![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 122
![]() இதழ் 122 [ ஆகஸ்ட் 2015 ] பதினொன்றாம் ஆண்டு நிறைவு மலர் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தமிழ்நாட்டிலுள்ள தொன்மையான நகரங்களுள் காஞ்சிபுரமும் ஒன்று. விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, ஜைன காஞ்சி, புத்த காஞ்சி என்று பல பகுதிகளாக அறியப்பட்டிருந்த இந்நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் காஞ்சி மாநகரின் நடுநாயகமாக விளங்கும் காமாட்சியம்மன் திருக்கோயில் அருகே வடக்கு மாடவீதியில் அமைந்திருக்கும் சொக்கீசர் திருக்கோயிலும் ஒன்று. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையால் பாதுகாகப்பட்டு வரும் இத்திருக்கோயில் ‘கௌசிகேசுவரர் திருக்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
![]() திருக்கோயில் விமானம் மற்றும் மண்டபம் பல ஆண்டுகளுக்கு முன் சிதைந்த நிலையில் இருந்த இத்திருக்கோயிலை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை உரிய முறையில் பழுதுபார்த்துள்ளமையை துறை வெளியீடான தமிழகம் (Damilica) டிசம்பர் 1970 இதழில் பக்கம் 36ல் உள்ள நிழற்படங்களை நோக்குவதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. இக்கோயில் தற்போது வழிபாட்டில் உள்ளது. ![]() பழுதுபட்ட நிலையில் திருக்கோயில் ![]() தொல்லியல் துறை சீரமைப்பிற்குப்பின் திருக்கோயில் அமைப்பு கோயில் கிழக்குப் பார்வையாக அமைந்துள்ளது. கோயில் வாயிலில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியுள்ளார். கருவறையில் சிவலிங்க வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். இக்கோயில் கட்டுமானம் விமானம் மற்றும் அர்த்த மண்டபத்தை உள்ளடக்கியுள்ளது. பாதபந்தத் தாங்குதளத்தின் மீதெழும் விமானம் ஒரு தள வேசரமாக நாகர ஆதிதளத்துடனும் வேசர கிரீவ சிகரங்களுடனும் அமைந்துள்ளது. ஸ்தூபம் விழுந்துவிட்டதால் காணப்படவில்லை. விமான ஆதிதளத்தில் மூன்று கோட்டங்களும் மண்டபத்தில் இரண்டு கோட்டங்களும் அமைந்துள்ளன. இவற்றுள் மண்டபத்தின் தெற்குச் சுவரில் அமைந்துள்ள கோட்டத்தில் அமைந்துள்ள விநாயகரின் சிற்பம் மட்டும் பழமையானது. இதர சிற்பங்கள் அண்மைய காலத்தவை. ![]() தாங்குதளம் தாங்குதளம் பத்ம உபானம், ஜகதி, எண்பட்டைக் குமுதம், கம்புகள் தழுவிய கண்டம் பட்டிகை முதலான உறுப்புக்களுடன் அமைந்துள்ளது. தாங்குதளத்திற்கு மேலமைந்த வேதிகையின் மீது சுவர்ப்பகுதிகள் எழுகின்றன. அரைத்தூண்களால் பகுக்கப்பட்டுள்ள ஆதிதளச் சுவரின் மையத்தில் கோட்டங்களுக்கான அகழ்வு காணப்படுகிறது. கோட்டங்களின் பக்க அரைத்தூண்களுக்கு மேல் கபோதத்துடனான கூரைப்பகுதி காட்டப்பட்டிருப்பது சிறப்பு. இக்கபோதம் விமான கோட்டங்களில் மட்டும் காணப்படுகிறதன்றி மண்டபக் கோட்டங்கள் இரண்டிலும் காணப்படவில்லை . கோட்டங்களுக்கு மேல் மகரதோரணங்கள் காணப்படுகின்றன. தூண்களின் வெட்டுப் போதிகைக் கரங்கள் உத்திரம் தாங்குகின்றன. வலபியில் வழக்கமாகக் காட்சியளிக்கும் பூதங்களுக்கு பதில் தாமரை இதழ்கள் போன்ற வேலைப்பாடுகள் காணப்படுவது சிறப்பு. கபோதத்தில் அமைந்துள்ள நாசிக்கூடுகளில் சிற்றுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கூரைப் பகுதியின் மேல் தென்மேற்கு மற்றும் வடமேற்கு மூலைகளில் இரண்டு கர்ணக் கூடுகள் காட்சியளிக்கிறன. ![]() வடபகுதி கிரீவக் கோட்டத்தில் பிரம்மா. மகாநாசியில் விமானப் புடைப்புச் சிற்பம் வேசர கிரீவத்தின் நாற்புறங்களிலும் கிரீவக் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அமர்ந்த நிலையில் தெற்கே தட்சிணாமூர்த்தி, மேற்கில் யோக நரசிம்மர், வடக்கே பிரம்மா முதலான தெய்வத் திருவுருவங்களைக் காணமுடிகிறது. தெற்கு மற்றும் வடக்கு கிரீவக்கோட்டங்களின் இரு புறங்களிலும் நந்திகள் காணப்படுகின்றன. கிரீவக் கோட்டங்களுக்குமேல் பெருநாசிகைகள் அமைந்துள்ளன. அவற்றுள் ஏகதள விமானங்கள் செதுக்கப்பட்டுள்ளன. விநாயகர் கோட்டம் திருக்கோயிலில் காணப்படும் ஒரே கோட்ட தெய்வமான தென் மண்டபக் கோட்ட விநாயகர் பத்ம பீடத்தின் மீது லலிதாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். இவரது பின் கரங்கள் அங்குசம் மற்றும் பாசத்தை ஏந்தியுள்ளன. முன்கைரங்களில் தந்தம் மற்றும் மோதகம். விநாயகர் அமர்ந்துள்ள பத்ம பீடத்தின் கீழ்ப்பகுதியில் அவரது வாகனமான மூஷிகமும் பூதகணங்களும் அழகாகக் காட்சியளிக்கின்றன. கோட்டத்தின் இருபுறங்களிலும் பக்கச் சுவர்களில் இரு பூதகணங்கள் பலாப்பழம் முதலியவற்றை ஏந்தி நிற்கின்றன. இக்கோயிலில் அமைந்துள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படும் கரிகாலச் சோழப் பிள்ளையார் இவராகலாம். ![]() தென் மண்டபக் கோட்ட விநாயகர் மகர தோரணச் சிற்பங்கள் தென் மண்டப விநாயகர் கோட்டத்திற்குமேல் காணப்படும் மகர தோரணச் சிற்பம் சிறப்பானது. இதில் மூன்று காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ![]() தென்மண்டபத் தோரணக் காட்சிகள் வலப்பக்க ஓரத்தில் அன்னை இறைவனின் மடியில் அமர்ந்திருக்க இறைவன் அவரை அணைத்தவாறு உள்ளார். தோரணத்தின் நடுவே கணபதி நாட்டியத்தில் ஈடுபட்டிருக்க அவருக்கு இணையாக நிற்கும் கணமொன்று கணபதிக்கு மோதகம் தரும் நிலையில் காணப்படுகிறது. இடப்புறத்தில் மரத்தடியில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் இறைவனை உமாதேவியார் வழிபடும் காட்சி செதுக்கப்பெற்றுள்ளது. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் தூபம், முக்காலியின் மீது சங்கு, தீபம், மணி முதலான பூஜைப்பொருட்கள் காணப்படுகின்றன. விமான தெற்கு கோட்டத்தின் மேலுள்ள மகரதோரணத்தில் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் அமர்ந்திருக்க அவரது எதிரில் தேவி பணிவுடன் நின்றுகொண்டிருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. விமான மேற்குக் கோட்டத்தின் தோரணத்தில் தாமரையும் வடக்கு கோட்ட தோரணத்தில் அன்னமும் காணப்படுகின்றன. இவை திருமால் மற்றும் பிரம்மனுக்கான கோட்டங்களைக் குறிப்பிடுவதாகலாம். வடக்கு மண்டபக் கோட்டத் தோரணத்தில் சிம்மத்தின் மீது தேவி அமர்ந்திருக்கும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. நாசிக்கூடுகளில் குறுஞ்சிற்பங்கள் இவற்றில் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடும் காளி, தேவி, மயில், நாரை, குரங்கு முதலான பல அடியவர்கள் காட்டப்படுகிறார்கள். நாசிக்கூடொன்றில் லிங்கத் திருமேனி மூன்றாகக் காட்சிதரும் திரியம்பகேசுவரரும் சித்தரிக்கப்பட்டுள்ளார். மண்டபம் மற்றும் விமானத்தில் இதுபோன்று 24 நாசிக்கூடுகள் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. ![]() நாசிக்கூடுகளும் குறுஞ்சிற்பங்களும் கல்வெட்டுச் செய்த இக்கோயிலில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. கோப்பரகேசரிபற்மற்கு யாண்டு 15வது எனத் துவங்கும் அக்கல்வெட்டு சோழ மன்னர் கோப்பரகேசரிவர்மரின் 15ம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாக விளங்குகிறது. மூத்தவாள் பெற்ற கைக்கோளரில் ஆச்சன் சேனாச்சன் என்பவர் இந்நகரத்தின் கடும்பிடுகு மேற்காப்பில் இருந்த தெற்கிருந்த நக்கர் கோயில் என்றழைக்கப்பட்ட இத்திருக்கோயிலில் இருந்த கரிகாலச் சோழப் பிள்ளையார் எனும் தெய்வத்துக்கு திருவமுது படைப்பதற்கு வாய்ப்பாகத் தனது நிலத்தை விற்க முன்வர, அந்நிலத்தை காஞ்சிபுர மாநகரத்தார் விற்று கொடையை நிறைவேற்றியுள்ளனர். விற்கப்பட்ட நிலத்துக்கு உரியவர் இவரே என்பதை ‘இந்நிலம் உடையார்’ என்று கல்வெட்டு தெளிவாகக் குறிப்பிடுகிறது. இக்கொடை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இதே நன்கொடையாளர் கரிகாலச்சோழப் பிள்ளையாருக்கு சந்தி விளக்கொன்று (மாலை விளக்கு) ஏற்றி வைப்பதற்கு வாய்ப்பாக மூன்று பழங்காசுகள் கொடையளிக்க அவற்றை இக்கோயிலைச் சேர்ந்த காணியுடைய பாதபதி எங்குச்சோழந் தரணேந்திர பட்டனும் அவரது தம்பி திருவேகம்ப பட்டனும் பெற்றுக்கொண்டு கொடையை நிறைவேற்றச் சம்மதித்தனர். முடிவுரை காஞ்சி மாநகரின் பழம்பெருமைமிக்க கோயில்களுள் பல பல்லவர் கலைப்படைப்புக்களாகத் திகழ்ந்தாலும் நகருக்கு மத்தியில் அமைந்திருக்கும் இச்சோழர்காலக் கற்கோயில் வரலாற்றுச் சிறப்பையும் கலைச்சிறப்பையும் தன்னுள் கொண்டு சிறந்து விளங்கும் திருக்கோயில் என்பதில் ஐயமில்லை. உதவி நூல்கள் 1. தமிழகம் Damilica Dec 1970 - பக்கம் 36. தொல்லியல் துறை வெளியீடு 2. காஞ்சிபுரம் சொக்கீசர் திருக்கோயில் (கட்டுரை) - ச.அரிகரன் - தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் (நூல்) - தொகுதி 1. மா. சந்திரமூர்த்தி, பக்கம் 96-99 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் - தொகுதி 4 - சீ.வசந்தி - இரா.சிவானந்தம், பக்கம் 70-71. தொல்லியல்துறை வெளியீடு. 2013. 4. Early chola art - S.R.Balasubrahmanyam, 1966: Page 75-76. 5. தொல்லியல் சுற்றுலா - தொல்லியல் துறை வெளியீடு 2010. பக்கம் 21. 6. கௌசிகீச்வரர் கோயில், காஞ்சிபுரம் (கட்டுரை) - க.சங்கரநாராயணன் ஆய்வு உதவி திருக்கோயில் ஆய்விற்கு உதவிய திரு.தர்மலிங்க குருக்கள், காஞ்சிபுரம் அவர்களுக்கு நன்றி. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |