![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 150
![]() இதழ் 150 [ ஜனவரி 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் அருகே கண்ணணூரி லுள்ள இரண்டு சைவக் கோயில்களில் காலத்தால் முற்பட்டது முக்தீசுவரம்.1 இங்கிருந்து படியெடுக்கப்பெற்ற கல்வெட்டு களுள் சோழப் பேரரசர் மூன்றாம் இராஜராஜரின் 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டே2 காலத்தால் முற்பட்டதென்பதால், இக்கோயில் வளாகம் பொ. கா. 1221க்கு முன்பே கட்டப்பட்டமை தெளிவாகும். தற்போதுள்ள கட்டுமானத்தின் அமைப்பும் இது பிற்சோழர் காலத்ததே என்பதை உறுதிசெய்கிறது. கோபுரம் கிழக்குப் பார்வையாக உள்ள கோபுரத்தின் கீழ்த்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, நான்முக அரைத்தூண்கள் தழுவிய சுவர், தரங்க வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், கூடுவளைவு களுடனான அலங்கரிப்பற்ற கபோதம் கொண்டெழும் கீழ்த் தளத்தின் இருபுறத்தும் படரும் மதில் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய முத்திசைகளிலும் பரவி வளாகத்தைச் சூழ்ந்துள்ளது. கோபுரத்தின் தெற்குத் தாங்குதளத்திலுள்ள கல்வெட்டு, கோபுர வாயிலின் தென்திருநிலைக்காலைக் கண்ணுடையாள் மகள் நம்பி ஆண்டாளான மழைநாட்டு (மழநாட்டு) மாணிக்கம் செய்வித்து இருத்தியதாகக் கூறுகிறது.3 வடநிலைக்காலிலுள்ள கல்வெட்டு சிதைந்துள்ளமையால் அதை உருவாக்கியவர் பெயரை அறியக்கூடவில்லை. கோபுரத்தின் வடபுறத் தாங்குதளத்தில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு, கழயடி மயிலேறும் பெருமாள் என்பார் பெயரைத் தருகிறது. சுற்றுமாளிகை மதிலையொட்டி வளாகத்தின் நாற்புறத்தும் அமைந்துள்ள சுற்றுமாளிகை, துணைத்தளத்தின் மேல் பெருவாஜனம் பெற்று உயர்ந்துள்ளது. அதன் கூரையை முச்சதுர, இருகட்டுத் தூண்கள்,வெட்டுப் போதிகைகளுடன் தாங்குகின்றன. மாளிகையின் தென்கிழக்கிலுள்ள மடைப்பள்ளியின் மேற்குச் சுவரில் காணப்படும் ஹொய்சள அரசர் வீரராமநாதரின் (பொ. கா. 1263-95) சிதைந்த கன்னடக் கல்வெட்டு4 அதை உருவாக்கியவராக பதுமய நாயக்கர் மகன் ஹரிதிய நாயக்கர் பெயரைத் தருகிறது. இப்பகுதியில் மாளிகையை ஒட்டியமைந்துள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் உபானம், கீழும் மேலும் தாமரை வரிகளுடனான கண்டம் ஆகிய உறுப்புகளுடன் பழைமைச் சிறப்பு மிளிர அமைந்துள்ளது. மாளிகையின் தென்பகுதியில் எழுவர் அன்னையர் சிற்பத்தொகுதி அமைய, அங்குள்ள தரைப்பகுதியில் முத்தகன் செட்டியர் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மாளிகையின் வடமேற்கு, வடக்குப் பகுதிகள் சிதைந்துள்ளன. வடகிழக்குப் பகுதியில் சிதைந்த நிலையில் மூன்று திருமுன்கள் காணப்படுகின்றன. மையக்கோயில் சுற்றுமாளிகையால் சூழப்பட்ட இவ்வளாகத்தில் ஒருதளக் கலப்பு வேசர விமானம், முகமண்டபம், பெருமண்டபம், முன் மண்டபம் என முக்தீசுவரர் கோயில் அமைந்துள்ளது. விமானம் துணைஉபானம், உபானம், பாதபந்தத் தாங்குதளம், நான்முக அரைத்தூண்கள் அணைத்த சுவர், வெட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள், மேலோட்டமான கூடுவளைவுகளுடன் விளிம்பு பெற்ற கபோதம், பூமிதேசம் என எழும் விமானத்தின் கீழ்த்தளம் கருங்கல் பணியாய் அமைய, கூரையின் நான்கு மூலைகளிலும் அமர்நிலை நந்திகள். வேசர கிரீவமும் சிகரமும் செங்கல் பணிகள். கிரீவகோட்டங்களில் சிதைந்த நிலையில் நாற்புறத்தும் சுதையுருவங்கள். சட்டத்தலை பெற்ற நான்முக அரைத்தூண்கள் தழுவும் தோரணத் தலைப்பிட்ட விமானச் சுவர்க்கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. தென்கோட்டத்தின் முன் பாதபந்தத் தாங்குதளத்தின் மேல் இருசதுர, நீள்கட்டுத் தூண்கள் இரண்டு தாங்கும் கூரையுடன் முன்றில். மண்டபங்கள் விமானம் ஒத்த கட்டுமானத்துடன் விளங்கும் முகமண்டபத்தின் வட, தென்சுவர்களிலுள்ள சட்டத்தலை நான்முக அரைத்தூண்கள் தழுவிய கோட்டங்கள் வெறுமையாக உள்ளன. கபோதத்திற்கு மேல் உயரக்குறைவான தடுப்புச்சுவர். முகமண்டபத்தின் வடபுறம் சுற்றுவெளியில் செங்கல் கட்டுமானமாய்ச் சண்டேசுவரர் திருமுன். முகமண்டபத்தின் முன் விரியும் பெருமண்டபம் உபானத்தின் மீதான பாதபந்தத் தாங்குதளம் பெற்றுள்ளது. வேதிகைத்தொகுதி அற்ற நிலையில் மண்டபத்தின் சுவரை நான்முக அரைத்தூண்கள் தழுவ, மேலுள்ள வெட்டுப் போதிகைகள் கூரையுறுப்புகள் தாங்குகின்றன. கபோதம் மேலோட்டமான கூடுவளைவுகள் கொள்ள, மண்டபத்தின் தெற்குத் தாங்குதளத்தில் மூன்றாம் ராஜராஜரின் ஆறாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் (பொ. கா. 1221 ஏப்ரல் 14) சுவரில் சடையவர்மர் சுந்தரபாண்டியரின் 12ஆம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற முற்றுப்பெறாக் கல்வெட்டின் தொடக்க வரிகளும்5 பெரிதும் சிதைந்தநிலையில் வீரராமநாதரின் கல்வெட்டும்6 இடம்பெற்றுள்ளன. இம்மண்டபத்தின் இணைப்பாக வடபகுதியில் அம்மன் திருமுன்னும் அதற்கான வாயில் மண்டபத்தின் தெற்கிலும் உள்ளன. தாமரை உபானம், பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி கொண்டெழும் முன்மண்டபம் தெற்கு, கிழக்கு இரு திசைகளிலும் துளைக்கைப் பிடிச்சுவர்ப் படிகளுடன் வாயில் பெற்றுள்ளது. இதற்கும் பெருமண்டபத்திற்கும் இடைப்பட்ட ஒடுக்கம் வடபுறத்தே வாயில் கொண்டுள்ளது. மண்டப வடசுவரில் புதிதாகக் கண்டறியப்பட்ட மூன்று வரித் தமிழ்க் கல்வெட்டு, திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த தாயுமான செட்டியார் பெயரைத் தருகிறது. முன்மண்டபச் சுவரை கொடிக்கருக்கு அலங்கரிப்பும் பாம்புப்படமும் பெற்ற சதுரபாதத்தின் மீதெழும் எண்முக அரைத்தூண்கள் தழுவ, மேலே பூமொட்டுப் போதிகைகள் தாங்கும் கூரையுறுப்புகள். வலபியில் தாமரை வரி. கபோதம் மேலோட்டமான கூடுவளைவுகளுடன். மண்டபச் சுவரின் கிழக்கிலும் தெற்கிலும் வாயிலின் இருபுறத்தும் தோரணத்துடன் கோட்டப் பஞ்சரங்கள். வடக்கில் வாயிலின்மையின் அச்சுவரில் மூன்று கோட்டப் பஞ்சரங்கள் உள்ளன. சட்டத்தலை எண்முக அரைத்தூண்கள் தழுவும் இப்பஞ்சரங்களின் கூரையுறுப்புகளாகத் தூண்களின் வீரகண்டத்தின் மேலமர்ந்த உத்திரம், வாஜனம், தாமரை வலபி அமைய, மேலே தோரணம். தோரணத்தின் கீழ்ப்பகுதியில் கிழக்கில் தென்புறம் பிள்ளையாரும் வடபுறம் அமர்நிலையில் வணங்கும் பூதமும் அமைய, வடக்கில் ஆண், பெண் அடியவர்கள். தெற்கில் வணங்கும் பூதங்கள். மண்டபங்களின் உட்புறம் பாம்புப்படமும் தாமரைவரியும் பெற்ற நிலைக்கால்களுடன் முன்மண்டபக் கிழக்கு வாயில் அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக இருவரிசைகளில் அமைந்த ஆறு முச்சதுர இருகட்டுத் தூண்கள் பெருமொட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்கும் இம்மண்டபத்தின் தென், வடசுவர்களில் அதே கட்டமைப்பில் பக்கத்திற்கு மூன்று அரைத்தூண்கள். வடகிழக்கு மூலையில் ஒன்பான் கோள்களுக்கான மேடை. முன்மண்டபத்திலிருந்து பெருமண்டபத்திற்கு வழிவிடும் வாயிலின் நிலைக்கால்களும் பாம்புப்படம், தாமரைவரி பெற்றுள்ளன. கிழக்கு மேற்காக இருவரிசைகளில் அமைந்த ஆறு முச்சதுர இருகட்டுத் தூண்கள் தரங்க வெட்டுப் போதிகைகளுடன் கூரையுறுப்புகள் தாங்கும் பெருமண்டபத்தின் வடபகுதியில் அம்மன் திருமுன்னும் அதன் முன் நந்தி, பலித்தளமும் அமைய, மண்டபத்தின் மேற்கிலும் இறைவன் கருவறையை நோக்கியவாறு பலித்தளமும் நந்தியும் உள்ளன. பெருமண்டபத்தின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள முகமண்டப வாயில் பெருமண்டப வாயிலொத்துப் பாம்புப் படமும் தாமரைவரியும் கொண்டுள்ளது. மண்டப வாயிலின் தெற்கில் லிங்கத்திருமேனியும் பிள்ளையாரும் வடக்கில் முருகனும் காட்சிதர, மண்டபம் வெறுமையாக உள்ளது. முகமண்டப மேற்குச் சுவரிலுள்ள கருவறை வாயில் வெறுமையாக உள்ளது. கருவறையில் சதுரஆவுடையாரின் மேல் லிங்கபாணத்துடன் முக்தீசுவரர் எழுந்தருளியுள்ளார். அம்மன் திருமுன் ஒருதளக் கலப்பு வேசரமாக எழும் அம்மன் திருமுன் உறுப்புவேறுபாடற்ற தாங்குதளமும் அரைத்தூண்களோ, கோட்டங்களோ அற்ற சுவரும் கூரையுறுப்புகளும் கொண்டுள்ளது. உயரமான கிரீவமும் சிகரமும் செங்கல் கட்டுமானமாக அமைய, கிரீவகோட்டங்களில் அம்மனின் சிதைந்த சுதைவடிவங்கள். கருவறையில் கரண்டமகுடத்துடன் சமபாதத்திலுள்ள கனகாம்பிகை அம்மனின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்பிலிருக்க, பின்கைகளில் தாமரை மொட்டுகள். எழுவர்அன்னையர் தொகுதி திருச்சுற்று மாளிகையின் தென்பகுதியிலுள்ள எழுவர் அன்னையர் தொகுதி ஒரே கற்பலகையில் நான்முகி தொடங்கி சாமுண்டி ஈறாக வடிவமைக்கப்பெற்ற நிலையில் வழிபாட்டில் உள்ளது. ஏழு அன்னையரும் சுகாசனத்தில் வல முன் கையைக் காக்கும் குறிப்பிலிருத்தி, இட முன் கையை மடியில் வைத்துள்ளனர். பின்கைகளில் நான்முகி அக்கமாலை, குண்டிகை கொள்ள, மகேசுவரி மழு, மான் ஏந்தியுள்ளார். இருவருக்கும் சடைமகுடம். கரண்டமகுடத்துடனுள்ள பிற அன்னையரில் இந்திராணியும் கௌமாரியும் வஜ்ரம், சக்தி கொள்ள, வராகி கலப்பையும் சிறுதடியும் கொண்டுள்ளார். வைணவியின் கைகளில் சங்கு, சக்கரம். சுடர்முடியுடன் சற்றே வலச்சாய்வில் காட்சிதரும் சாமுண்டியின் வலச்செவியில் பிணக்குண்டலம். பின்கைகளில் முத்தலைஈட்டி, உடுக்கை. சாமுண்டி தவிர்த்த பிற அன்னையர் குண்டலங்களும் கழுத்தணியும் இடைப்பட்டாடையும் மார்புக்கச்சும் பெற்றுள்ளனர். சாமுண்டிக்குச் சிற்றாடை. முருகன், பிள்ளையார் பெருமண்டபத்தில் மயில்மீது சுகாசனத்திலுள்ள முருகனின் முன்கைகள் காக்கும், அருட்குறிப்பிலிருக்க, பின்கைகளில் சக்தியும் அடையாளப்படுத்த முடியாத கருவியும் உள்ளன. கரண்டமகுடம், கழுத்தணிகள், பட்டாடை பெற்றுள்ள இறைவனின் இருபுறத்தும் தாமரையில் சமபாதத்தில் ஒரு கையை நெகிழ்த்தி, ஒரு கையில் மலரேந்திய வள்ளி, தெய்வானை. கரண்டமகுடத்துடன் சிற்றாடை அணிந்து லலிதாசனத் திலுள்ள இடம்புரிப் பிள்ளையாரின் பின்கைகளில் அங்குசம், பாசம். வல முன் கை உடைந்த தந்தம் கொள்ள, இட முன் கை மோதகத்தைத் துளைக்கை சுவைக்கிறது. கல்வெட்டுகள் இக்கோயில் வளாகத்திலிருந்து 1909இல் 3 கல்வெட்டுகளும் 1936 - 37இல் 2 கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டுள்ளன. 1909இல் படியெடுக்கப்பட்ட 3 கல்வெட்டுகளின் பாடங்களில் இரண்டு, தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 26இல் இடம்பெற்றுள்ளன. கன்னடக் கல்வெட்டின் பாடம் தென் னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 9இல் பதிவாகியுள்ளது. 1936-37இல் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் பாடங்களைப் படித்தறியும் முயற்சியின்போது புதிதாக 3 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவ்வெட்டுக் கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்ட மூன்றாம் ராஜராஜ சோழரின் 6ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு பொ. கா. 1221 ஏப்ரல் 14ஆம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. கோயில் இறைவனை கழுகிறை நாயனார் என்றழைக்கும் இக்கல்வெட்டு, கோயில் இருக்கும் பகுதியை வடகரை ராஜராஜ வளநாட்டுப் பாச்சில் கூற்றத்துக் கீழ்பலாற்று மாகாணிக்குடி எனச் சுட்டுகிறது. முக்தீசுவரருக்குத் திருமுழுக்காட்டக் காவிரியிலிருந்து நீர் கொணரவும் முழுக்காட்டிய பின் இறைவன் திருமந்திர போனகம், திருஅமுது, கறியமுது கொள்ளவும் ஹொய்சள அரசரான வீரசோமீசுவரரின் சிறுப்பிள்ளைகளில் (?அரசு அலுவலர்கள்) ஒருவரான நெற்றிக்கண் மாதயன் இறைவன் திருநாமத்துக்காணி நிலத்தில் இரு போகம் விளையும் ஒரு பகுதியை நாட்டவர் மூலம் இறையிலியாக்கி அளித்தார். பொ. கா. 1263இல் அரியணையேறிய ஹொய்சள அரசர் வீரராமநாததேவரின் சிதைந்த கல்வெட்டு இக்கோயிலில் நிகழ்ந்த ஆவணித் திருநாள் குறித்தும் அதற்களிக்கப்பெற்ற நிலம் பற்றியும் பேசுகிறது. சுந்தர பாண்டியரின் கல்வெட்டு ஆட்சியாண்டுடன் நிற்பதால் அதிலிருந்து செய்திகள் ஏதும் பெறக்கூடவில்லை. கோயிலுக்கு வெளியிலிருந்த ஏரிக்கரை மண்டபச் சுவரிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டு, தீக்ஷிதப்பய்யன் சமூகமான ரங்கப்பய்யன் கொடையாக அம்மண்டபத்தைப் பாளேலசூரப்பர் மாறமாவின் மகன் கொல்ல சூரப்பா கட்டியதாகக் கூறுகிறது. 7 புதிய கல்வெட்டுகள் இவ்வளாகத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட 18 அல்லது 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தனவாகக் கொள்ளத்தக்க மூன்று கல்வெட்டுகளும் குறிப்பிடும் பெருமக்கள் இக்கோயில் கட்டுமானத்திற்குத் திருப்பணியின்போது உதவியவர்களாகலாம். அடிக்குறிப்பு |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |