில் தேவனார் கல்வெட்டுகள் கட்டும் நக்கன் பூதி, நக்கன் வீரநானி, நக்கன் மானதிரி, நக்கன் கண்டபிராட்டி, நக்கன் மெரிய அரங்கபிரான், நக்கன் குமரக்கன், நக்கன் அக்காரநங்கையார் ஆகியோர் அனைவரும் இறைவனது மக்களாகத் தங்களை அழைத்துக் கொள்வதில் பூரித்திருக்கிறார்கள் என்பதுதானே விளங்கும். இவர்கள் பெயர்களிலுள்ள 'நக்கன்' என்ற சொல்லும் இக்கருத்துக்குப் பெரிதும் வலிமை சேர்க்கிறது. சிவபெருமானை நக்கன் என்று பல கல்வெட்டுகள் அழைக்கின்றன. "வடகரை குறுக்கை நாட்டு பிரம்மதேயம் முருகவேள் மங்கலத்து சபையோம் இவூர் மகாதேவர் மங்கல நக்கர்க்கு" 95 "வடகரை பிரம்மதேயம் ஸ்ரீ திரிபுவன மாதேவி சதுப்பேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களோம், இவூர் திருவாறை நக்கன் கோயில் பரமசாமிகள்..." 96 "உறையூர் கூற்றத்து அல்லூர் ஊரோம் இவ்வூர் அல்லூர் நக்கர் கோயில் பரமேசுவரர்க்கு..."97 "பழுவூர் நக்கன் கோயில் பரமேசுவரர்" 98 இவை போலவே பழுவூர்க் கல்வெட்டுகள் மூன்று99 பகைவிடை ஈசுவரத்து இறைவனைப் பழுவூர் நக்கன் என்று அழைக்கின்றன. இறைவனைக் குறிக்கும் இந்த நக்கன் என்ற சொல்லை இப்பெருமக்கள் விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் காரணமே இவர்கள் தங்களை இறைவனது பிள்ளைகளாகக் கருதிக் கொண்டமைதான். அதனால்தான் கல்வெட்டுகள் இவர்களைத் தளித்தேவனார்களின் பிள்ளைகளாக அழைத்துப் பெருமைப் படுத்துகிறது. கோயில் ஆடலரசியர்கள் அனைவரும் நக்கன் எண்ற சிறப்புப் பெயருடையவர்களாக இருப்பதும், ஆடவர் சிலரும் அரசிளங்குமரியர் சிலரும் நக்கன் என்ற பெயர் கொண்டிருப்பதும் அவர்கள் கோயிலுடன் தொடர்புடையவர்கள் என்பதை உணர்த்துவதற்காகவே. இறைவனின் பெயரைத் தங்கள் பெயருக்கு முன்னால் ஏற்று இறைவனையே தங்கள் தந்தையாய் உருவகித்துத் தங்களை அப்பரம்பொருளின் பிள்ளைகளகக் கருதி வாந்த இந்தப் புண்ணியர்களை வரலாறு என்றென்றும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளது. அடிக்குறிப்புகள் 84. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 24 85. S. I. I. Vol. XIII, Ins. Nos. 208, 215, 229, 236; S.I.I. Vol. V, Ins. Nos. 679, 682 86. வெ. பாலாம்பாள், பழுவேட்டரையர்கள், பக். 23-25 87. இக் கல்வெட்டு டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவையால் படியெடுக்கப்பட்டது. கல்வெட்டறிக்கையிலும், கல்வெட்டுத் தொகுதியிலும் மானதிரி, கண்டபிராட்டி பெயர்கள் விடுபட்டுள்ளன. A. R. E. 366 of 1924, S. I. I. Vol. XIX, Ins. No. 402 88. A. R. E. 363 of 1924 கல்வெட்டறிக்கையில் மெரிய அரங்கபிரான் பெயர் இல்லை. டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வுப் பேரவை தென்வாயில் ஸ்ரீகோயிலின் கிழக்குச் சுவரிலிருந்து இக்கல்வெட்டைப் படியெடுத்துள்ளது. 89. A. R. E. 385 of 1924 90. S. I. I. Vol. V, Ins. No. 612 91. Lbid., Ins. No. 642 91A. S. I. I. Vol. XIII, Ins. Nos. 153, 154 92. S. I. I. Vol XIX, Ins. No. 402 93. A. R. E. 363 of 1924 94. A. R. E. 464 of 1918 95. S. I. I. Vol. XIII, Ins. No. 73 96. Lbid., Ins. No. 115 97. S. I. I. Vol. VIII, Ins. No. 688 98. S. I. I. Vol. VIII, Ins. No. 52 99. S. I. I. Vol. XIX, Ins. No. 266; A.R.E.401 of 1924; பு.க. 14, 1988 this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |