![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 122
![]() இதழ் 122 [ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
முசிறி தொட்டியம் சாலையில் மணமேட்டிலிருந்து வடக்கே 1 கி. மீ. தொலைவிலுள்ள சிற்றூர் அலகறை. சோழர் காலத்தில் நாட்டுப் பிரிவொன்றின் தலைமை ஊராக இருந்த இவ்வூரில் 1964இல் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொண்டு மூன்று பண்பாட்டுக் கால எச்சங்களை வெளிக்கொணர்ந்ததாக முனைவர் சு. இராசவேலுவும் திரு. கோ. திருமூர்த்தியும் ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள்’ என்ற தங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளனர் (பக். 106-109). ![]() நுழைவாயில் இவ்வூரின் ஒதுக்கமான பகுதியில் சிதைந்த நிலையில் காணப்படும் சேமீசுவரர் கோயில் (தற்போது சோமீசுவரர்) நிறைவடையாத கோபுரத்துடன் ஒருதளத் திராவிட விமானமாக முன்புறத்தே மண்டபங்கள் பெற்று அமைந்துள்ளது. கோபுர வாயிலில் உள்ள பலகைக் கல்வெட்டு, பொ. கா. 1887இல் நாகயநல்லூர் கலியாணசுந்தரம் மகன் பாஸ்கரன் 500 ரூபாய் செலவில் கோயில் சுற்றுமதிலை அமைத்த தகவலைத் தருகிறது. உயரமான துணைத்தளத்தின்மீது பாதபந்தத் தாங்குதளம் பெற்றெழும் கோபுர உட்சுவரின் வட, தென்புறங்களிலுள்ள தமிழ்க் கல்வெட்டின் தென்பகுதி பேராசிரியர் ப.சண்முகத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் வடசுவர் தொடர்ச்சி விடுபட்டுள்ள நிலையில் களஆய்வின்போது முழுமையும் படியெடுக்கப்பட்டது. மூன்றாம் குலோத்துங்கரின் 13ஆம் ஆட்சியாண்டின்போது (பொ. கா. 1190) இக்கோயிலைத் தம் பெயரில் எடுப்பித்த சேமன் தாயிலும் நல்லானான குலதீப நாடாள்வான், கோயில் பணியாளர்களுக்கான ஊதியத்திற்காக அலகறையிலும் இராஜேந்திரசோழ நல்லூரிலும் மாணிக்க நல்லூரிலும் விலைக்குப் பெற்ற ஏழரை வேலி நிலத்தை இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்களித்தமை கூறும் இக்கல்வெட்டு, வேலி ஒன்றுக்கு ஐம்பது கலம் நெல் இறையாகத் தரப்பட்டதையும் நிலங்கள் அவ்வப்போது தரம் நிர்ணயிக்கப்பட்டு அரசின் வருவாய்த்துறையால் வரியிடப்பட்டதையும் தெரிவிக்கிறது. இக்குலதீப நாடாள்வான் பாண்டிகுலாசநி வளநாட்டு இடையாற்று நாட்டுத் திருத்தவத்துறையில் (இலால்குடி) பாடிகாவல் பொறுப்பில் இருந்தவராவார். செந்நிவாழ்க்கை என்னும் ஊரைச் சேர்ந்த இவரது முன்னோர்களும் இப்பகுதியிலிருந்து ஆட்சி செய்தமையைத் திருவரங்கம் கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. செந்நிவாழ்க்கை போலக் கழுமலவாழ்க்கை, பனையூர் வாழ்க்கை, நந்திபுர வாழ்க்கை எனும் பெயர்களிலும் சோழர் காலத்தில் ஊர்கள் அமைந்துள்ளமை கருதத்தக்கது. ![]() கோபுர உட்சுவர் வளாகத்தின் தொடக்கத்திலுள்ள நந்தி மண்டபத் தூண்களில் உள்ள கல்வெட்டுப் பெரிதும் சிதைந்திருப்பினும் தனியார் ஒருவர் கோயிலுக்களித்த கொடை பற்றிய தகவலைப் பெறமுடிகிறது. வளாகத்தின் தென்மேற்கில் பிள்ளையார் திருமுன்னும் மேற்கில் முருகன் திருமுன்னும் உள்ளன. முருகன் வள்ளி, தெய்வானையுடன் உள்ளார். வளாகத்தின் புதரடர்ந்த பகுதியில் சூரியன், எழுவர்அன்னையர் உள்ளிட்ட சிதைந்த இறைத்திருமேனிகளைக் காணமுடிகிறது. ![]() விமானமும் மண்டபங்களும் இறைவன் கோயில் பெருமண்டபத்தில் அறம்வளர்த்தநாயகி என்ற பெயருடன் ஒரு தளத் திராவிட விமானத்தில் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ள இறைவி, பின்கைகளில் தாமரை மலர்களுடன் முன்கைகளில் காக்கும், அருட்குறிப்புக் காட்டி பனையோலைக் குண்டலங்கள், சடைமகுடம் கொண்டுள்ளார். பெருமண்டபத் தூண்கள் கீழ்ச்சதுரத்தில் நாகபந்தம் பெற்று மேலே பூமொட்டுப் போதிகைகளுடன் கூரை தாங்குகின்றன. முகமண்டப வாயிலில் தென்புறமுள்ள பிள்ளையார் சோழர் காலத் திருமேனியாகும். பின்கைகளில் அங்குசம், பாசம் விளங்க இலலிதாசனத்தில் உள்ள பிள்ளையாரின் துளைக்கை இடக்கை மோதகத்தைச் சுவைக்கிறது. வலக்கையில் தந்தம். ![]() முகமண்டப வாயில் பிள்ளையார் கருவறையில் வேசர ஆவுடையார் மீது நீளமான பாணத்துடன் சேமீசுவரர் காட்சிதருகிறார். பாதபந்தத் தாங்குதளம், வேதிகைத்தொகுதி, சதுரபாதம் பெற்ற எண்முகத் தூண்கள் தழுவிய சுவர், வெட்டுத் தரங்கப் போதிகை தாங்கும் கூரையுறுப்புகள் கொண்டுள்ள இறை விமானத்தின் கிரீவம், சிகரம் ஆகியவை செங்கற்கட்டுமானமாக உள்ளன. வலபியில் பூதவரி. சுவர்க் கோட்டங்களில் தெற்கில் மட்டும் ஆலமர்அண்ணல் சிற்பம் உள்ளது. விமானத்தின் மேற்கு, தெற்குத் தாங்குதளத்தில் கண்டறியப்பட்ட மூன்றாம் குலோத்துங்கர் காலக் கல்வெட்டு, பல அரிய செய்திகளைத் தருகிறது. இராஜராஜ வளநாட்டு மீமலையான ஜெயங்கொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகையாக (பேரூருக்குள் அடங்கிய சிற்றூர்) விளங்கிய அலகறை குலோத்துங்கசோழநல்லூர் என்றும் அக்காலத்தே அழைக்கப்பட்டுள்ளது. குலதீப நாடாள்வான் தம் பெயரில் சேமீசுவரமுடையார் திருக்கோயிலை அலகறையில் எழுப்பியதுடன், கோயிலுக்கான முற்றம், மடைவிளாகம், நந்தவனங்கள் அமைக்கச் சதுர்வேதிமங்கலத்து சபையாரிடமிருந்து ஏறத்தாழ 7400 குழி நிலத்தை 660 அன்றாடு நற்காசுகளுக்கு விலைக்குப் பெற்றதையும் கோயில் ஊழியர்கள் தங்க மடைவிளாக நிலத்தில் மனைகள் திட்டமிடப்பட்டதையும் இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. அதே சபையாரிடம் மேலும் இருபது மா அளவு நன்செய் நிலத்தை 2060 காசுக்கு விலைக்குப் பெற்ற சேமன் அதை இறையிலித் தேவதானமாகக் கோயிலுக்கு அளித்தார். இந்நிலத்தின் விளைச்சல் வழிக் கிடைத்த வருவாய் இறைக்கோயிலின் அன்றாட வழிபாடு, படையல்களுக்காக ஒதுக்கப்பட்டது. இரண்டு நில விற்பனைகளை விரித்துரைக்கும் இக்கல்வெட்டு, அலகறை நிலங்களுக்கு நீர் கொண்டு சென்ற திருச்சிற்றம்பல வாய்க்கால், வளவன் வாய்க்கால், ஜெயங்கொண்டசோழ வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசன அமைப்புகளின் பெயர்களையும் ஆடவல்லான் வதி உள்ளிட்ட நீர் வடிகால்களின் பெயர்களையும் வெளிப்படுத்துவதுடன், அவ்வூர் நிலங்களின் விளைதிறன், பருவப் பயிர் முறை முதலிய வேளாண் செய்திகளையும் தருவது குறிப்பிடத்தக்கது. ஆய்வுக்குத் துணைநின்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன், பேராசிரியர் மு. நளினி, உள்ளூர் அன்பர் திரு. க. சரவணன் ஆகியோருக்கு உளமார்ந்த நன்றி. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |