![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 136
![]() இதழ் 136 [ ஆகஸ்ட் 2017 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
திருவருட்துறைக் கோயில் இருபகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இக்காட்சியின் மேற் பகுதியில் கையில் குடையுடன் ஓடும் முதியவரும் அவரை விடாது தொடரும் சுந்தரரும் காட்டப்பட்டுள்ளனர். முதியவர் தலையின் பெரும்பகுதியும் சுந்தரர் உடலின் மேற்பகுதியும் அழிந்துவிட்டன. என்றாலும், தோள் துணி பறக்க முதியவர் ஓடுவதையும் வலக்கால் உயரத்திலெழும்ப இடக்காலை ஊன்றிச் சுந்தரர், முதியவர் விரைவுக்கு ஈடு கொடுக்க முயலுவதையும் இருக்கும் சுவடுகள் கொண்டே நன்கறிய முடிகிறது. கீழே அறக்கள அந்தணர்கள் நால்வர் வலக்கைக் கீழ்க் கொண்ட சுவடிக்கட்டுகளுடன் சுந்தரர் ஓட்டத்தையும் முதியவர் கோயிலுக்குள் நுழையும் வேகத்தையும் கண்டு வியப்பும் திகைப்புமாய்ப் பின்தொடர்கின்றனர். அவர்களுள் ஒருவர் தலையிலும் கழுத்திலும் ருத்திராக்கமாலை அணிந்துள்ளார். இவ்விரு பிரிவுகளின் இடப்புறம் திருவருட்துறைக் கோயில் மஞ்சள், சிவப்பு, சாம்பல் நிறங்களில் இருதள விமானமும் சிறிய முகமண்டபமுமாய் வரையப்பட்டுள்ளது. முகமண்டபத்தின் முன்னுள்ள முன்றிலில், அலங்கரிக்கப்பட்ட மேடையில் அமர்ந்து பாடுவாராய்ச் சுந்தரர். இதுவரையிலும் இலேசாக மஞ்சள் பொதிந்த சாம்பல் நிறத்தில் காட்டப்பட்டு வந்த அவர் உருவம் இங்குப் பச்சை வண்ணத்தில் உள்ளது. செவிகளில் செவிப்பூக்களும் கழுத்தில் பெருமுத்துக்களும் ருத்திராக்கமும் இருசரங்களாய்க் கொண்ட அணிகலனும் கருங்கொண்டையுமாய் வலமுழங்கால் தரையில் படிய அமர்ந்துள்ள சுந்தரர், இடமுழங்காலை உயர்த்தியுள்ளார். அவரது தோள்களுக்குக் கீழுள்ள உடற்பகுதி முழுவதும் அழிந்து போயிருப்பதால் ஆடையணிகலன்கள் பற்றி அறியக்கூடவில்லை.
அவர் அமர்ந்திருக்கும் மேடை பல அடுக்குகளுடன் அமைந்துள்ளதெனினும், சிதைவால் மேலடுக்காய் விளங்கும் பெருந்தாமரைத்தளம் மட்டுமே கண்களுக்குப் புலனாகிறது. மேடையமைந்திருக்கும் முன்றிலின் வலஓரத்திலுள்ள நான்முகத் தூண் தரங்கப் போதிகைக் கைகளால் உத்திரம் தாங்க, மேலே கூரையின் முன்னிழுப்பாய் நீட்டப்பட்டிருக்கும் கபோதம், கூடு வளைவுகளுடன் வள்ளி, சந்திரமண்டல அலங்கரிப்புகள் பெற்றுள்ளது. கூரைக்கு மேல் பூமிதேசம் படர்வதைக் கபோத நுனியில் காட்டப்பட்டிருக்கும் மகரத்தலை உணர்த்துகிறது. திருவருட்துறைக் கோயிலின் விமானம் கிழக்கு நோக்கியதெனக் கொள்ளின், அதன் வடக்குப் பரிமாணம் இங்குக் காட்டப்பட்டிருப்பதாகக் கருதலாம். இரண்டு கர்ணம், ஒரு சாலையென மூன்று பத்திப் பிரிப்புகளுடன் அமைந்திருக்கும் ஆதிதளத்தின் தாங்குதளம் உபானத்தில் தொடங்குகிறது. பெருந் தாமரையாக ஜகதியும் அடுத்துக் கம்பும் தாமரைவரிகளால் அணைக்கப்பெற்ற உருள்குமுதமும் பிரதிவரியும் உள்ளமையால் இத்தாங்குதளத்தைப் பிரதிபந்த வகையினதான பத்மபந்தமாகக் கொள்ளலாம். பிரதிவரியின் மேல் படரும் கம்பையடுத்து வேதிக்கண்டமும் தாமரைவரி அணைவு பெற்ற வேதிகையும் உள்ளன. வேதிகைக்கு உள்ளடங்கிப் பரவும் கம்பின் மேல் எழும் இரண்டு நான்முக அரைத்தூண்களுக்கு இடைப்பட்டுள்ள சுவரின் நடுப்பிரிவாக இரண்டு கதவுகளால் அடைபட்டிருக்கும் வாயிலுடன் சாலைப்பத்தி. அதன் இருபுறத்தும் நான்முக அணைவுத் தூண்கள். வாயிலுக்கு மேலிருக்குமாறு இத்தூண்களுக்கு இடைப்பட்ட நிலையில் அழகிய மகர தோரணம். வாயிற் கதவுகளில் ஒவ்வொரு கதவிலும் மூன்று குறுக்குப்பட்டைகளும் இரண்டு நீளப்பட்டைகளும் உள்ளன. இவ்வாயிலுக்கும் சுவர்த்திருப்பத் தூண்களுக்கும் இடைப்பட்ட கர்ணபத்திகளில் கும்பப் பஞ்சரங்கள். சுவர்த்தூண்களின் போதிகைகள் தாங்கும் உத்திரத்திற்கு மேல் கூரையுறுப்புகள். கபோதம் அழகிய கூடுவளைவுகளுடன் அமைய, மேலே வேதிகையும் ஆரஉறுப்புகளும் அமைந்துள்ளன. பூமிதேசத்தை இனங்காணக் கூடவில்லை. ஆதிதளத்திற்கு மேற்பட்ட விமான உறுப்புகளின் பெரும்பகுதி சிதைந்திருப்பதால், ஆரஉறுப்புகளின் அமைப்பை அறியக்கூடவில்லை. அவற்றின் பின்னெழும் இரண்டாம் தள அரமியத்தின் வடமேற்குப்பகுதி ஓவியத்தில் தெளிவாக உள்ளது. அரமியக் கூரையிழுப்பான கபோதம் கூடு வளைவுகளுடன் காட்சிதர, மேலே பூமிதேசம். அதற்கு மேல் உள்ள விமான அமைப்பு முழுவதுமாய் அழிந்துவிட்டதால் கிரீவம், சிகரம், தூபி ஆகியவற்றின் வடிவமைப்பு அறியக்கூடவில்லை. விமானத்தின் சாலைப்பத்தி வாயில் கொண்டுள்ளமையால் இவ்விமானத்தை நாற்புற வாயில் பெற்ற சர்வதோபத்ரமாகக் கொள்ள வாய்ப்புண்டு. மிகச் சிறியதாய் உள்ள முகமண்டபம் வடக்கில் வாயில் பெற்று, அதை அடையும் வகையில் நீளமான திருக்களிற்றுப்படி கொண்டுள்ளது. படியின் துளைக்கைப் பிடிச்சுவர்கள் உபானத்தில் சுருண்டு முடிகின்றன. சுந்தரர் வாழ்க்கையின் முதல் திருப்புமுனை மணவரங்கில் தொடங்கித் திருவருட்துறைத் திருக்கோயிலில் முடிகிறது. இவ்விரு இடங்களிலும் வழக்கு மன்றிலும் நிகழ்ந்தவை இந்தச் சமுதாயத்துக்கு வழங்கும் பாடமென்ன? நிகழ்ச்சிகளையும் அவற்றோடு தொடர்புடையவர்களையும் இணைத்துப் பார்க்கும் போது அடிநாதமாய், மெல்லிய இழை போல இம்மூவிட நிகழ்வுகளையும் பிணைத்திருப்பது அன்பே என்பது போதரும். அன்பு பழகுவாரைப் பொறுத்துப் பல பெயர்களுடன் பிறப்பெடுக்கிறது. பாசம், நட்பு, காதல் என்று மூன்று பெரும் வடிவங்களில் அன்பு பரிணமித்தாலும் அம்மூன்றனுள் தொடர்பற்றுப் பிறந்து, வளர்ந்து நிறைவது நட்புதான். உயிர்காப்பான் தோழனென்ற பழமொழி பிறந்ததும், செயற்கரிய யாவுள நட்பின் என்று வள்ளுவர் பொருள் பொதிந்த கேள்வியொன்றை எழுப்புவதும் இதை அடியொற்றிதான். சுந்தரரிடம் இறைவன் கொண்ட நட்பு இராஜராஜரை மயக்கியது. தந்த வாக்குறுதியைக் காப்பாற்றவும் நண்பரை அவர் விரும்பிய வாழ்க்கைக்கே திருப்பவும் அந்தப் பெருமான் போட்ட வேடமும் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் பெற்றுக் கொண்ட ஏச்சுகளும் பேச்சுகளும் இராஜராஜருக்குள் இயல்பாய் விளைந்து கனிந்திருந்த தோழமையுணர்வைப் பன்மடங்காய்ப் பெருக்கிப் புடமிட்டன. இறைவனின் இந்த இணையற்ற நட்புணர்வில், நண்பருக்காக இந்நிலவுலகில் அப்பெருந்தகை தொடர்ந்து மேற்கொண்ட தளராத முயற்சிகளில், வள்ளுவரின் நட்பியலுக்குப் பொருத்தமான விளக்கங்களைப் படக்காட்சிகளாய்ப் பார்த்த பிரமிப்பில்தான், தன் இதய மேருவாம் இராஜராஜீசுவரத்தின் அகச்சுவரில், அந்தப் பேரறிவாளரின் திருமேனியருகிலேயே அவருக்கும் சுந்தரருக்கும் விளைந்த நட்பின் உச்சக் காட்சிக்கு வண்ணங்களில் வடிவம் தந்தார் இராஜராஜர். உணர்வுகளில் ஆழ்ந்தாலும் உரியனவற்றை மறப்பவரல்லர் அவர். அதனால்தான் நட்புக்கதையை, வரலாற்றுப் பின்புலம் செழிக்கச் சோழர் காலச் செறிவுகளுடன் தூரிகைப் பரிசாக்கினார். - வளரும்
|
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |