![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 152
![]() இதழ் 152 [ மார்ச் 2021 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் 12 கி. மீ. தொலைவிலுள்ள புள்ளமங்கை தற்போது பசுபதிகோயில் என்று அறியப்படுகிறது. இவ்வூரிலுள்ள இரண்டு பழங்கோயில்களுள் கோச்செங்கணானின் மாடக்கோயில் ஒன்று. மற்றொன்று சம்பந்தரால் பாடப்பெற்ற சிற்பக் களஞ்சியமான ஆலந் துறையார். முதற் பராந்தகர் காலக் கட்டமைப்பான இக்கோயிலின் விமானமும் முகமண்டபமும் முற்சோழர் கலையாற்றலின் இணையற்ற பதிவுகளாகும். தமிழர் கலைவளம் பயில நினைப்பார்க்கு ஆலந்துறையார் சிறந்த ஆசானாய்த் துணைநிற்கும். இனி வரும் வரலாறு இணைய இதழ்களில் இவ்வளாகத்தே சோழச் சிற்பாசிரியர்கள் வெளிப்படுத்தியிருக்கும் உளியாற்றல் உன்னதங்களைத் தொடர்ந்து காணலாம். தோரண வரலாறு சங்க இலக்கியங்களிலேயே சுட்டப்பெறும் தோரணங்கள் தமிழர்தம் அழகூட்டல் கலையின் அருமையான வெளிப்பாடுகளாய்ப் பாடலடிகளாகவும் சிற்பச் செதுக்கல்களாகவும் தொடர்ந்து பதிவாகியுள்ளன. பொ. கா. 6ஆம் நூற்றாண்டுக் குடைவரையான தளவானூர் சத்ருமல்லேசுவராலயத்தின் வாயில்தோரணமே தமிழ்நாட்டுக் கலைவரலாற்றின் முதல் சிற்பப்பதிவாய்க் காணக்கிடைக்கிறது. வாயில் தோரணமாய் வருகை தொடங்கினாலும் கோட்டத் தோரணங்களாகவும் வளர்நிலை எய்தி, பல அடுக்கு அழகூட்டல்களைப் பெற்றுச் சிறந்த இவை தொடர்ந்து தமிழ்நாட்டுக் குடைவரைகளிலும் ஒருகல்தளிகளிலும் கற்றளிகளிலும் இடம்பெற்றன. தமிழ்நாட்டுக் கலைவளம் பறைசாற்றும் இத்தோரண வரிசையில் முதற் பராந்தகர் காலக் கற்றளிகள் சிலவும் இணையும். அவற்றுள் ஒன்றுதான் புள்ளமங்கை ஆலந்துறையார். இக்கோயிலின் முத்தள விமானக் கீழ்த்தளச் சாலைப்பத்திகள் மூன்றின் கோட்டங்களும் தலைப்பில் மகரதோரணம் பெற்றுள்ளன. அது போலவே முகமண்டப வட, தென்சுவர்க் கோட்டங்களும் அழகிய மகரதோரணங்களால் தலைப்பிடப் பெற்றுள்ளன. விமானத் தோரணங்கள் மேற்குத் தோரணம் விமானத்தின் மூன்று தோரணங்களுள் மேற்கு, தெற்குக் கோட்டத் தோரணங்கள் நிறைவெய்தவில்லை. மேல், கீழ் மகரஇணைகளையும் பெருமகரங்களின் மேல் கருடாசனத்திலுள்ள வானவர்களையும் மேற்குத் தோரணத்தில் காணமுடிகிறது. வலப்புற வானவர் வலக்கை நீட்டி, இடக்கையால் மகரத்தின் துளைக்கை தொட, இடப்புற வானவர் கைகளை மாற்றியுள்ளதுடன் முழு இடஒருக்கணிப்பில் உடலின் பின்பகுதியைக் காட்டியவாறு காட்சிதருகிறார். தோரணத்தின் கீழ்வளைவும், மேலிணை மகரங்களுக்கு மேல், தோரண நெற்றிப்பொட்டாக அமையும் மேல்வளைவும் பணி தொடங்கப்படா நிலையிலிருக்கப் பூதத்தோரணத்தில் இடப்புறம் மட்டும் மூன்று பூதங்கள். பெருமகரங்களின் வாயிலிருந்து வெளிப்படுவனராய்ப் பக்கத்திற்கு மூன்று யாளிவீரர்கள். அது போலவே சிறுமகர வெளிப்பாடாய்ப் பக்கத்திற்கொரு யாளிவீரர். அதை அடுத்த வளையத்தில் இருபுறத்தும் பக்கத்திற்கு ஏழு வாத்துகள் அமைய, அடுத்த வளையமாய்க் கொடிக்கருக்கு. தெற்குத் தோரணம் தெற்கு மகரதோரணம் முழுமையடையாமல் இருப்பதுடன், மேல் மகரஇணை உள்ளிட்ட சில பகுதிகளைக் கோட்டத்தின் முன்னுள்ள கட்டமைப்பில் இழந்துள்ளது. வலப் பெருமகரத்தின் மேல் காட்சியாகும் வானவர் கருடாசனத்தில் இருகைகளையும் வலப்புறம் நீட்டி வலஒருக்கணிப்பில் உள்ளார். இடப்புற வானவர் கட்டமைப்பில். கீழ்வளைவில் இடஒருக்கணிப்பில் வலக்கையை ஏந்தலாக வயிற்றருகே கொண்டவாறு இருபெண்களும் இடஒருக்கணிப்பில் அதே கையமைப்புடன் இருபெண்களும் முழுமையடையா நிலையில் காட்சிதர, நடுவிலுள்ள இறைவடிவம் முன்கைகளைக் காக்கும், கடியவலம்பிதக் குறிப்புகளில் கொண்டுள்ளது. பின்கைப் பொருட்கள் உருவாகவில்லை. கீழ்வளையத்தை அடுத்த பூதத்தொங்கலில் இடப்புறம் மட்டும் மூன்று பூதங்கள் உருவாக, அடுத்த வளைவில் அதே பகுதியில் மூன்று குதிரை வீரர்கள். பெருமகர வாய்களிலிருந்து வெளிப்படும் யாளிகள் ஒதுக்கீடுகளாகவே உள்ளன. வடக்குத் தோரணம் விமான வடக்குத் தோரணம் நன்கு நிறைவடைந்துள்ளது. அதன் கீழ்ப்பகுதி பக்கத்திற்கொன்றாய் அணைவுத்தூண் பலகைகளில் தோகையிருத்திய பெருமகரங்கள் கொள்ள, மேற்பகுதியில் பட்டையால் இணைக்கப்பட்டுப் பதக்கப்பூண் பெற்ற சிறுமகர இணை. பெருமகரங்களின் மேல் பட்டும் படாமலும் இரு கைகளையும் விரித்தவாறு கருடாசனத்தில் வானவர்கள். தோரணக் கீழ்வளைவில் ஆலிலைக் கண்ணன். அடுத்துள்ள தொங்கல் வளைவில் ஆடற்கோலங்களில் 10 பூதங்களும் மூன்றாம் வளைவாகப் பக்கத்திற்கு 4 வலம்புரி யானைமுகப்புகளும் அவற்றின் இடையிருக்குமாறு 5 மலர்ப்பதக்கங்களும் கண்ணுக்கு விருந்தாகின்றன. பெருமகர வாய்களிலிருந்து பக்கத்திற்கு மூன்று யாளிவீரர்கள் சிறுமகரப் பார்வையில் வெளிப்பட, சிறு மகரங்களிலிருந்து பெருமகரப் பார்வையில் பக்கத்திற்கொரு யாளிவீரர். ஐந்தாம் வளைவில் சிறுமகரப் பார்வையில் பக்கத்திற்கு 5 குதிரை வீரர்கள். மேல்வளைவில் ஆறு கைகளுடன் சிவபெருமானின் லலிதகரணம். கீழ்வளைவில் சிறுமகுடம் பனையோலைக் குண்டலங்களுடன் வலஒருக்கணிப்பில், வலக்கையை மேலுயர்த்தித் தாழ்த்தி, இடக்கையைத் தோளருகே முஷ்டியென மடித்து, வலக்காலை நீட்டி, இடக்காலை முழங்காலளவில் மடித்துப் படுத்துள்ள கண்ணனின் இருபுறத்தும் கருடாசனத்தில் சடைமகுட அடியவர்கள். வலப்புறத்தார் வணங்க, இடப்புறத்தார் கைகள் மார்பருகே. வலப்பாதத்தைப் பார்சுவமாக்கி, இடப்பாதத்தை உத்கட்டிதத்தில் இருத்திச் சிற்றாடையும் சடைமகுடமுமாய் ஆடும் சிவபெருமானின் வல முன் கை காக்கும் குறிப்பிலிருக்க, இட முன் கை அர்த்தரேசிதத்தில். இடப் பின் கைப் பொருள்களை அறியக்கூடவில்லை. வலப் பின் கையில் உடுக்கை. வல நடுக்கையிலுள்ள தலைக்கோல் இச்சிற்பத்தின் சிறப்பைப் பன்மடங்காகக் கூட்டுகிறது. திருநல்லூர் மணவழகர் கோயில் ஆடவல்லான் செப்புத்திருமேனியின் வலக்கை ஒன்றிலும் மேலைச் சாளுக்கியரின் பட்டடக்கல் கோயில்கள் சிலவற்றின் ஆடவல்லான் சிற்பங்களிலும் தலைக்கோல் உள்ளமை இங்கு எண்ணத்தக்கது. முகமண்டபத் தோரணங்கள் தெற்குத்தோரணம் முகமண்டபத் தென்கோட்டத் தோரணப் பெருமகரங்கள் மேல் ஒருகையை உயர்த்தி, ஒருகையை மகரத்தின் துளைக்கை மீதிருத்திய வானவர்கள். தோரணக் கீழ்வளைவில் சண்டேசுவர அருள்மூர்த்தி. சடைமகுடராய்ச் சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடை, மார்புக்கச்சுடன் வலஒருக்கணிப்பில் சடை வலத்தோளில் சரிய வலக்கையை இருக்கையில் ஊன்றி, இடக்கையைத் தோளருகே கொண்டு, சுகாசனத்திலுள்ள உமையின் முகம் வலத்திருப்பமாய் உள்ளது. சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சவடி, தோள், கை வளைகள், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடையுடன் சம்மணமிட்டு, முன் கைகளில் கொன்றைமாலையுடன் சற்றே குனிந்துள்ள சிவ பெருமானின் வலப் பின் கை, தோள்புறத்துள்ள லிங்கத்தைத் தழுவியிருக்க, இடப் பின் கை தொடைமீது. சடைப்பாரராய் வலஒருக்கணிப்பில் சரப்பளி, பனையோலைக் குண்டலங்கள், சிற்றாடையுடன் கருடாசனத்திலுள்ள சண்டேசுவரர் கைகட்டிப் பத்திமைப் பணிவுடன் குனிந்துள்ளார். அடுத்துள்ள தொங்கல் வளைவில் ஆடற்கோலங்களில் 9 பூதங்கள். மூன்றாம், ஐந்தாம் வளைவுகள் கொடிக்கருக்குக் கொள்ள, இடைப்பட்ட வளைவில் பெருமகர, சிறுமகர வாய்களிலிருந்து பக்கத்திற்கொரு யாளிவீரர் வெளிப்பட, அவர்களுக்கு இடைப்பட்டு பக்கத்திற்கு 3 யாளிகள். தோரண மேல்வளைவில் சிவபெருமானின் ஊர்த்வஜாநு கரணம். இடப்பாதம் பார்சுவமாக மண்டலநிலையில் காட்சிதரும் பெருமானின் வலமுழங்கால் லேசாக உயர்ந்துள்ளது. வல முன் கை காக்கும் குறிப்பு காட்ட, இட முன் கை வேழமுத்திரையில். பின்கைகளிரண்டும் முஷ்டிமுத்திரையில். வடக்குத்தோரணம் கருடாசனத்திலுள்ள வடகோட்டத் தோரணப் பெருமகர வானவர்களுள் வலப்பக்கத்தார் இருகைகளையும் முஷ்டியில் உயர்த்த, இடப்பக்கத்தார் ஒருகை உயர்த்தி, ஒருகையை மகரத்தின் துளைக்கை மீதிருத்தியுள்ளார். தோரணக் கீழ்வளைவில் இருக்கையில் சுகாசனத்தில் சிவபெருமானும் உத்குடியில் உமையும். இறைவனின் வல முன் கை கடகமாக, இட முன் கை தொடை மீது. சடைமகுடம், முப்புரிநூல், உதரபந்தம், சிற்றாடை பெற்றுள்ள அவரது வலப் பின் கையில் உடுக்கை. இடப் பின் கை உமையை அணைத்துள்ளது. சிவபெருமான் மேல் சாய்ந்தவாறு முகத்தை அவர் நோக்கியும் உடலை இடஒருக்கணிப்பிலும் கொண்டுள்ள அம்மையின் வலக்கால் கீழிறக்கப்பட்டுள்ளது. கரண்டமகுடம், பனையோலைக் குண்டலங்கள், பட்டாடை பெற்றுள்ள அம்மையின் வலக்கை காக்கும் குறிப்பு காட்ட, இடக்கை முழங்கால் மேல். இறையிணையின் இருபுறமும் சடைமகுடம், பனையோலைக் குண்டலங்கள், சரப்பளி, சிற்றாடையுடன் கருடாசனத்திலுள்ள அடியவர்களில் வலப்புறத்தார் வணங்க, இடப்புறத்தாரின் இடக்கை மார்பருகே. அடுத்துள்ள வளைவின் தோரணத்தொங்கல்களில் பக்கத்திற்கு மூன்று ஆடல் பூதங்களும் இடையில் கொடிக்கருக்குப் பதக்கமும். மூன்றாம் வளைவில் பெருமகர வாய்களிலிருந்து பக்கத்திற்கொரு யாளிவீரர் வெளிப்பட, சிறு மகரங்களிலிருந்தும் அது போலவே பக்கத்திற்கொரு யாளிவீரர். இவர்களுக்கு இடையில் பக்கத்திற்கு 3 யாளிவீரர்கள். மேல்வளைவாகக் கொடிக்கருக்கு. மேல் வளைவில் இருத்தல் நிலையில் இடக்கையை அர்த்தரேசிதமாக்கி, வலக்கையில் பதாகம் காட்டி ஆடும் பூதம். முடிவுரை புள்ளமங்கைத் தோரணங்கள் முற்சோழர் கால சமயச் சிந்தனைகளையும் ஆடற்கலை நுட்பங்களையும் வீரர்கள் அணிவகுப்பின் திறத்தையும் விலங்கு, பறவைகளிடம் அக்காலத் தமிழருக்கிருந்த தோழமையையும் காட்டுவதுடன், அவர்தம் அழகுணர்ச்சியின் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாய்க் காலத்தை வென்று திகழ்கின்றன. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |