![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 120
![]() இதழ் 120 [ ஜுன் 2015 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
சென்னை சித்தூர் சாலையில் இராணிப்பேட்டைக்கு அருகாமையில் ‘நீவா’ நதிக்கரையில் பாடல் பெற்ற திருத்தலமாகிய திருவல்லம் அமைந்துள்ளது. தொண்டை நாட்டில் பாடல்பெற்ற 10வது திருத்தலமாக இது விளங்குகிறது. சென்னையிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவிலும் வேலூரிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.
![]() திருவல்லம் திருத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் வில்வநாதீசுவரர் என்றும் இறைவி வல்லாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். ஞானசம்மந்தப் பெருமான் இத்தலத்தை ‘வேதங்கள் வேறு வேறு தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே!’ என்று பாடுவதைத் திருமுறைகளில் காணலாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகப்பெருமானை ‘திருவலமேவும் பெருமாளே!’ என்று விளிக்கிறார். திருவல்லம் கோயிலின் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக அங்கு 30ம் மேற்பட்ட கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ‘தீக்காலி வல்லம்’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவ்வூர்க் கோயில் வழிபாட்டிற்குப் பல்லவ மன்னர்கள், கங்க மன்ன ன் பிருதிவீபதி, பாண அரசர்கள் ஆகியோரின் காலம் முதல் சோழ மன்னர்களான முதலாம் இராஜராஜர், முதலாம் இராஜேந்திரர், முதலாம் குலோத்துங்கர், மூன்றாம் குலோத்துங்கர், மூன்றாம் இராஜராஜர், பாண்டிய மன்னர் வீரபாண்டியன் மற்றும் விஜயகண்ட கோபாலன் முதலான மன்னர்களின் காலம் வரை பல்வேறு தானங்கள் அளிக்கப்பட்டுள்ளமையை கல்வெட்டுக்களின் வழி அறியமுடிகிறது (ARE 300, 301, 302, 303 304 of 1897). ![]() ![]() கம்பராஜபுரம் எனப்படும் விக்கிரமாதித்ய சதுர்வேதி மங்கலம் திருவல்லம் கோயிலுக்குத் தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் கம்பராஜபுரம் என்றழைக்கப்படும் ஊர்ப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலின் வாயிலில் உள்ள அரசமரத்தின் கீழ் காணப்படும் பலகைக்கல்லில் பொறிக்கப்பட்ட துண்டுக் கல்வெட்டில் ‘விக்கிரமாதித்த சதுர்வேதி மங்கலம்’ எனும் ஊர்ப்பகுதியின் பெயர் காணப்படுகிறது. திருவல்லம் திருக்கோயிலின் கல்வெட்டொன்றில் (ARE 1a of 1890& SII Vol III No.43) பாண அரசன் முதலாம் விக்கிரமாதித்யனின் வேண்டுகோளின்படி பல்லவ-கங்க அரசரான கோ விஜய நந்தி விக்கிரமவர்மன் எனும் அரசர் தமது பதினேழாம் ஆட்சியாண்டில் திருவல்லத்தின் அருகாமையில் அமைந்திருந்த மூன்று ஊர்களை இணைத்து அப்பகுதியில் ’விடேல் விடுகு- விக்கிரமாதித்ய சதுர்வேதி மங்கலம்’ என்கிற சதுர்வேதி மங்கலத்தை உருவாக்கியமையை அறியமுடிகிறது. அரசரின் ஆணையை ஏற்று இதனைச் செய்து முடித்தவர் விடேல் விடுகு காடுவெட்டித் தமிழ்ப்பேரரையன் ஆவார். திருக்கோயில்களில் திருப்பதியம் பாடுதல் பற்றிக் கிடைக்கும் கல்வெட்டுக்களுள் இதுவே தொன்மையானது என்று கல்வெட்டிலாகாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே கம்பராஜபுரம் ஊர்ப்பகுதி முற்காலத்தில் விக்கிரமாதித்ய சதுர்வேதி மங்கலம் எனும் அந்தணர் குடியிருப்பின் ஒரு பகுதியாக அமைந்திருந்திருக்கலாம் என்பதனை ஊகிக்க முடிகிறது. காலப்போக்கில் ஊரின் பெயர் ‘கங்கராஜபுரமாக’ மாறி தற்போது கம்பராஜபுரமாக மருவியிருக்கலாம். ![]() பனந்தோப்பு சிதலமடைந்த திருக்கோயில் கம்பராஜபுரம் பகுதியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள பனந்தோப்பு என்கிற பகுதியில் விளை நிலங்களுக்கு நடுவே சிதலமடைந்த சிவன் கோயிலொன்று பூமியில் புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. இக்கோயிலை ஊர்மக்கள் கறுப்புக் கோயில் என்றழைக்கின்றனர். இக்கோயிலின் கற்கள் கருமை நிறத்துடன் அமைந்துள்ளனவாகையால் இப்பெயர் காரணப் பெயராக அமைந்திருக்கலாம். ![]() இத்திருக்கோயிலின் தெற்குப் பகுதியில் ஒரு வாயிலும் கிழக்குப் பகுதியில் மற்றொரு வாயிலும் அமைந்துள்ளன. கோயில் விமானத்தில் பல்வேறு மரங்கள் வளர்ந்துள்ளனவால் ஆதிதளத்திற்கு மேல் உள்ள அனைத்து கட்டுமானங்களுமே சிதைந்து விட்டன. மரங்களின் வேர்கள் திருக்கோயிலின் கட்டிடப் பகுதிக்குள் ஊடுருவியிருப்பதால் கட்டுமானப் பகுதிகள் நாற்புறங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. கருவறையில் லிங்கம் முதலான திருவுருவங்களைக் காணமுடியவில்லை. விமானத்திற்கு முன் அமைந்துள்ள மண்டபமும் கணிசமான சிதைவிற்கு ஆளாகியுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் உருளை வடிவில் தரங்கப் போதிகைக் கரங்களுடன் அமைந்துள்ளன. விமான ஆதிதளத்தின் சுவர் மற்றும் மண்டபச் சுவர்கள் கோட்டங்களுக்கான அகழ்வுகள் அமைக்கப்படாமல் அரைத்தூண்களால் பகுக்கப்பட்டுள்ளன. ஒரு அரைத்தூணின் மாலைத்தொங்கலில் அடியவர் ஒருவர் லிங்கத்தை வழிபடும் காட்சி காணப்படுகிறது. ![]() அரைத்தூண்களின் மேல் காணப்படும் மூன்று மகர தோரணங்கள் நுண்மையாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றில் அக்னி லிங்கத்தை வழிபடும் காட்சி காணப்படுகிறது. இந்த உருவம் அக்னியினுடையது என்பதைக் காட்டும் வகையில் சுடர்முடி செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகரதோரணங்களுள் இது கீர்த்திமுக மகரதோரணம் எனும் வகையினைச் சார்ந்ததாக உள்ளது. ![]() மற்றொரு மகரதோரணத்தில் இருபுறங்களிலும் நின்று இசைமுழங்கும் கலைஞர்களுக்கு நடுவே நடனமிடும் பெண்ணின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. ![]() கோயிலுக்கு வெளியே உடைந்த நிலையில் தட்ஷிணாமூர்த்தி, நந்திதேவர் முதலானோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டே இத்திருக்கோயில் சிவபெருமான் திருக்கோயில் என்பதனைஅறியமுடிகிறது. ![]() இக்கோயிலுக்கு விக்கிரம சோழன் (கி.பி. 1118 - 1135) தனது ஐந்தாம் மற்றும் ஆறாம் ஆட்சியாண்டில் நிலத்தானம் வழங்கியமையைக் குறிப்பிடும் இரண்டு கல்வெட்டுக்கள் 1898ம் ஆண்டில் மத்திய கல்வெட்டுத்துறையால் படியெடுக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு ஆண்டறிக்கையால் அறியமுடிகிறது (149, 150 - 1898). திருக்கோயிலின் தென்சுவற்றில் அமைந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடும் இக்கல்வெட்டுக்கள் தற்போது உடைந்து கீழே சிதறிக் கிடக்கின்றன. இவை இக்கோயிலின் காலத்தை பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குக் கொண்டு செல்கின்றன. ![]() கோயிலைச் சுற்றிலும் மண் மேடு காணப்படுவதால் கோயிற் பகுதியில் வேறு தொன்மையான கல்வெட்டுக்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பதனைக் கண்டறிய இயலவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோயிலை மத்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையோ மாநிலத் தொல்லியல் துறையோ முயற்சியெடுத்து சீரமைத்தல் காலத்தின் அவசியம். நன்றி 1. இத்திருக்கோயில் பற்றித் தகவலளித்த கம்பராஜபுரம் திரு எஸ். தினேஷ் 2. பெருமாள் கோயில் கல்வெட்டுத் தகவல் - திரு.கே.குமார் 3. ஆய்வில் பங்குகொண்ட வாலாஜா ப. வெங்கடேசன் குறிப்புக்கள் 1. Inscriptions of the Madras Presidency - V.Rangacharya - Vol I. Page 74 (ARE 149 and 150 of 1898) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |