![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 163
![]() இதழ் 163 [ மார்ச் 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 10: பிறத்தலே இறத்தலின் முதல்படி மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் これやこの 行くも帰るも 別れては 知るも知らぬも あふ坂の関 கனா எழுத்துருக்களில் これやこの ゆくもかへるも わかれては しるもしらぬも あふさかのせき ஆசிரியர் குறிப்பு: பெயர்: புலவர் செமிமரு காலம்: கி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதி. அரச குடும்பத்தில் பிறந்த இவர் பிறவியிலேயே கண்பார்வையை இழந்தவர். முற்பிறவியில் செய்த தீவினைகளால்தான் இப்பிறவியில் கண்பார்வை கிட்டவில்லை என்று எண்ணி அரச வாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டவர். கி.பி. 888 முதல் 897 வரை கியோத்தோவை ஆண்ட பேரரசர் உதாவின் மகன் அல்லது கி.பி. 897 முதல் 930 வரை ஆண்ட பேரரசர் தாய்கோவின் மகன் என்று இருவேறு கருதுகோள்கள் நிலவுகின்றன. அரண்மனை வாழ்வு மறுக்கப்பட்டதால் பிவா ஏரியின் கரையின் அருகே மலைமீதிருந்த ஒரு குடிலில் தனித்து வாழ்ந்துவந்தார். தற்போதைய தலைநகர் தோக்கியோவிலிருந்து ஓஸகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கியோத்தோவுக்குச் சற்று முன்னால் செமிமரு கோயில் என்ற ஒன்று உண்டு. இதுதான் அவர் வாழ்ந்துவந்த இடம் எனக் கருதப்படுகிறது. இவரது குடில் இருந்த இடத்துக்கு அருகில் சுங்கச்சாவடி போன்ற எல்லைக்காவல் நிலையம் ஒன்று இருந்தது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது அகற்றப்பட்டுவிட்டது. தற்போதைய கியோத்தோ மாகாணத்தையும் ஷிகா மாகாணத்தையும் இணைக்கும் இடம் அது. தலைநகர் கியோத்தோவை விட்டு வெளியேறுபவர்களும் உள்ளே வருபவர்களும் அதைக் கடக்கவேண்டும். ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் இருந்ததால் அந்த இடம் சந்திப்புச் சரிவு என்ற பொருளில் அழைக்கப்பட்டது. இது ஜப்பானைக் கிழக்கு மேற்காகப் பிரிக்கும் புள்ளி எனவும் கூறலாம். இந்த இடம் உணர்த்தும் ஒரு வாழ்க்கைத் தத்துவத்தைப் பாடலாக்கி இருக்கிறார். அதுதான் இப்பாடல். எப்போதும் வெவ்வேறு மனிதர்களால் கடக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த எல்லைக்காவல் நிலையம் வாழ்க்கையின் மாறுதல்களைச் சுட்டுகிறது என்பது இப்பாடலின் மறைபொருள். பாடுபொருள்: வாழ்க்கையின் நிலையாமைத் தத்துவம் பாடலின் பொருள்: இந்த இடம் சந்திப்புச் சரிவு எனச் சரியாக அழைக்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கே செல்பவர்களும் கியோத்தோவிலுள்ள தமது இல்லத்துக்குத் திரும்பி வருபவர்களும் சந்திக்கும் மலைச்சரிவு. அதுமட்டுமல்ல; தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் சந்திக்கும் புள்ளியும் ஆகும். சந்தித்துப் பிரிந்தவர்களும் முன்பு பிரிந்து இப்போது சந்திப்பவர்களும் நிறைந்த இடமும் இதுவே. ஜப்பானியப் பவுத்தத்தின் ஜென் பிரிவில் எஷாஜோரி என்றொரு தத்துவம் உண்டு. சந்திப்பு என்பதே பிரிவதற்காகத்தான் என்பதே இதன் பொருள். உலகின் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு. அந்த முடிவு அந்நிகழ்வு தொடங்கும்போதே உறுதிப்பட்டுவிடுகிறது. அதாவது, ஒரு நிகழ்வு தொடங்குவதே அந்நிகழ்வு முடிவுபெறுவதன் தொடக்கப்புள்ளி. பிறத்தலே இறத்தலின் முதல்படி. சந்தித்தலே பிரிதலின் முதல்படி என்பன போல. எல்லா மொழி இலக்கியங்களும் நிலையாமையைப் பற்றிப் பேசி இருக்கின்றன. நம் தொல்காப்பியம் இதை மன்னாமை எனக் குறிக்கிறது. மன்னா உலகத்து மன்னுதல் என்று குமணனைப் பற்றி (புறநானூறு: 465) அவன் தம்பியிடம் பெருந்தலைச் சாத்தனாரும் நெருநல் உளனொருவன் இன்றில்லை எனத் துறவறவியலில் (குறள் எண்: 336) வள்ளுவரும் இதுபற்றிப் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. பிறக்கின்றபோதே இறக்கின்ற தேதி இருக்கின்றதென்பது மெய்தானே? எனும் கவிப்பேரரசின் வைரவரிகள் இந்த எஷாஜோரியிலிருந்து வந்ததா எனத் தெரியவில்லை. வெண்பா: பிரிதலும் மன்னுதல் அன்றே உலகில் பிரிந்தபின் சேர்தலும் மீண்டும் - பிரிதலின் பாற்பட் டெனவே அறிந்தோர் உரையால் விளங்கும் நிலையற்ற வாழ்வு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |