![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 167
![]() இதழ் 167 [ நவம்பர் 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 21: நீ வருவாயென! மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 今こむと 言ひしばかりに 長月の 有明の月を 待ちいでつるかな கனா எழுத்துருக்களில் いまこむと いひしばかりに ながつきの ありあけのつきを まちいでつるかな ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு சொசெய்ஹோஷி காலம்: கி.பி. 844-910. இத்தொடரின் "கொண்டல் விலக்காயோ கொண்டலே!" என்ற 12வது செய்யுளை எழுதிய மதகுரு ஹென்ஜோவின் மகன்தான் இப்பாடலின் ஆசிரியர். இவர் பேரரசர் செய்வாவின் அரண்மனையில் பணியில் இருந்தபோது தந்தை ஹென்ஜோவின் விருப்பப்படி வேலையைத் துறந்து அவருக்கு அடுத்து மதகுருவானார். பேரரசர் உதா ஆட்சிப்பொறுப்பைத் துறந்து தனது மகன் தாய்கோவை அரசராக்கிய பிறகு கி.பி 898ல் நாடெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினார். அப்போது இவரையும் உடன் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு இடத்திலும் பாடல்கள் புனையுமாறு பணித்தார். காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவரது சிறந்த 63 பாடல்கள் அரச குடும்பத்தினரால் தொகுக்கப்பட்டு இவரது குடும்பத் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பாடுபொருள்: வீணாய்ப்போன காத்திருப்பு பாடலின் பொருள்: இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றாயே? ஆனால் வந்தது என்னவோ அதிகாலை நிலவுதான். முந்தைய பாடலைப் போலவே இதுவும் பிரிவாற்றாமையைக் கூறுவதுதான். நம் சங்க இலக்கியத்தில் ஆண்பாற் புலவர்கள் பலர் தலைவி கூற்று அல்லது தோழி கூற்று எனப் பெண்பால் நோக்கில் பல பாடல்கள் பாடியிருப்பதைக் காணலாம். இதுவும் அத்தகைய பாடல்தான். பாடலில் பால் சுட்டப்படாவிட்டாலும், இப்பாடல் இயற்றப்பட்டபோது நிலவிய சூழலானது தலைவி இருக்கும் இடத்துக்குத் தலைவன் செல்வதாகத்தான் இருந்தது. எனவேதான் "இதோ வருகிறேன் என்று சொன்னாயே?" என ஆண்பாற் புலவர் சொன்னாலும் ஒரு பெண் ஆணை நோக்கிச் சொன்னதாகவே உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள். இப்பாடலில் நகாட்சுகி (長月) என்றொரு சொல் வருகிறது. நீண்ட நேரம் இருக்கும் நிலவு என்று பொருள். நிலவு நீண்ட நேரம் இருந்தால் இரவும் நீண்டது என்று பொருள். ஓர் ஆண்டின் நீண்ட இரவு வருவது செப்டம்பர் மாதத்தில். இலையுதிர்காலம் தொடங்கும் நேரம். ட்சுகி (月) என்ற சொல்லுக்கு மாதம் என்றும் ஒரு பொருளுண்டு. தமிழில் திங்கள் என்பதை நிலவுக்கும் மாதத்துக்கும் பொதுவாகச் சொல்கிறோமே, அதுபோல. நீண்ட நிலவு இருக்கும் இரவு என்றும் நீண்ட மாதம் காத்திருந்தேன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்ளலாம். தலைவன் வருவான் என்று விடிய விடியக் காத்திருந்தால் விடிந்தபின் வந்தது என்னவோ பொழுது புலரும் வேளையிலும் காட்சிதரும் நிலவுதான். இந்தப் பகல் நிலவைக் காணத்தானா நான் காத்திருந்தேன்? வெண்பா: வருவேன் வருவேன் உடனே நிறைவாய்த் தருவேன் தருவேன் இதயம் - துருவம் வரையிலும் காதலே என்றாய் எனினும் முடிவோ விடியல் நிலவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |