![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 14
![]() இதழ் 14 [ ஆகஸ்ட் 16 - செப் 15, 2005 ] 1ம் ஆண்டு நிறைவு - கைலாயநாதர் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
கல்வெட்டாய்வு
கல்வெட்டினை மெய்கீர்த்தியுடன் தொடங்கும் முறையை தொடங்கி வைத்தவர் இராஜராஜர். அவருக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் இம்முறையைப் பின்பற்றி மிக நீளமான மெய்கீர்த்திகளைக் கொண்டவர்களாக விளங்கினார்கள். இராஜராஜருக்கு கல்வெட்டில் மெய்கீர்த்தி பொறிக்கும் எண்ணம் எவ்வாறு எழுந்தது? பல்லவர்கள் விருதுப் பெயர்களைக் கல்வெட்டில் பொறித்துள்ளது கண்டு அவருக்கு மெய்கீர்த்தி எண்ணம் உருவாயிற்றோ என எண்ணத் தோன்றுகிறது. இராஜராஜீசுவரம் கோயிலைக் கட்ட வேண்டுமென்ற எண்ணமும் இராஜராஜருக்கு காஞ்சிபுரம் இராஜசிம்மேசுவரத்தைக் கண்டு தோன்றியிருக்குமோ என்று நினைக்கிறேன். ஆமாம்! இராஜராஜர் இராஜசிம்மேசுவரத்தைக் கண்டார் என்று உங்களுக்குத் தெரிந்தது போல் கூறுகிறீர்களே என்று கேட்கிறீர்கள் இல்லையா? ஆமாம் ஐயா. இராஜராஜர் இராஜசிம்மேசுவரத்தைப் பார்த்திருக்கிறார். பார்த்ததோடல்லாமல் அக்கோயிலுக்கு கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி என்று நாமகரணம் சூட்டி கல்வெட்டிலும் பொறித்துள்ளார். அக்கல்வெட்டு இன்றும் அக்கோயிலில் கருவறை முன்மண்டப வாயிலுக்கருகில் கீழே உள்ளது. சரி, பல்லவ மன்னர்கள் விருதுப்பெயர்களைக் கல்வெட்டில் பொறித்துள்ளனர் என்று கூறினேன் அல்லவா. அப்படி விருதுப் பெயர்களைப் பொறித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தவர் முதலாம் மகேந்திரவர்மர். மெய்கீர்த்தி வழக்கத்தை இராஜராஜர் ஆரம்பித்தது போல் விருதுப்பெயர்கள் சூடி மகிழும் வழக்கத்தை பல்லவ மன்னர்களிடம் தோற்றுவித்தவர் மகேந்திரர் எனக் கொள்ளலாம். ஏனெனில் அதற்கு முன் இருந்த பல்லவ மன்னர்கள் மகேந்திரரைப் போலவோ அவருக்கு அடுத்து வந்த பல்லவ மன்னர்களைப் போலவோ பல விருதுப்பெயர்களைக் கொண்டிருந்தனரா என்று தெரியவில்லை. அவர்கள் அப்படி விருதுப்பெயர்களைத் தாங்கியிருந்தனர் என்றால் அது கல்வெட்டிலோ அல்லது செப்பேடுகளிலோ இடம்பெற்றிருக்கும். அப்படி எந்த சான்றும் இல்லாத காரணத்தால் மகேந்திரரே பல விருதுப்பெயர்களைச் சூட்டிக்கொள்ளும் வழக்கத்தை தொடங்கியவரென்று அமைதி கொள்ளலாம். மகேந்திரர் பல கலைகளையும் கற்று அவற்றில் வல்லவராக விளங்கியதை விசித்ரசித்தன், சங்கீர்ணஜாதி, மத்தவிலாஸன், சத்ருமல்லன் போன்ற அவருடைய விருதுப்பெயர்கள் மூலமாக அறியலாம். உதாரணமாக அவருடைய 'சித்திரக்காரப்புலி' என்ற விருதுப்பெயர் மூலமாக அவர் ஓவியம் தீட்டுவதில் வல்லவராக விளங்கியதை அறிந்துகொள்ள முடிகிறது. மன்னர் என்பதற்காக அவருக்கு இல்லாத திறமைகளைப் புகழ்ச்சியாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறதோ என்று எண்ணினீர்களானால் அவ்வாறு இல்லை அவ்விருதுப்பெயர்கள் உண்மையே கூறுகின்றன என்பதற்கும் கல்வெட்டுகளே சான்று தருகின்றன. அவர் அந்நாளில் இருந்த ஓவிய நூல் ஒன்றுக்கு உரை எழுதியதை மாமண்டூர் குடைவரையில் உள்ள அவருடைய கல்வெட்டு குறிப்பிடுகிறது. விருதுப்பெயர்களை சூட்டிக்கொண்டு மகிழ்வதில் மகேந்திரவர்மருக்கு இணையானவர் இராஜசிம்மேசுவரத்தை எடுப்பித்த இராஜசிம்மர். இராஜசிம்மேசுவரம் கோயிலில் விமானத்திலும் திருச்சுற்றிலும் உள்ள உபானத்திலும் பட்டிகையிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருச்சுற்றில் உள்ள கல்வெட்டுகள் இராஜசிம்மரின் 234 விருதுப்பெயர்களைத் தருகின்றன. இங்குள்ள விருதுப்பெயர்களில் சில அவரின் மற்ற படைப்புகளான, அதிரணசண்டேசுவரம் மற்றும் மல்லை கடற்கரைக் கோயிலிலும், பனைமலைக் குடைவரையிலும் அவர் வெட்டுவித்த வாயலூர் மற்றும் திருப்போரூர்க் கல்வெட்டுகளிலும் காணக்கிடைக்கின்றன. மல்லை பஞ்சபாண்டவர் ரதங்கள் என்று அழைக்கப்படும் ஒருகல் தளிகளை எடுப்பித்தவர் முதலாம் நரசிம்மவர்மரா, அவரை அடுத்து ஆட்சி செய்த பரமேஸ்வரவர்மரா என்று குழப்பமிருந்தது. இவர்கள் இருவருமில்லை, இவை இராஜசிம்மர் எடுப்பித்தது என்று கோயில் கட்டுமானம், சிற்பங்கள் மற்றும் தர்மராஜரதம் என்று அழைக்கப்படும் அத்யந்தகாம பல்லவேசுவர க்ருஹத்திலுள்ள கல்வெட்டில் காணப்படும் இராஜசிம்மரின் விருதுப்பெயர்களைக் கொண்டு டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது 'அத்யந்தகாமம்' புத்தகத்தில் தெளிவுற விளக்கியிருக்கிறார். இராஜசிம்மேசுவரத்தில் காணப்படும் விருதுப்பெயர்களுள் அத்யந்தகாமன், புவனபாஜனன், நரசிம்ஹன், மேகன், நயநமனோகரன், சர்வதோபத்ரன், மஹாமல்லன், ரணஜயன், பராபரன், பரன் ஆகிய பத்து விருதுப்பெயர்கள் அத்யந்தகாம பல்லவேசுவர க்ருஹக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இராஜசிம்மேசுவரத்திலுள்ள அரபுதிஹதன், லலிதவிலாசன், த்ரைலோக்யநாதன் ஆகிய மூன்று விருதுப்பெயர்களும் சிறு மாறுதல்களுடன் அரபுதிஹதசாசனன், லலிதன், த்ரைலோக்யவர்த்தனன் என்று அத்யந்தகாம பல்லவேசுவர க்ருஹக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இவ்விருதுப்பயர்களில் அத்யந்தகாம, ரணஜய ஆகிய இரு விருதுப்பெயர்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அத்யந்தகாம என்றால் முடிவில்லாத மன எழுச்சி உடையவன் என்று பொருள். ரணஜய என்றால் போர்களில் வெற்றிகொண்டவன் என்று பொருள். இராஜசிமேசுவரத்தில் இராசிம்மரின் பிறப்பைப்பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு "உக்ரதண்டனிடமிருந்து கடமை உணர்வு மிக்க ஸ்ரீஅத்யந்தகாமன் பிறந்தார்" என்று உள்ளது. இதிலிருந்து இராஜசிம்மர் தம் பெயரை அத்யகாமன் என்றே அறிவித்திருப்பது புலனாகிறது. மேலும் அத்யந்தகாம பல்லவேசுவர க்ருஹத்திலும் "ரணஜயன் என்ற பெயரால் புகழடைந்தவரான அரசர் அத்யந்தகாமன் இந்த சிவன் கோயிலைச் செய்வித்தார்" என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதிலிருந்து இராஜசிம்மர் அத்யந்தகாமன் மற்றும் ரணஜயன் ஆகிய இரு முக்கிய விருதுப்பெயர்களைக் கொண்டு அழைக்கப்பட்டதை நாம் அறிந்துகொள்ளலாம். இராஜசிம்மேசுவரத்துக் கல்வெட்டுகளில் உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் "Caligraphy" என்று கூறுவோமே, எழுத்துக்களைக் கொண்டு வடிவங்களைத் தீட்டுவது, அவ்வாறு வடிவங்கள் வருமாறு இங்குள்ள கல்வெட்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கீழே உள்ள படத்தைப் பார்க்கவும். ![]() |