![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 75
![]() இதழ் 75 [ செப்டம்பர் 16 - அக்டோபர் 15, 2010 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
ஆய்வரங்கங்கள் நடந்த நான்கு நாட்களும் கொடிசியா வளாகமே கல்யாணவீடு போலத்தான் இருந்தது. ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து வசதிகள் பெருகியிராத காலத்தில் கிராமங்களில் சற்று வசதியான வீட்டுக் கல்யாணம் என்றால், ஒரு வாரத்துக்கு ஊரே களை கட்டியிருக்கும். உறவினர்களும் நண்பர்களும் நான்கைந்து நாட்கள் கல்யாண வீட்டில் தங்கிக்கொள்வார்கள். அதுவும் குழந்தைகளுக்கு விடுமுறைக் காலமான மே மாதம் என்றால் கல்யாண வீடே 'ஜல் ஜல் ஹை ஹை' என்று இருக்கும். வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைத்துவிடும். குடும்பம் மற்றும் உறவினர்களைப் பற்றிய அரட்டை, சீட்டாட்டம், கல்யாண வீட்டு அலங்காரங்களைப் பார்வையிடுதல் போன்ற அரிய பணிகளைச் சிரமேற்கொண்டு பொழுதைப் போக்குவார்கள். கொடிசியா வளாகத்திலும் கிட்டத்தட்ட இப்படித்தான் இருந்தது.
காலை விடுதியில் சிற்றுண்டி தயாரானவுடன் ஒரு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் வந்து உணவகத்துக்கு அழைத்துச் செல்வார். அதை முடித்து வெளியே வந்தால், குளிரூட்டப்பட்ட பேருந்து புறப்படத் தயாராக இருக்கும். அறிஞர்கள் அனைவரும் நேற்றைய பொழுது எவ்வாறு கழிந்தது என்பது பற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்வார்கள். கொடிசியாவை அடைந்ததும் தொல்காப்பியர் அரங்கில் நடைபெறும் தமிழ் அல்லது வரலாற்று அறிஞர்களின் சிறப்புச் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு, ஆய்வரங்கங்களுக்குச் சென்று அங்கு தயாராக இருக்கும் பிஸ்கட் மற்றும் சூடான/குளிர்ச்சியான பானங்களைப் பருகிவிட்டுத் தத்தம் விருப்பத்துக்கேற்றவாறு அரங்கைத் தேர்ந்தெடுத்துச் சென்று கட்டுரைகளை வாசிக்கக் கேட்டு வருவார்கள். அவ்வாறு விருப்பத்துக்கேற்ற கட்டுரை ஏதும் அச்சமயம் இல்லாவிடில் அங்கிருக்கும் சாய்விருக்கைகளில் இருக்கும் மற்ற அறிஞர்களுடன் அறிமுகம் செய்துகொண்டு உரையாடுவார்கள். மதியம் உணவு இடைவேளையின்போது உணவகத்தில் தயாராகக் காத்திருக்கும் சைவ/அசைவ உணவுகளை ஒருபிடி பிடித்துவிட்டு மீண்டும் ஆய்வரங்கங்களுக்குத் திரும்புவார்கள். முடிந்தவுடன் பேருந்தில் ஏறி விடுதியை அடைந்து அதே விடுதியில் தங்கியிருக்கும் மற்ற அறிஞர்களுடன் சற்று நேரம் அளவளாவி விட்டு உறங்கச் சென்று விடுவார்கள். மீண்டும் அடுத்தநாள் காலை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் வந்து அழைத்துச் செல்வார். எட்டையபுரம் மன்னரின் நண்பராகப் பணியாற்ற பாரதிக்குச் சொல்லப்பட்ட விதிமுறைகள் போலில்லை? ஐந்து நாட்களும் தமிழைத் தவிர வேறெதையும் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய நாங்கள் இருக்கிறோம் என்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுக்கள் போட்டிபோட்டுக்கொண்டு சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தன. இதனால் பொது அரங்கத்தின் பக்கம் செல்ல அறிஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படவே இல்லை. பிறகு நண்பர்களிடம் விசாரித்தபோது, பொது அரங்கில் தமிழைப் பற்றிப் பேசப்பட்டதைவிடக் கலைஞரைப் புகழ்ந்ததுதான் அதிகம் என்று கூறினார்கள். மாநாடு நடந்த விதத்தைப் பார்க்கும்போது அதில் வியப்பேதும் இல்லை என்றுதான் தோன்றியது. இவ்வளவு பிரம்மாண்டமான ஒரு மாநாட்டில் லட்சக்கணக்கானோர் அமரும் அரங்கில் தினந்தோறும் எத்தனையோ பேச்சாளர்கள் பேசும்போது எல்லோரும் பேராசிரியர் சுப.வீரபாண்டியனைப் போலத் தமக்கு அளிக்கப்பட்ட தலைப்பை ஒட்டி மட்டுமே பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். அவரவர் நோக்கங்களும் கலந்துதான் இருக்கும். அதற்காக மேடையைப் பயன்படுத்திக் கொள்பவர்களும் இருப்பார்கள். நண்பர்களிடம் இவ்வாறு கேள்விப்பட்டபோது, பல ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் அவர்கள் எங்கள் ஊரில் பேசியதுதான் நினைவுக்கு வந்தது. ஈரோட்டில் வாசவி கல்லூரியில் மாணவர் மன்றக் கூட்டம் ஒன்றிற்குக் கலைஞரை அழைத்திருந்தார்கள். அங்கு ஒரு மாணவர் கவிமாலை ஒன்றைப் புனைய, கலைஞர் பேசும்போது கீழ்க்கண்டவாறு கூறினார். இங்கே தம்பி ஜெகதீஷ்குமார் கவிமாலை என்ற பெயரால் ஒரு புதுக்கவிதையைப் புகழாரமாக எனக்குச் சூட்டினார். அவர் அந்தக் கவிதையை இங்கே படித்தபோது நான் குறுக்கிட்டு எதுவும் தடுக்காத காரணத்தால் எல்லாவற்றையும் அப்படியே ஒப்புக்கொண்டேன் என்று பொருளல்ல. தமிழுக்கே நான் தமிழ் கற்றுக்கொடுக்கிறேன் என்று சொன்னது மிகைப்படுத்தி என்னைப் புகழ்வதற்காக, பெரிதும் புகழ்வதற்காகச் சொல்லப்பட்டது. என் மீது அவர் கொண்டுள்ள பற்றின் காரணமாக, பாசத்தின் காரணமாக, அன்பின் காரணமாக, ஆசையின் காரணமாக எடுத்துக் கூறப்பட்ட ஒரு கருத்தாக நான் ஏற்றுக் கொள்கிறேனேயல்லாமல், அதற்கு நான் சொந்தக்காரன்தான், உண்மைதான், தமிழுக்கே நான் தமிழ் கற்றுக்கொடுத்தவன் என்று கூறுகிற அளவுக்கு நான் தமிழ்த்தாய் அல்ல. நான் தமிழ்த்தாயின் கோடிக்கணக்கான புதல்வர்களிலே ஒருவன். அந்தத் தமிழ்த்தாய்க்கு எந்த ஊனமும் ஏற்படக்கூடாது என்பதற்காகப் போர்க்களத்திலே நின்ற, நின்று கொண்டிருக்கிற, எதிர்காலத்திலும் நிற்கப்போகிற தொண்டர்களிலே ஒருவன் நான். இந்த அடக்கத்தை வெறும் அவையடக்கமாக மாத்திரமல்லாமல் உண்மையாகவே உங்கள் முன்னால் எடுத்து வைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். ஆய்வரங்கங்களில் பொது அரங்கம்போல் இல்லை. இருப்பினும் முகஞ்சுளிக்க வைக்கும் ஓரிரு நிகழ்வுகள் நடந்தன. கட்டடக்கலை தொடர்பான ஸ்தபதி வே.இராமன் அவர்களின் பொழிவிற்கு அவரது ஆசிரியர் திரு. கணபதி ஸ்தபதி தலைமை தாங்கினார். ஓர் அமர்விற்குத் தலைமை தாங்குபவர் அவ்வமர்வில் எந்தெந்த அறிஞர்கள் பேசப்போகிறார்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்புகள் என்ன, அவர்களை அறிமுகப்படுத்தும்போது கூறவேண்டிய தகவல்கள் என்ன என்பன போன்ற தகவல்களைச் சேகரித்து விட்டுத்தான் அரங்கிற்கு வரவேண்டும். அவ்வாறு சேகரிக்க முடியாத நிலையில், அமர்வு தொடங்கும் முன்னராவது அவர்களைப் பற்றிய தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இவை எவற்றிலும் திரு. கணபதி ஸ்தபதி அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அறிஞர்களைப் பேச அழைப்பது, அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளைப் பேராசிரியர் இராசு. பவுன்துரை அவர்களைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டார். பிறகு அமர்வுத் தலைவருக்கு என்ன வேலை என்கிறீர்களா? அதுதான் எங்களுக்கும் தெரியவில்லை. அவ்வமர்வில் இருந்தவர்களுக்கெல்லாம் அமர்வுத் தலைவருக்கும் கலைஞருக்கும் உள்ள நெருக்கத்தைப் பற்றி எடுத்துரைப்பது என்றுதான் நினைக்கத் தோன்றியிருக்கும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரது பூம்புகார் கலைக்கூடப்பணி, கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை அமைக்கும் பணி ஆகியவற்றில் கலைஞர் வலியுறுத்திய மாற்றங்கள் போன்றவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். இதையெல்லாம் பேசுவதற்கு ஆய்வரங்கம்தானா இடம் என்பதுபோல் அவற்றைப் பார்வையாளர்கள் எந்தவித வரவேற்பும் இன்றிக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இதில் எல்லோரையும் கோபப்படவைத்தது, திரு. இராமன் அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, 'நீங்கள் சொல்லும் பிரஸ்தரம், பஞ்சரம் போன்ற கலைச்சொற்கள் எல்லாம் எதிரே அமர்ந்திருப்பவர்களுக்குப் புரியாது. இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்' என்று இராமன் அவர்களை நிறுத்தச் சொன்னார். அவரும் தம் ஆசிரியரின் சொல்லுக்கு மரியாதை அளித்து அத்துடன் தன் உரையை முடித்துக்கொண்டார். பின்னர் தன் சுயபுராணத்தைத் தொடர ஆரம்பித்தார். 27 அரங்கங்களில் பல்வேறு தலைப்பிலான கட்டுரைகள் வாசித்தளிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது, ஒரு பார்வையாளர் தனக்கு விருப்பமான அமர்வாகக் கட்டடக்கலை தொடர்பான பொழிவைத் தேர்ந்தெடுக்கிறார் என்றால், அதில் ஈடுபாடு கொண்டிருப்பதால்தானே? ஸ்தபதிகளும் தொல்லியல் அறிஞர்களும் கட்டடக்கலை தொடர்பான ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்கப் போகிறார்கள், அதில் கலைச்சொற்களும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிந்துதானே வந்திருப்பார்கள்? இப்படியிருக்க, யாருக்கும் ஒன்றும் புரியாது என்றால், அவர்களையெல்லாம் முட்டாளாக்குவது போல் ஆகாதா? எல்லா அறிஞர்களும் கட்டுரை வாசித்து முடித்தபிறகு ஒருவேளை நேரமிருந்து இதுபோல் புகழ்ந்திருந்தால் யாரும் அதை விமர்சித்திருக்க மாட்டார்கள். ஓர் அறிஞரைப் பாதியில் நிறுத்தச் சொல்லிவிட்டு இதுபோல் பேசுவது முறையல்ல. அவ்வறிஞரின் கட்டுரையைக் கேட்கலாம் என வந்திருந்தவர்களை ஏமாற்றியது போலிருந்தது. தெரியாதவர்களுக்கு அவை என்னவென்று விளக்கிக் கூறவும் திரு. இராமன் அவர்கள் தயாராகவே இருந்தார். பொது அரங்கத்தில் திரு. லியாகத் அலிகான் அவர்கள் இதுபோல் பேசிக்கொண்டிருந்தபோது, 'என்னைப் புகழ்ந்தது போதும், தலைப்புக்கு வாருங்கள்' என்று கண்டித்த கலைஞருக்குக்கூட கணபதி ஸ்தபதியின் இச்செய்கையில் உடன்பாடு இருந்திருக்காது. எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக எங்கள் குழுவினர் அனைவரும் வெளிநடப்புச் செய்தோம். சில ஆண்டுகளுக்கு முன்பு கல்கி இதழுக்கு இவர் எனக்கு இந்தியா வேண்டாம் என்று பேட்டியளித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதில் அவர் கூறியிருந்ததை வாசகர்களுக்காகக் கீழே தருகிறோம். 1. 'இந்தத் தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிஞ்சுக்கணும்னு துளி ஆர்வமாவது இருக்கா?' 2. 'அற்புதமா பல விஷயங்களைச் செய்ய வேண்டிய இளைய தலைமுறை நம்மோட கலாசாரத்தை, பெருமையை, பாரம்பரியத்தை உதாசீனப்படுத்தறது வேதனையா இருக்கு.' 3. 'ஒவ்வொரு சிற்பத்துக்குப் பின்னாலும், ஒவ்வொரு கட்டடத்துக்குப் பின்னாலும் ஆச்சரியமான, அதிசயமான, அற்புதமான கணக்குகள் இருக்கு. ஸ்தபதிகளான எங்களுக்குப் பல நூற்றாண்டுக்காலப் பாரம்பரியம் இருக்கு. ஆனால், இதையெல்லாம் தெரிஞ்சுக்க இன்னிக்கு யாராவது ஆர்வம் காட்டறாங்களா?' 4. 'இலக்கியம் சிற்பக்கலைக்காக எதுவும் செய்யலை.' 5. 'ஒரு சினிமா நடிகருக்கும் நடிகைக்கும் கொடுக்கிற முக்கியத்துவத்துல நூற்றில் ஒரு பங்கு கூட இந்தக் கலையைப் புரிஞ்சுக்கிறதுக்குக் கொடுக்க மாட்டேங்கறாங்க.' இப்படியெல்லாம் புலம்பியவர், ஆர்வத்துடன் கட்டடக்கலை தொடர்பான பொழிவை நாடிவரும் ஆர்வலர்களை எப்படி மதித்திருக்கிறார் பார்த்தீர்களா? பிறகு எப்படி இளைய தலைமுறைக்குச் சிற்பக்கலையைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று துளி ஆர்வமாவது வரும்? இயல்பாகவே ஒரு சினிமா நடிகருக்கும் நடிகைக்கும்தானே முக்கியத்துவம் தருவார்கள்? கட்டுரையை முடிக்கும் முன்னர் தவறாமல் பாராட்டப்பட வேண்டியவர்கள் மூன்று துறையினர். முதலாவது பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் கோவையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கல்லூரிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள். விடுதியில் அறிஞர்களுக்கு உதவியவர்கள், அவிநாசி சாலையில் போக்குவரத்தைச் சீர்படுத்த உதவியவர்கள், கொடிசியா வளாகத்தில் உணவுக்கூடத்திலும் ஆய்வரங்கங்களிலும் அறிஞர்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கியும் வசதிகளைச் செய்து கொடுத்தும் உதவிய மாணவர்கள் என அனைவரையும் மனமாரப் பாராட்டலாம். எந்த ஆய்வரங்கம் எங்கே இருக்கிறது என்ற விசாரிப்பு முதல் ஆய்வுக்கட்டுரையைப் படியெடுத்துத் தருதல் மற்றும் பவர்பாயிண்ட் கோப்பை மடிக்கணினியில் ஏற்றித் தருதல் என அனைத்துவிதமான உதவிகளையும் சிறிதுகூட முகம் சுளிக்காமல் செய்துகொடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. பொதுவாக இந்நாளைய கல்லூரி மாணவர்கள் பொழுதுபோக்கு விரும்பிகள், தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பவர்கள், சமூக அக்கறை இல்லாதவர்கள் என்ற கருத்தை உடைத்தெறிந்ததற்காக ஒரு பெரிய சபாஷ். இரண்டாவது துப்புரவுத் தொழிலாளர்கள். கட்டுமானம் மற்றும் தச்சு வேலைகள் முடிந்தவுடன் அரங்கத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் கட்டத்திலிருந்து ஐந்தாவது நாள் நிறைவுவிழா முடிந்து கொடிசியா வளாகத்தைத் திரும்ப ஒப்படைக்கும்வரை இவர்களின் பணி மகத்தானது. தொடர்ச்சியான சுத்தப்படுத்துதல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு, வெளிநாட்டினரிடையே நாம் சுகாதாரத்தைப் பேண விரும்புபவர்கள் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. நிறைவுவிழா முடிந்து திரும்புகையில் நாகப்பட்டினம் இராமச்சந்திரன் இம்மூன்று துறையினரையும் பாராட்டியபோது, அனைவரும் அகமகிழ்ந்து போனார்கள். எங்களையும் ஒரு பொருட்டாக மதித்துப் பாராட்டுகிறீர்களே, மிக்க நன்றி. இதுவரை எங்களை யாரும் இப்படிப் பாராட்டியதில்லை என்றார்கள். அனைவருடனும் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபோது கலங்கிப் போனார்கள். அடுத்துக் காவல்துறையினர். மாநாடு தொடங்குவதற்குச் சில வாரங்களுக்கு முன்பே இவர்களுக்கு அறிஞர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்த பயிற்சிகள் தொடங்கிவிட்டனவாம். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசியது அங்கு வந்திருந்தவர்களுக்கு வியப்பாக இருந்தது. அடடா! தமிழ்நாட்டுக் காவலர்கள் எப்போதும் இப்படியே இருந்தால் காவல்துறை - பொதுமக்கள் உறவு நிச்சயம் மேம்படும் என்பது மாநாட்டுக்கு வந்திருந்த பலரது கருத்தாக இருந்தது. ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். நானும் நண்பர் இராமச்சந்திரனும் நிறைவு விழாவின்போது பொது அரங்கத்தில் அமர இடம் தேடியபோது எந்த இருக்கையும் காலியாக xஇல்லை. இரண்டு நாற்காலிகளை ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டு அதன்மேல் தடியை இரு காவலர்கள் வைத்திருந்தனர். தடியை எடுத்துவிட்டு அவற்றை எங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டோம். 'அவை நாங்கள் அமருவதற்காக வைத்திருக்கும் இருக்கைகள்' என்றார் ஒரு காவலர். நின்றுகொண்டு காவல்பணியைச் செய்வதுதானே உங்கள் கடமை என்று கேட்டதற்கு, 'எங்களுக்கும் கால் வலிக்காதா? எவ்வளவு நேரம்தான் நின்றுகொண்டே இருப்பது?' என்றார். இப்படியே உரையாடல் நீண்டதும் அக்காவலர் சற்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தார். அவரது குரல் சற்று உயர்ந்ததுமே, அருகிலிருந்த காவலர் ஓடிவந்து அவரை எச்சரித்தார். 'விருந்தினர்கள் என்னதான் கோபமாகப் பேசினாலும் நாம் திரும்பக் கோபப்படக்கூடாது. அமைதியாக இருப்போம்' என்றார். எங்களுக்கு ஆச்சரியம் தாளவில்லை. சாதாரண நாளாக இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று யோசிக்கும்போது வியப்பாக இருந்தது. அருமையான பயிற்சி. பிறகு பொது அரங்கத்துக்கு வெளியிலிருந்த பெருந்திரை ஒன்றில் நிறைவுவிழா நிகழ்வுகளைக் கண்டுகளித்தோம். தமிழை வளர்க்கும் பல்வேறு ஆணைகளை முதல்வர் பிறப்பித்தபோது, இவை அனைத்தும் அரசாணைகளாக மாற்றப்பட்டு நிறைவேறுவது எந்நாளோ என்று சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனால் மாநாட்டு நினைவுகள் மறைவதற்குள்ளேயே ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதுகண்டு பேருவகை கொள்கிறோம். இம்மாநாட்டால் என்ன பயன் என்று ஒரு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், பெருமழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பதுபோல, ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாலும், இன்னும் ஆங்கிலத்திடமிருந்து விடுதலைபெறத் தமிழ் தவிக்கும் இவ்வேளையில் இதுபோன்ற மாநாடுகள் அவசியம் என்றுதான் தோன்றுகிறது. அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டைப் பற்றி எழுத்துச்சித்தர் பாலகுமாரன் அவர்கள் கூறியதை இங்குக் குறிப்பிடுவது பொருத்தம் என்று நினைக்கிறேன். தான் எழுத்துத் துறைக்கு வந்தது பற்றிய தனது 'முன்கதைச் சுருக்கம்' நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி குழப்பகேஸ், அயர்ன் ராண்ட் அடாவடி என்றும் உங்களுக்குச் சொல்லப்படலாம். ஆராய்ந்து தெளிவது உங்கள் பொறுப்பு. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஆங்கில இலக்கியமும் என் பாதையை முற்றிலும் மாற்றினார்கள் என்பது உண்மை. ஆல்டக்ஸ் ஹக்ஸிலியைப் படித்தேன். ஹியர் அண்ட் நௌ பாய்ஸ்.. ஹியர் அண்ட் நௌ.. முடிவு செய். இப்போதே இங்கேயே... இடதா வலதா உடனே முடிவு செய். செய்த முடிவுக்கு வருந்தாதே, வெறும் யோசனைக் குட்டையாக இருக்காதே என்பதும் பிடித்தது. இதெல்லாம் தமிழில் இல்லையா? எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. இப்படித் தமிழில் ஏகத்துக்கு இருக்கிறது. ஆனால் பேச்சுத் தமிழுக்கும் செய்யுளுக்கும் பெரும் இடைவெளி இருந்தது. எளிமைப்படுத்த எவருக்கும் தெரியவில்லை. எடுத்து எல்லோருக்கும் வழங்க எவருக்கும் துணிவில்லை. என் இளமைக்காலம் தமிழில் பேசுவது, இழுக்கு என்கிற காலம். எனக்குத் தமிழ் தெரியாது. ஜோக்ஸ் மட்டும் ஆனந்த விகடன்ல படிப்பேன் என்கிற சூழல். டியர் பிரதர், நமஸ்காரம்ஸ், ஹவ் ஈஸ் மதர், ஹவ் ஈஸ் அட் ஹோம் என்று ஆங்கிலக் கடிதமே அதிகம் புழங்கிற்று. கடித முடிவில் வேணும் ஆசீர்வாதம் என்பது கூட ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டது. இந்தப் பொய்நிலை உதிரும் காலம் பின்னால் வந்தது. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடக்க, இதைப் பத்திரிகைகள் அதிகம் பாராட்ட, திராவிட இயக்கம் தனித்தமிழ் இயல்பு அதிகம் பேச, மேடைப்பேச்சுக்களில் மக்கள் ஆர்வம் அதிகரிக்க, திரைப்படங்களில் பேச்சு அழகும் கருத்துள்ள பாடல்களும் அதிகம் வர... தமிழ் பேசுவது இழுக்கு அல்ல என்கிற நிலைமை வெகு சுலபமாய் வெளிவந்தது. இந்தத் திராவிட இயக்கத் தன்மைக்கு வெகு நிச்சயமாய் இன்றைய எழுத்தாளர்கள் நன்றி சொல்ல வேண்டும். மந்திரி போய் அமைச்சரானது மிகப்பெரிய கலாச்சார மாற்றம். இலவசக் கல்வி கொடுத்த கர்மவீரர் காமராசரும், எல்லோரும் படிக்கும்படி செய்தித்தாள் வாசகங்களை எளிமையாக்கிய தினத்தந்தி ஆதித்தனாரும் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள். காங்கிரஸ் என்பது வேறு பாஷை, வேறு இனம், வேறு கலாச்சாரம்... திராவிடம் என்பது வேறு மொழி, வேறு இனம், வேறு கலாச்சாரம் என்கிற பிரமை மக்களுக்குள் வேகமாகப் பரவியது. இந்த மாறுதலில் நன்மை, தீமை இப்போது ஆராய முடியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் தாண்ட வேண்டும். என் கண்ணுக்குத் தெரிந்த நாளாய் தமிழ் வளர்க்கப்பட்டதும் பலப்பட்டதும், தமிழுக்கு மதிப்புக் கிடைத்ததும் என்பது நிச்சயம். பார்த்தீர்களா? பாலகுமாரன் அவர்களின் இளமைக் காலத்திலேயே தமிழில் பேசுவது இழுக்கு, தமிழ்த் தெரியாது என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். இன்று நிலைமை அதைவிட மோசமடைந்திருக்கிறது. அந்நாளைய நிலைமையை இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு ஓரளவுக்கு மாற்றியதுபோல், இன்றைய நிலையையும் இச்செம்மொழி மாநாடு காக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். நன்றி. this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |