![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
தொடர்:
பல்லவர் பாதையில்
நரசமங்கலத்து முற்றுப் பெறாத பெரிய குடைவரை அமைந்திருக்கும் குன்றில் இரண்டு கற்றளிகள் அமையப் பெற்றுள்ளன. குடைவரை அமைந்திருக்கும் மலைப்பகுதிக்கு நேர் உச்சியில் ஒரு கற்றளியும், மலை மேல் கோயிலுக்கு வடபுறத்தே சற்றுத் தாழ்வான பகுதியில் மற்றொரு கற்றளியும் அமைந்துள்ளன. இவ்விரண்டு கற்றளிகளுமே கிழக்குப் பார்வையாக அமைந்துள்ளன. ![]() நரசமங்கலம் பெரிய குடைவரையின்மேல் இரு கற்றளிகள் குன்றினை அடைய அமைக்கப்பட்டுள்ள படிவரிசை முடிவில் அமைந்திருக்கும் வடபுறக் கற்றளி கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் முகமண்டபம் ஆகிய கட்டுமானக் கூறுகளுடன் அமைந்துள்ளது. ![]() படிவரிசையும் கற்றளியும் ![]() கற்றளி மலையுச்சியிலுள்ள கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அவ்வூர் மக்களால் சிவன் கோயிலென்று அழைக்கப்படும் இக்கோயில் பாதபந்த தாங்கு தளத்தின் மீது எழுகிறது. தாங்குதளத்தில் உள்ள மூன்று கல்வெட்டுகள் ஊரொன்று விற்பனை செய்யப்பட்டதன் தொடர்பான செய்திகளை அளிப்பதாக அறிகிறோம். ![]() இரண்டாவது கற்றளி இக்கோயில், கருவறையும், முகமண்டபமும் கொண்டமையப் பெற்றுள்ளது. கருவறையில் லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு முன்னால் நந்தி, பலித்தளம், கொடித்தளம் ஆகியவை அமைந்துள்ளன. மாமண்டூர் நரசமங்கலக் குடைவரைகள் - முழுமைச்சாரம் மாமண்டூர் நரசமங்கலத்து குடைவரைத் தொகுதியில் குன்றுத் தொடரின் தென்புறத்தே அமைந்துள்ள இரண்டு குடைவரைகளும் நரசமங்கலம் வருவாய் எல்லைக்கும், இடையிலுள்ள ஓடைக்கப்பால் வடபுறத்தே உள்ள இரண்டு குடைவரைகளும் மாமண்டூர் வருவாய் எல்லைக்கும் உட்பட்டதாகும். நரசமங்கலம் எல்லையிலுள்ள முற்றுப் பெறாத சிறிய குடைவரையும், முற்றுப் பெறாத பெரிய குடைவரையும் தனித் தனியே குன்றுகளில் அமையப் பெற்றுள்ளன. பெரிய குடைவரை அமைந்துள்ள குன்று சிறிய குடைவரை அமைந்துள்ள குன்றினை விட அள்வில் சற்றுப் பெரியதாகும். மாமண்டூர் எல்லையிலுள்ள வடக்கு குடைவரையும், ருத்ர வாலீஸ்வரமும் குன்றின் சரிவில் அமையப் பெற்றுள்ளன. நான்கு குடைவரைகளிலும் முகப்புக் கூரையுறுப்புகளாக உத்திரமும், வாஜனமும் அமையப் பெற்றுள்ளன. இந்நான்கு குடைவரைகளின் கருவறையின் முன்சுவர்கள் நான்முக அரைத் தூண்களைப் பெற்றுள்ளன. முதற் குடைவரை முகப்புத் தூண் வரிசையை அடுத்து நீள் சதுர வடிவில் முகமண்டபமும், பின் சுவரில் மூன்று கருவறைகளுக்கான அமைப்பும் காட்டப் பட்டுள்ளது. இரண்டாம் குடைவரை இந்நான்கு குடைவரைகளுள் அளவில் பெரியதாகும். முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகிய பகுதிகளைக் கொண்டது. இக்குடைவரையின் சிறப்பாக கருவறைகள் அமைப்பினைக் கூறலாம். முகமண்டபத்தின் தென் மற்றும் வட புறங்களில் இரண்டு கருவறைகளும், அர்த்தமண்டபத்தின் பக்கத்திற்கொன்றாக இரண்டு கருவறைகளும், அர்த்தமண்டபப் பின்சுவரில் ஐந்து கருவறைகளும் ஆக மொத்தம் ஒன்பது கருவறைகளைக் கொண்டு அமையப் பெற்றுள்ளது இதன் சிறப்பாகும். மூன்றாவது குடைவரை, முகப்பு, முகமண்டபம், அர்த்தமண்டபம், கருவறைகள் ஆகிய கூறுகளைப் பெற்றுள்ளது. மூன்று கருவறைகளும் அர்த்தமண்டபப் பின் சுவரில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கருவறை வாயிலிலும் பக்கத்திற்கொருவராக இரண்டு காவலர்கள் உள்ளனர். இக் குடைவரையில் முதலாம் இராஜராஜரின் கல்வெட்டொன்றும், பரகேசரிவர்மரின் கல்வெட்டொன்றும் காணப்படுகிறது. நான்காம் குடைவரை முகப்பு, முகமண்டபம், கருவறை ஆகிய அமைப்புகளை உடையது. அர்த்தமண்டபம் இன்றி முகமண்டபத்தின் பின் சுவரில் ஒரு கருவறை அமைந்துள்ளது. கருவறை, முகமண்டபச் சுவரிலிருந்து பிதுக்கமாக சற்று முன்னோக்கி இழுக்கப்பட்டுள்ளது. கருவறையின் இருபுறத்திலும் காவலர்கள் இல்லை. இந்நான்கு குடைவரைகளுள் வடக்குக் குடவரைத் தூண்களில் மட்டுமே தாமரைப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முகமண்டபத் தென் சுவரில் மகேந்திரவர்மரின் கல்வெட்டொன்று காணப்படுகிறது. முதலாம் மகேந்திரரின் பல்வேறு கலைமுயற்சிகளில் மாமண்டூர் - நரசமங்கலம் குடைவரைகள் தனித்ததொரு சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |