![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 164
![]() இதழ் 164 [ மே 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 12: கொண்டல் விலக்காயோ கொண்டலே! மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 天つ風 雲のかよひ路 吹きとぢよ をとめの姿 しばしとどめむ கனா எழுத்துருக்களில் あまつかぜ くものかよひぢ ふきとぢよ をとめのすがた しばしとどめむ ஆசிரியர் குறிப்பு: பெயர்: மதகுரு ஹென்ஜோ காலம்: கி.பி. 816-890. இவரது இயற்பெயர் முனேசதா. காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் என ஜப்பானிய இலக்கிய வரலாற்றில் உள்ள காலத்தால் முற்பட்ட நிஷி ஹொங்கான்ஜி பட்டியல், புலவர் ட்சுராயுக்கி தலைமையில் தொகுக்கப்பட்ட ஜப்பானின் ஆறு பழம்புலவர்களின் பட்டியல் என இரண்டிலும் இடம்பெற்று இருக்கும் வெகுசிலரில் இவரும் ஒருவர். இத்தொகுப்பின் 9வது பாடலை இயற்றிய பெண்பாற் புலவர் கொமாச்சி ஓனோவுடன் இவருக்குக் காதல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் பேரரசர் கன்முவின் கடைசி மகன் யசுயோவின் மகன். யசுயோவின் தாயார் பட்டம் சூட்டப்படாமல் அந்தப்புரத்துத் துணைவியரில் ஒருவராக மட்டுமே இருந்ததால் யசுயோவுக்கு இளவரசுப் பட்டம் மறுக்கப்பட்டு அதிகாரியாக மட்டுமே அரசவையில் பணியாற்றி வந்தார். யசுயோவின் மகன் முனேசதாவும் பேரரசர் நின்ம்யோவின் அவையில் முதல்நிலை அதிகாரியாக அரசருக்கு நெருக்கமாகப் பணியாற்றினார். கி.பி 850ல் நின்ம்யோ இறந்த பிறகு இவரும் அரசுப் பதவியைத் துறந்து புத்தமதத் துறவி ஆனார். அப்போது இவருக்குச் சூட்டப்பட்ட பெயர்தான் ஹென்ஜோ என்பது. தலைநகர் கியோத்தோவுக்குத் தென்கிழக்கில் காங்யோஜி எனும் கோயிலையும் கியோத்தோவுக்கு வடக்கே உரின்யின் எனும் கோயிலையும் கட்டி இரண்டையும் நிர்வகித்து வந்தார். இவரது இறப்பு குறித்த தகவல் ஒன்று செவிவழிக் கதையாக உலாவருகிறது. 40 ஆண்டுகால ஆன்மிக வாழ்வுக்குப் பின்னர் தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்ததாலோ என்னவோ, தான் எப்படி இறக்கவேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதன்படி இவருக்கு உயிருடன் ஒரு கல்லறை கட்டப்பட்டு அதனுள் அவரது வாயிலிருந்து ஒரு குழாய் மட்டும் வெளியே நீண்டுவந்து சுவாசிக்க ஏதுவாக அமைக்கப்பட்டது. பின்னர்ப் பட்டினியாலும் தாகத்தாலும் இறந்தார் என முடிகிறது அக்கதை. பாடுபொருள்: நடனம் இன்னும் கொஞ்ச நேரம் தொடர வேண்டுதல் பாடலின் பொருள்: வானுலகையும் பூவுலகையும் இணைக்கும் மேகக்கூட்டங்களின் வழியே தேவதைகள் பயணம் செய்கிறார்கள். சொர்க்கத்தைக் குளிர்விக்கும் காற்றே, மேகக்கூட்டத்தை ஊதித்தள்ளி அப்பாதையை விலக்குவாயாக! வானிலிருந்து வந்து இங்கு நடமிடும் தேவதையையொத்த இந்த அழகுப்பெண்கள் வானுலகுக்குத் திரும்ப இயலாமல் இன்னும் சற்று நேரம் இங்கேயே எம் கண்களுக்கு விருந்தாகட்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கொசெச்சி என்றொரு நடனம் புகழ்பெற்றிருந்தது. ஒவ்வோர் அரசரும் அரியணை ஏறும் விழாவிலும் ஆண்டுக்கொருமுறை நவம்பர் மாதம் 23ம் தேதியன்று வரும் நீனாமே விழாவிலும் இந்நடனம் ஆடப்பெறும். நீனாமே விழா என்பது அந்த ஆண்டு கிடைத்த அறுவடைக்காக அரசர் ஷிண்டோ மதக் கடவுள்களுக்கு நன்றிகூறி அடுத்த ஆண்டின் அறுவடையும் செழிப்பாக இருக்கவேண்டி வழிபடும் விழா. கொசெச்சி நடனத்தில் 4 அல்லது 5 பெண்கள் கலந்து கொள்வார்கள். அரச குடும்பத்திலிருந்து 2 இளம்பெண்கள், அரசு அதிகாரிகளின் குடும்பங்களிலிருந்து 2 இளம்பெண்கள், எப்போதாவது 5வதாகப் பட்டத்து ராணி ஆகியோர் கலந்து கொள்வதுண்டு. பேரரசர் நின்ம்யோ இறப்பதற்கு முந்தைய ஆண்டு நீனாமே விழாவில் இந்த நடனத்தைக் கண்டுகளித்து அப்பெண்களின் அழகை விதந்தோதி ஹென்ஜோ இயற்றிய பாடல் இது என்பதால் கி.பி 849, நவம்பர் 23 என இப்பாடல் பிறந்த தினத்தைக் கூறலாம். வெறுமனே ஆடல்பெண்டிர் மிகவும் அழகானவர்கள் எனக் கூறாமல் காற்றையும் மேகத்தையும் துணைக்கழைத்துப் பாடலையும் அழகாக்கி இருக்கிறார் ஹென்ஜோ. வெண்பா: வெண்டிரை போர்த்தன்னத் தேவதையர் கீழிறங்கு கொண்டலைச் சற்றே விலக்காயோ - கொண்டலே வான்செல்லாத் தேவியிவர் நல்கு பெருவிருந்தோ கண்ணில் நிறையும் அழகு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) இக்கட்டுரை சொல்வனம் இதழில் 24-ஏப்ரல்-2022 அன்று வெளியானது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |