![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 17
![]() இதழ் 17 [ நவம்பர் 16 - டிசம்பர் 15 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
சங்கச் சிந்தனைகள்
புகை சற்றே விலக அந்தக் காட்சி விரிகிறது. முல்லையும் இருவாட்சியும் மல்லியும் சரம் சரமாக அந்தப் மஞ்சத்தின் நான்கு மருங்குகளிலும் தொங்குகின்றன. அவற்றிலிருந்து எழும் இனிய மணம் அந்த அறையில் ஏற்கனவே கமழ்ந்துகொண்டிருக்கின்ற அகிற்புகையோடு கலந்து ஒரு அற்புத சுகந்தமாகி மனதை நிறைக்கிறது. மஞ்சத்தில் அவன் நிமிர்ந்த மார்பொடு படுத்திருக்க அவன் மார்பில் தலையை வைத்து அவள் சாய்ந்திருக்கிறாள். எந்த சிந்தனைகளும் இல்லை. பேச்சு இல்லை. கண்கள் திறந்தும் திறவாமலும் ஒரு மயக்கத்தில் சொருகிக் கிடக்கின்றன. அவளுடைய அண்மை, ஸ்பரிசம், பெண்மை கலந்த அவளின் நுண்ணிய பூவுடல் அவன் மேல் ஒரு கொடிபோல படர்ந்து நிற்கிறது. அவனுடைய திண்மை வாய்ந்த தோள்களை, கம்பீரம் பொருந்திய முகவாயை அவள் மெல்லத் தழுவி மகிழ்கிறாள். ஆண்மை பொருந்திய அவனுடைய ஸ்பரிசத்தால் அவளின் பெண்மை முழுவதுமாக முகிழ்ந்து கிடக்க குழைந்து குழைந்து அவனுடைய மார்பில் அவள் ஒடுங்கிக்கொள்கிறாள். வானில் சுக்கில பட்சத்து நிலவு மெதுவாக எட்டிப்பார்த்துவிட்டு "சீ ! என்ன அநாகரீகம் ! தன்னை மறந்து தழுவிக் கிடக்கும் இந்தக் காதலர்களை நாம் மட்டும் திருட்டுத்தனமாக பார்ப்பது மட்டும் நியாயமா ? நம்முடைய மெல்லிய கிரணங்கள்கூட அவர்களுக்கு ஒருவேளை இடையூறாக இருந்துவிட்டால் ? அடடா - பெரும் பாவம் அல்லவா ?" என்றே நினைத்ததுபோலும் பெரியதொரு மேகக்கூட்டத்தினுள் அமிழ்ந்து நின்றது. வாயிலில் இருந்த தென்னை மரங்களின் இளம் கீற்றுகளில் அசைவில்லை. இடைவிடாமல் இந்தப் பொழுதுகளில் நாள்தோறும் ஊளையிடும் கிராமத்து நாய்கூட அன்று ஏனோ சீக்கிரம் உறங்கி விட்டது. அண்ட சராசரங்களும் அந்த இருவரின் தனிமையை கெடுக்க விரும்பாதனபோலும் ஒடுங்கிக் கிடந்தன. யுக யுகாந்திரங்கள் கழிந்தன. காட்சி மாறுகிறது. அடடா ! அந்தக் காட்சியைக் கண்ட கண்கள் இந்தக் காட்சியையும் காண என்ன பாவம் செய்தனவோ ? அது ஒரு கொடிய போர்க்களம். மிகக் கொடுமையான போர் ஒன்று அப்போதுதான் நடந்து முடிந்திருக்கிறது. ஐயோ ! சிதறிக் கிடக்கும் உடல்களும் வெட்டப்பட்ட யானைத் துதிக்கைகளும் புரவியின் கால்களும் அவ்வப்போது ஏதோ ஒரு முலையிலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் உடல்களிலிருந்து வான் நோக்கி எழும் தீனமான ஒலிகளும் அந்த மாலை நேரத்தில் எத்தனை பயங்கரமாகக் காட்சியளிக்கின்றன ! இறந்து கிடக்கும் உடல்களை ஈக்கள் மொய்க்கின்றன.... உலர்ந்து கிடக்கும் இரத்தத்தின் வாடை நாசியை நிரப்பிக் குடலைப் பிடுங்குகிறது. ஆங்காங்கே இறந்துகிடக்கும் உடல்களை அவர்களின் உற்றாரும் உறவினரும் சூழ்ந்து நின்றுகொண்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுகின்றனர். அந்தோ ! அந்த பாக்கியம் கூட இன்னும் பல உடல்களுக்குக் கிடைக்கவில்லை - பாவம் ! அவர்களின் உற்றார் எந்த ஊரில் பதைபதைப்போடு போர்முடிவு தெரிந்துகொள்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறனரோ ! யார் அவர்கள் இறந்து பட்ட செய்தியை அவர்களுக்குக் தெரிவிப்பார்களோ ! வேறு வழியின்றி கடைசி மரியாதைகள் கூடச் சரிவரப் பெற்றுக்கொள்ள முடியாமல் மொத்தமாக அந்தப் பிணங்கள் எரிக்கப் பெறுமோ ? அந்தப் கொடிய களத்தில் ஒரு தீப்பந்தத்தை ஏந்தியபடி பதைபதைப்போடு அவள் தேடிக்கொண்டிருக்கிறாள்.... ஒருவேளை உடலில் இன்னும் உயிர் இருக்கக்கூடும் என்ற ஆர்வம் அவளுடைய முகத்தில் தெரிகிறது. இருந்தும் இடைவிடாமல் கண்ணீர் பெருகி அவளுடைய பார்வையை மறைக்கிறது. பிடிவாதமாக அவள் ஊரிலிருந்து அவனுடன் தலைநகருக்கு அவள் கிளம்பி வந்திருந்தாள். அவனைக் களத்துக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் ஊரில் உற்றாருடன் உண்டு உறக்கிக் கழிப்பதென்பது அவளுக்கு இயலுகிற காரியமாக இல்லை. ஒரு நீண்ட நெடிய தேடலுக்குப்பின்....அதோ ! அவள் ஆரத் தழுவிய அதே மார்பில் மிகப்பெரிய வேலை உள்வாங்கிக்கொண்டு அவன் அந்தப் பெரிய போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கிறான். ஏதோ ஒரு எதிர்பாராத கணத்தில் அந்த வேல் பாய்ந்துவிட்டதுபோலும்.... அந்தத் தாக்குதலின் அதிர்ச்சியை உள்வாங்கிக்கொள்ளாமலே அவன் இறந்து கிடக்கிறான். ஐயோ ! அவளிடமிருந்து தீனமான ஆனால் தீர்க்கமான ஒரு அலறல் எழும்பி விண்ணை அடைக்கிறது.... போய்விட்டாயா ? போயே விட்டாயா ? என்ன கொடுமையான மனம் உனக்கு ? என்னை மட்டும் விட்டுவிட்டுப் போய்விட்டாயா ? ஐயோ - எத்தனை கம்பீரமான மார்பு அது ! வேலினை ஆழமாக உள்வாங்கியும்கூட இன்னமும் கம்பீரம் குறையாமல் வீழ்ந்து கிடக்கிறாயே ! நேரிடையான போரில் உன்னை ஜெயிக்கவே முடியாதடா ! வேறு எவரையாவது அம்பெய்வதற்குக் குறிபார்க்கும் தருணத்தில் எந்த நீசனாவது உன்மேல் கோழைத்தனமாக அம்பெய்துவிட்டானா ? அல்லது உன்னுடைய மறத்தின் தீவிரத்தைப் பார்த்து எதிரிகள் கூட்டமாகக் கூடிநின்று குறிபார்த்து அடித்தார்களா ? முடிந்துவிட்டது - எல்லாம் முடிந்து விட்டது. முதல்நாள் துவங்கியது மறுநாள் முடிந்துவிட்டது. இதுதான் வாழ்க்கை. ஒரு கணம் இன்பம். அடுத்த கணம் துன்பம். அதற்கு அடுத்த கணம் மீண்டும் இன்பம். இதுதான் வாழ்க்கை. இன்பம் - துன்பம் - வாழ்க்கை - மரணம் - பிறப்பு - இறப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு அங்கத்துக்கும் இருவேறு முகங்கள். இரண்டுமே சேர்ந்ததுதான் வாழ்க்கை. எதுவும் இங்கு நிலைப்பதில்லை. நிலையாமை ஒன்றே நிலையானது என்பார்கள். கூடிப்பிரியும் மேகங்களைப் போன்றதே வாழ்க்கை. மேகங்கள் கூடி நிற்கும்போது அங்கே பல உருவங்கள் அவரவர் கற்பனைக்கேற்றார்போல் தெரியும். மேகங்கள் கலைந்தபின் உருவங்களும் கலைந்துவிடும். இதுதான் வாழ்க்கை. பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறனான காஞ்சித் திணையை தொல்காப்பியர் அறிமுகம் செய்கிறார். காஞ்சிதானே பெருந்திணைப் புறனே; பாங்கு அருஞ் சிறப்பின் பல்லாற்றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே. (தொல்காப்பியம் / பொருளதிகாரம் - காஞ்சித்திணை - எண் 1022) "காஞ்சி என்னும் புறத்திணை பெருந்திணை என்னும் அகத்திணைக்குப் புறன் ஆகும். இணையில்லாத சிறப்பின் காரணமாக பலவற்றாலும் நிலையில்லாத உலகத்தைப் பொருந்திய நிலையை உடையது" உலகமானது பல்வேறு வழிவகைகளிலும் நில்லாமையை - அதாவது நிலையாமையை இயல்பாகக் கொண்டது. அதுவே அதற்கு இணையில்லாத சிறப்பை அளிக்கிறது. ஏன் ? அழியாமல் நிலைத்து நிற்பவை நம் கவனத்தைக் கவருவதில்லை. அழிபவை - அவை அழிந்துவிடும், நாளை இருக்கமாட்டா என்பதினால் அவற்றை இன்று நாம் இரசிக்கிறோம். இன்று காணும் சூரிய அஸ்தமனம் இதே இடத்தில் நிரந்தரமாக நின்று நிலைத்தால் அதனை நாம் இரசிப்போமா ? அஃறிணைப் பொருட்கள் வேண்டுமானால் அழிவிற்கு ஆட்படாமல் இருக்கலாம். ஆனால் உயர்திணைகள் - உயிர்த்திணைகள் அனைத்தும் அழிந்து படுகின்றன. அழிவு என்பதே தவறு. அது ஒரு மாயை. ஏனெனில் இருப்பவை எதுவும் அழிவதில்லை. இன்று ஒன்றாக இருப்பது நாளை வேறொன்றாக மலர்கிறது. இன்று இங்கிருப்பது நாளை அங்கிருக்கிறது. நடப்பதெல்லாம் காட்சிமாற்றம் - காலமாற்றம் - இடமாற்றம் - அவ்வளவே. இதை அறிவதுதான் வாழ்க்கை. நிலையா உலகம் என்று சொல்லாமல் நில்லா உலகம் என்று சொன்னதில் ஒரு உள்ளர்த்தம் உள்ளது. நில்லாமல் செல்வது இயக்கத்தின் அறிகுறி. ஆக நிலையாமையும் இயக்கத்தின் அறிகுறி என்பது பொருள். இருவேறு உலகங்களில் இயங்கும் இந்த வாழ்வின் தன்மையை - இயல்பைப் புரிந்துகொண்டவன்.... இன்பத்தில் தன்னை மறப்பதில்லை. துன்பத்தில் தன்னை இழப்பதுமில்லை. (மேலும் சிந்திப்போம்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |