![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 168
![]() இதழ் 168 [ ஃபிப்ரவரி 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 29: வெண்பனியா வெண்மலரா? மூலப்பாடம்: கான்ஜி எழுத்துருக்களில் 心あてに 折らばや折らむ 初霜の おきまどはせる 白菊の花 கனா எழுத்துருக்களில் こころあてに をらばやをらむ はつしもの おきまどはせる しらぎくのはな ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் மிட்சுனே காலம்: கி.பி 859-925. அரச குடும்பத்தைச் சாராதவர் இவர். தற்போதைய இசுமி, அவாஜி போன்ற மாகாணங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்டவர். ஆளுநர் பதவி முடிந்து தலைநகர் கியோத்தோவுக்குத் திரும்பியபோது ஜப்பானிய இலக்கியங்களைத் தொகுக்கும் பொறுப்பு தரப்பட்டு கொக்கின்ஷூ தொகுப்பை உருவாக்கினார். புலவர் ட்சுராயுக்கியுடனும் நெருக்கமாக இருந்தார். காலத்தால் அழியாத 36 கவிஞர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். ஜப்பானிய இலக்கியத்துக்கு இவரது பங்களிப்பாக 193 பாடல்களை இயற்றியிருக்கிறார். இதில் பெரும்பாலானவை இயற்கை வர்ணனைகளே. பாடுபொருள்: குளிர்காலத்தின் முதல்பனியின் அழகு பாடலின் பொருள்: குளிர்காலத்தின் முதல்பனி பொழிந்த அன்று விடிந்ததும் வெண்சாமந்திப்பூ எது, அதைப் போர்த்தியிருக்கும் வெண்பனி எது எனக் குழம்பினேன். இத்தொடரில் வெண்தோகை, வெண்மையான ஃபுஜி மலை, வெண்பனி ஆகியவற்றின் வரிசையில் இப்போது வெண்சாமந்திப்பூ. இரவெல்லாம் வெண்பனி பொழிந்துள்ளது. காலையில் கண்விழித்துச் சாளரத்தின்வழி பார்த்தால் வெண்கம்பளத்தை விரித்து வைத்தாற்போல் பனி எங்கும் படர்ந்திருந்தது. வெண்சாமந்திப்பூச் செடியின் மீதும் படர்ந்திருந்ததால் எது பூவின் இதழ், எது உறைபனி எனப் பிரித்தறிய முடியவில்லை. ஒருவேளை இதழ்களை மடித்துப் பார்த்தால் வேண்டுமானால் கண்டறியலாம். படிப்பதற்கு மிக எளிய பாடலாக இருந்தாலும் இயற்றப்பட்ட அக்காலத்தில் வெகுவாக விதந்தோதப்பட்டிருக்கிறது. இருப்பினும் இப்பாடல் தொகுப்பை உருவாக்கிய மன்னர் சதாய்யேவுக்கு வெண்மைநிறம் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்பாடலையும் சேர்த்துவிட்டார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். கி.பி 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹைக்குக் கவிஞர் மசாஒக்கா ஷிகி என்பவர் இப்பாடலை விமர்சனம் செய்யும் விதமாக ஒரு பாடலை இயற்றினார். வெண்பனிக்கும் வெண்சாமந்திப்பூவின் இதழுக்கும் உள்ள வேறுபாட்டைக் காண்பது அத்தனை கடினமானதல்ல. அத்தனை கற்பனை தேவையில்லை என்று பொருள்படும்படி எழுதியிருந்தார். இருப்பினும் பிற கருத்தாளர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஷிகியே அதீத கற்பனைகளை அவரது கவிதைகளில் பயன்படுத்தியவர்தானே? மிட்சுனே கற்பனை செய்தால் மட்டும் என்ன தவறு என்று வாதிட்டார்கள். ஒரு பாடலில் காதல் தோல்வியால் எல்லோரும் தன் உடை முழுவதும் நனையும் அளவுக்கு இரவு முழுவதும் அழுகிறார்கள் என்று எழுதியவர்தான் ஷிகி. வெண்பா: முதல்பனி சிந்தும் இரவின் முடிவில் இதயம் குளிர்ந்து களித்து - விதந்தும் பிரிக்க வியலாத் தரையாய் மலரை மறைக்கும் பனியின் பொழிவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |