![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 162
![]() இதழ் 162 [ ஃபிப்ரவரி 2022 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
பாடல் 7: அன்று வந்ததும் இதே நிலா மூலப்பாடம்: காஞ்சி எழுத்துருக்களில் 天の原 ふりさけ見れば 春日なる 三笠の山に 出でし月かも கனா எழுத்துருக்களில் あまのはら ふりさけみれば かすがなる みかさのやまに いでしつきかも ஆசிரியர் குறிப்பு: பெயர்: கவிஞர் நக்காமரோ காலம்: கி.பி 698-770. இளவரசர் ஷோதொக்கு காலத்தில் சீனாவுடன் கலாச்சார உறவு ஏற்படுத்தப்பட்டுப் 10ம் நூற்றாண்டு வரை இரு நாடுகளுக்கிடையில் பல தூதுக்குழுக்கள் பரிமாறப்பட்டு வந்தன. பேரரசர் ஷோமுவின் காலத்தில் கி.பி 717ல் கல்வியாளர்கள் நிரம்பிய ஒரு குழு சீனாவுக்கு அனுப்பப்பட்டது. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய அபேனோ நக்காமரோ என்பவரும் அக்குழுவில் இடம்பெற்றார். தனது 19வது வயதில் சீனாவுக்குச் சென்றவர் தனது திறமையால் கி.பி 725ல் அரசாங்கத்தின் உயரிய பொறுப்பு ஒன்றில் நியமிக்கப்பட்டார். சீனப் பேரரசர் ஷூன்சங் மனதில் நீங்கா இடமும் பெற்றார். எட்டையபுர அரசருக்கு பாரதியைப்போல் எப்போதும் தன்னருகிலேயே இருக்கும்படி செய்திருந்தமையால் ஜப்பானுக்குத் திரும்ப முடியாமலேயே இருந்தார். ஆனால் நக்காமரோவுக்கோ தான் பிறந்த நாட்டைக் காணவேண்டும் என்ற ஆவல் அதிகரித்த வண்ணமே இருந்தது. ஒருவழியாக 30 ஆண்டுகள் கழித்து ஜப்பானுக்குத் திரும்ப வாய்ப்பமைந்தது. அப்போது அவருக்கு நடந்த பிரிவுபசார விழாவில்தான் இப்பாடலைப் பாடினார். இப்போது இருப்பதைப் போன்ற போக்குவரத்து வசதிகள் அந்நாளில் இல்லையாதலால் கடற்பயணம் மிகுந்த பொருட்செலவு மிக்கதாகவும் சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இயற்கையாகவே ஜப்பான் கடலானது மிகுந்த சீற்றங்களையும் கணிக்கக் கடினமான வானிலையையும் உடையது. தொழில்நுட்பம் மிகுந்த இந்நாட்களிலேயே சிலநேரங்களில் வானிலையைக் கணிக்கத் தடுமாறுகிறார்கள். ஒருவகையில் எதிரி நாடுகளின் படையெடுப்புகளிலிருந்து இது ஜப்பானைப் பாதுகாத்தது என்றே ஜப்பானிய வரலாறு கூறுகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவிலிருந்து கிளம்பிய நக்காமரோ பயணம் செய்த கப்பல் சிறிது தூரத்திலேயே உடைந்து விபத்து ஏற்பட்டுவிட்டது. அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டு மீண்டும் சீனாவுக்கே அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு ஜப்பானுக்குத் திரும்பும் வாய்ப்புக் கிடைக்கவே இல்லை. 53 ஆண்டுகள் சீனாவில் வசித்தபிறகு தனது 72வது வயதில் காலமானார். அப்போது இவருடைய உற்ற நண்பராக இருந்த சீனக் கவிஞர் லீ பாய் இவருக்குச் சீனமொழியில் பாடிய இரங்கற்பா சீன இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. இவர் குறித்த இன்னொரு செவிவழிக் கதையும் உலவுகிறது. இவர் ஜப்பானுக்குத் திரும்பும் எண்ணத்தைச் சீனப் பேரரசர் ஷுன்சங்கிடம் தெரிவித்தபோது அவர் அளவிலாக் கோபம் கொண்டார். இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பிரிவுபசார விருந்து கொடுப்பதாகக் கூறி மலையுச்சிக்கு அழைத்துச் சென்றார். நக்காமரோ உச்சிக்குச் சென்றதும் இவர் படிக்கட்டுகளைச் சிதைத்துக் கீழே வரமுடியாமல் செய்து அங்கேயே கிடந்து சாகட்டும் என்று விட்டுவிட்டார். அப்போது நக்காமரோ தனது கையைக் கடித்து இரத்தத்தால் இப்பாடலை ஒரு பாறையில் எழுதிவைத்தார் என்று நீள்கிறது அக்கதை. பாடுபொருள்: பழைய நினைவுகளை மலரவைக்கும் நிலா பாடலின் பொருள்: இங்குள்ள மலைமீதிருந்து வானிலுள்ள வட்டநிலாவைப் பார்க்கும்போது அன்று என் ஊரான நராவின் மிக்காசா மலையின் கசுகா கோயிலிலிருந்து பார்த்தபோது தெரிந்த அதே நிலா தெரிகிறது. நிலா ஜப்பானியக் கவிதைகளில் முதல்முறை இடம்பெறுவதும் இப்பாடலில்தான். நம் ஊரில் எப்படி ஒவ்வொரு கல்லூரியின் இறுதியாண்டுப் பிரிவுபசார விழாக்களில் “பசுமை நிறைந்த நினைவுகளை” பாடல் யாராவது ஒருவரால் தவறாமல் பாடப்படுகிறதோ, அதேபோல ஜப்பானில் படிப்புக்காக விடுதியிலோ அல்லது வேலைக்காக வெளியூரிலோ இருப்பவர்களுக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டால் இப்பாடல் நினைவுக்கு வருமாம். இன்றைய நரா மாகாணத்தில் மிக்காசா மலையில் கசுகா என்றொரு ஷிண்டோ மதக்கோயில் அமைந்துள்ளது. வெளியூர் அல்லது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்பவர்கள் அங்குச் சென்று வணங்கிச் செல்வது வழக்கம். அதுபோல் நக்காமரோவும் சீனாவுக்குச் செல்லும்முன் அங்குச் சென்று வணங்கியிருக்கிறார். அப்போது பார்த்த நிலா மனதிலேயே பதிந்து இப்பாடலில் வெளிப்பட்டிருக்கிறது. நமது சங்க இலக்கியத்திலும் இத்தகைய ஒரு பாடல் இருக்கிறது. நிலவு வேதனையைக் கூட்டுவது பிரிந்திருக்கும் காதலர்களுக்கு மட்டுமல்ல. தந்தையை இழந்த பாரிமகளிரான அங்கவை, சங்கவைக்கும்தான் எனப் புறநானூற்றின் கீழ்க்கண்ட கையறுநிலைப் பாடல் கூறுகிறது. அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவின், எந்தையும்உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ் வெண்ணிலவின் வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே! அன்றொருநாள் நிலவைக் கண்டபோது எங்கள் தந்தை உடனிருந்தார். இம்மலையும் எங்களுடையதாக இருந்தது. ஆனால் இன்று இந்நிலவைக் காணும்போது மலையைப் பிற அரசர் கைக்கொண்டார். எங்கள் தந்தையும் இல்லை எனப் போரினால் பெண்கள் அடையும் துன்பத்தைப் பகர்கிறது. வெண்பா: நெடுநாள் பிரிவின் வலியுணர் போழ்தில் சுடுகல் உணங்கல் உருகத் - தடுப்பாரே அற்ற நிலையன்ன இல்நீங்கு நெஞ்சைக் கொடுமையாய் வாட்டும் நிலவு (மீண்டும் அடுத்த தான்காவில் சந்திப்போம்) |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |