![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 122
![]() இதழ் 122 [ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
அன்புள்ள வாருணி,
உனக்கு அழுந்தூர் நினைவிருக்கும் என்று நம்புகிறேன். நம் வரலாற்றாய்வு மையம் அங்கு 1985இல் மேற்கொண்ட களஆய்வுகளின்போது வரகுணீசுவரம் கோயிலும் அதன் சுற்றுப்புறத்தில் பல அரிய சிற்பங்களும் கண்டறியப்பட்டன. கோயிலில் இருந்து சோழர், பாண்டியர் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டன. அகழ்ந்தெடுக்கப்பட்ட சிற்பங்கள் சிராப்பள்ளி அருங்காட்சியகத்திற்கு அளிக்கப்பட்டன. திரு. இரா. இராசேந்திரன், பேராசிரியர் சீ. கீதா வழிகாட்டலில் கி. ஆ. பெ. விசுவநாதம் மேனிலைப்பள்ளி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை, டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் ஆகியவற்றின் துணையோடு பல்லாண்டுகளாக வழிபாடற்றுப் போயிருந்த வரகுணீசுவரம் கோயிலை வழிபாட்டிற்குக் கொணர்ந்தனர். அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரும் காவல்துறைத் துணைத் தலைவரும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சரியான சாலை வசதியற்றிருந்த அக்கோயிலுக்கு மூன்று கி. மீ. நீளச் சாலை அமைத்துத் தந்தனர். சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை மாணவி செல்வி சரசுவதி 1986 ஏப்ரலில் இவ்வளாகத்தை என் வழிகாட்டலில் ஆய்வு செய்து முதுகலை ஆய்வேட்டை வழங்கினார். வைகறை விடியலில் வரலாற்று அழுந்தூர் எனும் தலைப்பில் அழுந்தூரின் வரலாற்றுச் செய்திகள் செந்தமிழ்ச் செல்வியில் தொடர் கட்டுரையாக 1988இல் பதிவாயின. ![]() அழுந்தூர் வரகுணீசுவர வளாகம் கோயிற்கலைப் பட்டயக் கல்வி வகுப்புகளின்போது 1991இல் அழுந்தூருக்கு மாணவர்களின் களப்பயணம் அமைந்தபோதும், மீளாய்வேதும் நிகழவில்லை. அண்மையில் அக்கோயில் வளாகத்தையடுத்த சுற்றுப்புறத்தில் புதைந்திருந்த கல்வெட்டுப் பலகை ஒன்று உள்ளூர் மக்களால் வெளிப்படுத்தப்பட்ட செய்தி நாளிதழ்களில் பதிவானது. அக்கல்வெட்டைப் படித்தறிவதற்காகப் புலவர் தமிழகன், பேராசிரியர்கள் மு. நளினி, அர.அகிலா உடன்வர அங்குச் சென்றிருந்தேன். ஏறத்தாழ 25 ஆண்டுகள் பறந்தோடிய நிலையில் அழுந்தூர் மண்ணில் கால் பதித்தபோது பழைய நினைவுகள் திரைப்படமாயின. ![]() கல்வெட்டு அகழ்ந்தெடுக்கப்பட்ட அப்புதிய கல்வெட்டுச் சுந்தரபாண்டியர் காலத்தில் அழுந்தூரிலிருந்த பெரியநாட்டான் மடத்து மழவரையர் அழுந்தூர் வரகுணீசுவரம் கோயிலைப் புதுக்கிய செய்தியை அளித்ததுடன், அம்மடம் அஞ்சினார் புகலிடமாக விளங்கியதையும் தெரிவித்தது. இந்தக் கற்பலகையுடன் தூணொன்றும் கிடைத்ததாகக் கூறிய உள்ளூரார் அதையும் பார்க்குமாறு வேண்டினர். ![]() தூண் கோயிலின் வடபுறத்தே தனித்துக் காணப்பட்ட அம்முச்சதுர, இருகட்டுத் தூணின் சதுரங்கள் ஆலிலைக் கண்ணன், குழலூதும் கண்ணன், கண்ணன் வெண்ணெய் உண்ணுதல், பாதங்கள் தொட்ட நிலையிலான விஷ்ணுவின் மாறுபட்ட அமர்வுக்கோலம் முதலிய வைணவச் சிற்பங்களைப் பெற்றிருந்தன. கட்டமைப்பிலும் சிற்ப இருப்பிலும் வரகுணீசுவரம் கோயிலில் காணப்படும் தூண்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருந்தது. வைணவக் கோயில் ஒன்றிற்குரிய தூணாக இது இருந்திருக்கலாம் என்று எண்ணியபோதுதான், இங்கிருந்து 1986இல் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சேர்த்த விஷ்ணுவின் சிற்பம் நினைவில் நெருடியது. 1. 75 மீ. உயரம், 76 செ. மீ. அகலம் கொண்ட அந்த விஷ்ணுவின் சிற்பம் இங்குள்ள மரத்தடியில்தான் பாதி புதைந்த நிலையில் கண்டறியப்பட்டது. பொதுக்காலம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்க அச்சிற்பத்தோடு வைணவக் கோயில் ஒன்று அழுந்தூர்ப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்று கருதினோம். ![]() அருங்காட்சியக விஷ்ணு அப்போதுதான் பேராசிரியர் நளினி வரகுணீசுவரம் சிவன்கோயிலுக்கு முன்னால் காணப்படும் பலித்தளத்திலிருந்து தம்மால் படியெடுக்கப்பட்ட துண்டுக் கல்வெட்டுகளை நினைவூட்டினார். அவை மாறவர்மர் குலசேகர பாண்டியரின் 41ஆம் (பொதுக்காலம் 1309) ஆட்சியாண்டுக் கல்வெட்டொன்றின் துணுக்குகளாக இருந்தமை அறிந்தோம். அவற்றை மீளவும் படித்து ஒருங்கிணைத்துப் பார்த்தபோது, அழுந்தூரில் இருந்த குலோத்துங்கசோழ விண்ணகரத்துக்குக் குலசேகரர் காலத்தே நிலக்கொடை அளிக்கப்பட்ட தகவலைப் பெறமுடிந்தது. வரகுணீசுவரத்துப் பலித்தளமே சிதைந்துபோன விண்ணகரத்தின் தாங்குதளக் கற்கள் கொண்டு கட்டப்பெற்றுள்ளது என்பதையும் அறிந்தோம். ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டளவில் அழுந்தூரில் விளங்கிய விண்ணகரம் முதற் குலோத்துங்கர் காலத்தில் அவரது பெயரையேற்று, மாறவர்மர் குலசேகரரின் ஆட்சிக் காலமான பதினான்காம் நூற்றாண்டுவரை நன்னிலையில் இருந்து காலப்போக்கில் சிதைந்து அழிந்தது போலும். கட்டமைப்பு காற்றில் கரைந்துபோயிருந்தாலும் சுவடுகள் தப்பிப் பிழைத்து வரலாற்றை வெளிச்சப்படுத்தியுள்ளன. அழிவுற்ற கோயில்களை அடையாளம் காட்ட அவை இருந்த அதே இடத்தில் கட்டட, சிற்ப, கல்வெட்டுச் சான்றுகள் ஒருங்கிணைந்த நிலையில் கிடைப்பது மிகவும் அரிதாகும். சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த திருநெடுங்களத்தில் இருந்து அழிந்த சமணர் இருப்பிடமான ஸ்ரீபுறக்குடிப்பள்ளியை இதே போன்ற சான்றுகளின் அடிப்படையில் 1999இல் இவ்வாய்வு மையம் கண்டறிந்து வெளிப்படுத்தியது உனக்க நினைவிருக்கலாம். இது குறித்த கட்டுரை ஒன்றுகூட 2006இல் எங்களால் வெளியிடப்பட்ட கோயில்களை நோக்கி நூலில் இடம்பெற்றுள்ளது. புறக்குடிப்பள்ளியைத் தொடர்ந்து இப்போது அழுந்தூர்க் குலோத்துங்கசோழ விண்ணகரம் வரலாற்றுப் பக்கங்களுக்கு வந்துள்ளது. அழுந்தூர் மீளாய்வுகளின்போது வரகுணீசுவரர் கோயில் பெருமண்டபத்தின் கிழக்குத் துணைத்தளப் பெருவாஜனத்திலிருந்து பேராசிரியர் மு. நளினி 82 செ. மீ. நீளமுள்ள தச்சமுழம் ஒன்றைக் கண்டறிந்தார். இது போன்ற கட்டட அளவுகோல்கள் பெயர்ப் பதிவுகளுடன் திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலிலும் விராலிமலை முருகன் கோயிலிலும் ஏற்கனவே இம்மைய ஆய்வர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை நீ அறிந்ததே. வாருணி, ஒரு கோயில் முதல் ஆய்வுகளின்போதே தன்னை முற்றிலுமாக வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதில்லை. பல இடங்களில் மீளாய்வுகளே கோயிலின் நுட்பங்களைப் புலப்படுத்தியுள்ளன. அதனால்தான் எந்த ஒரு களத்தையும் வாய்ப்பமையும்போதெல்லாம் மீளப் பார்க்கும் பழக்கத்தை மைய ஆய்வர்கள் பின்பற்றி வருகின்றனர். தொட்டவுடன் தெரிவதும் வரலாறுதான்; தேடத்தேடத் தொடர்வதும் வரலாறுதான். அன்புடன், இரா. கலைக்கோவன் |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |