![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 82
![]() இதழ் 82 [ அக்டோபர் 16 - நவம்பர் 17, 2011 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
(சென்ற இதழ்த் தொடர்ச்சி....) இனிச் செப்பேட்டில் சொல்லப்பட்ட ஊர்களின் தற்போதைய நிலையைப் பார்ப்போம். 1. மேல்நாகக்குடி கழுக்காணி முட்டத்திலிருந்து வடக்கே சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது இவ்வூர். தற்போது இவ்விடம் பெருநாகக்குடி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இங்கு பிராமணர் குடியிருக்கும் அக்ரஹாரமும் ஏனையோர் குடியிருக்கும் பகுதியும் உள்ளன. இங்குள்ள கைலாசநாதர் கோயிலும், கோதண்டராமர் கோயிலும் இந்த அக்ரஹாரத்தில் குடியிருக்கும் ஓர் அந்தணரால் பராமரிக்கப்படுகின்றன. 2. கீழ்நாகக்குடி பெருநாகக்குடியிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் தெற்கில் இருக்கும் இப்பகுதி சிறுநாகக்குடி என்ற பெயரில் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதி மயிலாடுதுறை சிதம்பரம் சாலையை ஒட்டி உள்ளது. ஆனால் கீழ்நாகக்குடி என்பது மேல்நாகக்குடி என்ற பகுதியின் கிழக்கே இருந்திருக்கவேண்டும். தற்போது இவ்விடம் வயல்வெளிகளாக உள்ளன. 3. தத்தமங்கலம் கழுக்காணி முட்டத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் ஆணதாண்டவபுரம் என்ற கிராமம் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் கஞ்சாறு. இவ்வூர் மாணக்கஞ்சாற நாயனார் அவதரித்த தலமாகும். மேலும் திருநாவுக்கரசரின் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் (6-70-8) வைப்புத் தலமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்பேட்டில் குறிப்பிட்டுள்ள தத்தமங்கலம் என்ற கிராமம் தற்போது தட்டமங்கலம் என்ற பெயரில் இவ்வூரின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதி மேல்நாகக்குடிக்கு அருகில் உள்ளது. ஆணதாண்டவபுரத்தில் அக்ரஹாரமும், ஆனந்ததாண்டவரேஸ்வரர் என்ற பிற்சோழர் காலக் கோயில் ஒன்றும் உள்ளன. 4. பஞ்சவன் நல்லூர் பஞ்சவன் நல்லூர் என்ற பெயரில் தற்போது கிராமம் ஏதும் இல்லை. ஆனால் அருகருகே நல்லூர் என்று முடிவடையும் ராதாநல்லூர், கீழ்மராந்தநல்லூர், மேல்மராந்தநல்லூர், பொன்மாசநல்லூர், மேலானநல்லூர் என்ற பெயரில் சிறுசிறு கிராமங்களாக 5 கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. கீழ்மராந்தநல்லூரிலும் மேல்மராந்தநல்லூரிலும் உள்ள சிவன் கோயில்கள் அழிந்துள்ளன. மேல்மராந்தநல்லூரில் கோயில் கட்டிடம் அழிந்து சிவலிங்கமும், அம்மன் சிலையும் வெட்டவெளியில் நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் சிவலிங்கத்திற்கு அருகில் உலோகத்திலான நடராஜர் சிலை ஒன்று கிடைத்துள்ளதாக இங்குள்ளோர் தெரிவிக்கின்றனர். அக்ரஹாரமும், அந்தணர் குடியிருப்பு இன்றி ஏனையோர் குடியிருக்கும் இடமாக மாறியுள்ளது. 5. கரம்பக்குடி இவ்வூர் கடுவங்குடி என்ற பெயரில் நீடூரிலிருந்து சுமார் 1/2 கி.மீ தொலைவில் சிறுகிராமமாய் உள்ளது. இதன் உட்பிரிவாக உள்ள அருவாய்ப்பாடி என்ற பகுதியில் கைலாசநாதர் என்ற சிவன் கோயில் உள்ளது. 6. கொற்றநல்லூர் இவ்வூர் கொற்றவநல்லூர் என்ற பெயரில் நீடூர் கிராமத்தின் உட்கிராமமாக ஆனதாண்டவபுரத்திற்கு வடமேற்கே சுமார் 1/2 கி.மீ தொலைவில் உள்ளது. இவ்வூரில் முதுமக்கள் தாழி கிடைத்ததிலிருந்து இவ்வூரின் தொன்மையை அறியலாம். இவ்வூரினை ஒட்டி சிவன் கோயில் ஒன்று முற்றிலும் அழிந்து தற்போது நந்தி மட்டும் காணுமாறு நிலையில் உள்ளது. செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெரியங்குடி, கூத்தனூர் என்ற கிராமங்களைப் பற்றித் தற்போது அறிய இயலவில்லை. இக்கிராமங்கள் வேறு பெயருடன் கழுக்காணி முட்டத்திற்கு அருகே அமைந்திருக்கலாம். தற்போது கண்டறியப்பட்டுள்ள 6 கிராமங்களும் அருகருகே சுமார் 1/2 கி.மீ தொலைவுடன் சிறுசிறு கிராமங்களாக அமைந்துள்ளன. இக்கிராமங்கள் அமைந்திருக்கும் இடத்தைப் பார்த்தால் கழுக்காணி முட்டம் கிராமத்திலிருந்து வடமேற்குவரை ஒரு வளைவாக (Curve) அமைந்துள்ளன. சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னர் பிராமணர்கள் குடியிருக்கும் சதுர்வேதி மங்கலமாக மாற்றப்பட்ட இவ்வூர்கள் இன்று அவற்றின் எச்சங்கள் அறியும் நிலையில்தான் உள்ளன. மேலும் இச்செப்பேடுகள் புதிய வரலாற்றுத் தகவல்களையும் தெரிவிக்கின்றன. சோழ சாம்ராஜ்யத்திற்கு அஸ்திவாரம் இட்ட கி.பி 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜயாலய சோழன் தஞ்சை நகரத்தை முத்தரையரிடமிருந்து கைப்பற்றியதாக இதுவரை சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இச்செப்பேடுகள் இவன் தஞ்சையைப் பல்லவ மன்னன் கம்ப வர்மனிடமிருந்து கைப்பற்றியதாகச் சொல்கிறது. இது ஆராயத்தக்க செய்தியாகும். கழுக்காணி முட்டத்திலிருந்து கிடைத்திருக்கும் சிலைகளும் பூஜைப்பொருட்களும் கி.பி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவைகள் மண்ணிற்குள் ஏன் புதைந்திருந்தன என்று வினா எழுப்பினால் கீழ்க்கண்டவைகள்தான் விடையாக முடியும். 1. பெரும் கோயில்கள் ஒவ்வொன்றிற்கும் நிலவறை இருக்கும். இந்நிலவறையில் கோயில் சிலைகள் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருக்கலாம். 2. கி.பி 13ம் நூற்றாண்டில் சோழநாட்டுச் சிற்றரசுகள் சோழ மைய அரசிடம் வைத்திருந்த கட்டுப்பாடு தளர்வடையத் தொடங்கியது. இத்தளர்வு சிற்றரசர்களுக்கிடையே பூசல்கள் ஏற்படக் காரணமாயின. இதனால் கோயில்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள கோயில்கள் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டதை இங்குள்ள சில கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கொள்ளைகளிலிருந்து கோயில் சிலைகளை மீட்க மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருக்கலாம். அதனுடன் இச்செப்பேடுகளும் சேர்ந்து புதைக்கப்பட்டிருக்கலாம். 3. கி.பி 1310ல் வட இந்தியாவிலிருந்து வந்த முஹம்மதியப் படைகள் தமிழ்நாட்டுக் கோயில்களை எல்லாம் கொள்ளையடித்தது. இக்கொள்ளையிலிருந்து இக்கலைச் செல்வங்களை மீட்க மண்ணிற்குள் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம். பாதுகாப்பிற்காக மறைத்து வைக்கப்பட்ட சிலைகள் தற்போது வெளிப்பட்டு இக்கோயிலின் வரலாற்றைத் தெரிவிப்பதுடன் அதைச்சுற்றியுள்ள கிராமங்களின் வரலாற்றையும் தெரிவித்து அதற்கு ஆதாரமான செப்பேட்டையும் வெளிப்படுத்தி அதை வெளியிட்ட செருவென்ற சோழர்களின் சமுதாய உணர்வையும், வீர உணர்வையும் வெளிப்படுத்துவதுடன் 950 ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழகத்தை ஆண்ட சோழர்களின் பொற்காலத்தையும் நம்முன் காட்சியளிக்க வைக்கின்றன. (முற்றும்) this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |