![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 168
![]() இதழ் 168 [ ஃபிப்ரவரி 2023 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
விளக்குகள் வீரராஜேந்திரரின் மூன்றாம் ஆட்சியாண்டில் (பொ. கா. 1066) கருக்கங்குடி வாழ் செம்பியன் முழையூர்நாட்டு மூவேந்த வேளான், கோயில் தேவகன்மிகளான ஆச்சன் முன்னூற்றுவன், ஆச்சன் நமச்சிவாயம், ஆச்சன் சேந்தபட்டன், ஆச்சன் சுவாதித்தன் ஆகிய நால்வரிடமும் 32 பசுக்களை ஒப்படைத்து, அவ்வாண்டு ஆடித்திங்கள் முதல் நிலவும் கதிரும் உள்ளவரை கோயிலில் நந்தாவிளக்கு ஏற்றச் செய்தார். முதல் ராஜராஜரின் 5ஆம் ஆட்சியாண்டில் பட்டனக்கூற்றத்து நாகபட்டனத்து பட்டனங்கிழான் கருவூர்க் கண்டழி என்பார் ஏழரை நாழிகைப் பொழுது கோயிலில் ஒளிருமாறு சந்திவிளக்கொன்று ஏற்றக் கோயில் சிவபிராமணர் சுப்பிரமண்ணியன் மாதவபட்டனிடம் ஒன்றரை கழஞ்சுப் பொன்னளிக்க, அதன் வட்டியால் விளக்கேற்ற பட்டன் ஒப்பினார். முதல் ராஜராஜரின் 15ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, திருமங்கலத்து சபை நிலத்தொகுதிகள் சிலவற்றின் மீதான வரிகளை உரிய காப்புத்தொகை பெற்று நீக்கிய வரலாற்றை முன்வைக்கிறது. மங்கலத்துக் கோயிலில் நந்தாவிளக்கேற்றவும் சங்கிராந்திகள், விஷுக்களின்போது இறைவனுக்கு நூற்றெட்டுக் குடநீரால் திருமுழுக்காட்டு நிகழ்த்தவும் சோழ அரசியார் செம்பியன்மாதேவியாரால் தரப்பட்ட ஏழரைமா நிலத்தைக் கல்வெட்டு, 'செம்பியன் மாதேவி வசக்கல்' என்று குறிக்கிறது. திருமங்கலத்து நாகன் சுவாமி உள்ளிட்டாரிடமிருந்து, எண்முழக் கோலால் 100 குழி கொண்டது ஒரு மாவாக, அம்மை 12 கழஞ்சுப் பொன்னளித்துப் பெற்ற இந்நிலத்தின் எல்லைகளாக மகேந்திரமங்கலத்தும் திருமங்கலத்து எல்லைக்கும் நடுவே வடக்கு நோக்கிப் போன இட்டேறி, சுடுகாடு, வடக்குநோக்கிப் போன பெருவழி ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. நிலத்தின் மீதான இறை, எச்சோறு, வாசலில் போந்த குடிமை, ஊரிடு வரிப்பாடு உள்ளிட்ட வரியினங்களை நீக்க அம்மையிடம் சபை பெற்ற தொகை 30 கழஞ்சுப் பொன். செம்பியன் மாதேவியைச் சுட்டுகையில் இக்கல்வெட்டு, 'பெருமானடிகள் ஸ்ரீஉத்தமசோழ தேவர் தங்கள் ஆச்சியார் பிராந்தகன் மாதேவடிகளாரான செம்பியன் மாதேவியார்' என்று பெருமைப்படுத்துகிறது. இது போலவே கோயில் நிலங்கள் சிலவும் சபையால் இறையிலியாக்கப்பட்டன. அதற்கான காப்புத்தொகையாக சபை, கோயிலுக்குச் செலுத்தவேண்டியிருந்த 33 கழஞ்சுப் பொன் அமைந்தது. இறைநீக்கம் செய்யப்பட்ட நிலத்தொகுதிகளுள் ஒன்று 4 வேலி விளைநிலமாக, இதில் இறைவனுக்கு உரிமையுடையதாயிருந்த 3மா 3காணி நிலத்துண்டும் குடிமக்களிடம் கோயில் விலைக்குப் பெற்றிருந்த நிலத்துண்டுகள், குளம் உள்ளிட்ட மூன்றே முக்கால் வேலி ஒரு மா ஒரு காணியும் அடங்கும். இறைநில எல்லைகளாகச் சுடுகாட்டினின்று வடக்கே போன பெருவழி, வாசுதேவ விண்ணகர் நிலம், சில தனியர் நிலங்கள் அமைந்தன. இது தவிர, இறைவனுக்குரிய அரைவேலி அளவினவான புன்செய் நிலத்துண்டுகள் சிலவும் இறைநீக்கம் செய்யப்பட்டன. ஒரு துண்டு 484 அரைக் குழி கொண்டது. அதன் மேற்கெல்லையாக மகேந்திரமங்கலத்துக்கும் திருமங்கலத்துக்கும் நடுவிலிருந்த இட்டேறி குறிக்கப்படுகிறது. மற்றொரு துண்டு 145 குழியாக வெள்ளிப் பனங்காட்டின் வடவாயான கண்ணனேரி ஒட்டி அமைந்தது. இன்னொன்று, மங்கலம் கோயிலின் மேற்கே 301 குழி 8 மா அரைக்காணியாக, பறைச்சேரியின் மேற்கில் நாற்றங்கால் குழியாக இருந்த 30 குழி நிலம் பிறிதொரு துண்டானது. இந்நிலத்தொகுதிகளில் இறை, 'முப்பத்திரண்டொன்றும் பதினாறொன்றும் எட்டொன்றுமாக' இறுக்கப்படுமென ஆவணத்தில் சபை தெரிவித்துள்ளது. தாம் பெற்ற 63 கழஞ்சுப் பொன்னின் வட்டி கொண்டி இவ்வரியினங்கள் ஆண்டுதோறும் செலுத்தப்படும் என்பதையும் சபையார் அறிவித்தனர். நீர்ப்பாசனம் நிலங்கள் விளையும் தன்மைக்கேற்ப நன்செய், புன்செய் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. விளைச்சலுக்கான பாசனவசதிகள் ஆற்றிலிருந்து வாய்க்கால்கள், குளங்கள் வழியும் கிடைத்தன. கல்வெட்டுகளில் குறிக்கப்படும் ராஜேந்திரப் பேராறு கொள்ளிடத்தைக் குறிப்பதாகலாம். கண்ணன் வாய், உலகுவாய், வடவாய் எனச் சுட்டப்படுவன ஆற்றிலிருந்து பிரியும் வாய்க்கால்களின் தலைமதகுகளாகும். துர்ஹ்யாயண வாய்க்கால், மதுராந்தக வாய்க்கால், உத்தமசோழ வாய்க்கால், திருநாராயண வாய்க்கால், கண்ணாற்று வாய்க்கால் ஆகிய நீர்வழிகள் திருமங்கலம், அதைச் சுற்றியிருந்த ஊர் நிலங்களை வளப்படுத்தின. திருமங்கலவதி, வாமனவதி முதலியன நீர்வடி கால்களாக இருந்தன. பண்படுத்தப்பட்ட நிலங்கள் மசக்கல், வயக்கல் எனப்பட்டன. திருச்சிற்றம்பல மசக்கல், திருப்பள்ளி மயக்கல், சண்டேசுவரன் மயக்கல், செம்பியன் மாதேவி வசக்கல் முதலியன மங்கலம் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. திருமஞ்சண ஒழுக்கை, பிடாரிகோயில் ஒழுக்கை என்பன முழுக்காட்டு நீரெடுக்கப் பயன்பாட்டிலிருந்த வழியையும் பிடாரிகோயிலுக்கான வழியையும் குறித்தன. இட்டேரி என்ற சொல் குறுகலான காட்டுவழியைக் குறித்தது. நிலத்துண்டுகள் எண்முழக்கோலால் அளக்கப்பட்டன. 100 குழி ஒருமாவாக அமைந்தது. பல்வேறு முகத்தல், நிறுத்தல், நீட்டல் அளவைகள் பயன்பாட்டிலிருந்தன. திருமங்கலத்தில் திருஅயோத்தி ஆழ்வார் கோயில், வாசுதேவ விண்ணகர் எனும் இரு விஷ்ணு கோயில்கள் சோழர் காலத்தில் இருந்துள்ளன. பொ. கா. 1566இல் இக்கோயில் இறைவனுக்குத் தொண்டை மண்டலத்துத் தாடகபுரத்து விசுவநாத கிருஷ்ணப்ப நாயக்கர் நிலக்கொடை அளித்துள்ளார். சிறப்புச் செய்திகள் சுற்றுமாளிகையின் வடமேற்கு உத்திரத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டு இக்கோயில் இளையபிள்ளையார் (ஆறுமுகன்) திருமுன்னைத் திருப்பணி செய்தவராகத் திருவிடைமருதைச் சேர்ந்த வணிகர் தாழைக்குடையான் உய்யவந்தான் ஆண்டப்பிள்ளையாரைச்சுட்டுகிறது. பெருமண்டபத் தெற்குச் சுவரிலுள்ள புதிய கல்வெட்டும் காஞ்சிரபுரம் ஆதியாண்டி திருப்பணிக்கு உதவியமை சுட்டுகிறது. திருச்சுற்றின் கிழக்குத் தரையில் கண்டறியப்பட்ட புதிய கல்வெட்டு திருமங்கலம் திருமழுவுடைய நாயனார்க்குத் திருநாள் நடத்த கட்டணய்ய நாயக்கர் வென்றான் தோப்பைக் கொடையளித்தமை சுட்டுகிறது. இரண்டாம் கோபுர வடக்குச் சுவரிலுள்ள சிதைந்த கல்வெட்டு பொ. கா. 1532இல் திருமங்கலத்து உடையார் திருமழுவுடைய நாயனார் கோயிலுக்குத் தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்து கூத்தப்பெருமாளான நாயக்கர் அளித்த கொடை சுட்டுகிறது. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |