![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 119
![]() இதழ் 119 [ மே 2015 ] டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையச் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம். அனைவரும் நலந்தானே?
குறிப்பிடத்தக்க வரலாற்று ஆளுமைகளையும் நிகழ்வுகளையும் முன்னிறுத்தி அவ்வப்போது சிறப்பிதழ்களை வெளியிடுவது நமது வழக்கம். அந்த வரிசையில் திருச்சி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தின் பணிகளை முன்னிறுத்தி கௌரவிக்கும் இதழாக இந்தத் திங்களிதழ் வெளியாகியுள்ளது. வரலாறு மையத்துடனும் மைய ஆய்வாளர்களுடனுமான நமது தொடர்பு பத்தாண்டுகளைத் தாண்டிவிட்டது என்றாலும் மையத்தின் பணிகளை குறிப்பிட்டுச் சிறப்பிக்கும் வாய்ப்பு இத்தனை தாமதமாகத்தான் வாய்த்திருக்கிறது. இந்த நல்லோரையில் மையத்தின் முக்கிய ஆய்வாளர்களான இயக்குனர் முனைவர் இரா.கலைக்கோவன், பேராசிரியர்கள் முனைவர்கள் மு. நளினி மற்றும் அர. அகிலா ஆகிய மூவருக்கும் கும்பகோணம் ரோட்டரி கிராண்ட் நிறுவனம் “வாழ்நாள் சாதனையாளர்கள்” விருதுகளை அளித்து கௌரவப்படுத்தியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ![]() முனைவர் இரா.கலைக்கோவன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குபவர் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் அவர்கள். திரு.கலைக்கோவனின் வலப்புறம் திரு.சு.சீதாராமன் பெரிய அளவில் பொது அங்கீகாரமோ புகழோ இல்லாத வரலாற்றாய்வுத் துறையில் 33 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுபட்டிருப்பது என்பதே சாதாரண பணியல்ல. இந்த மூவருக்கும் வரலாற்றாய்வு என்பது வாழ்வாதாரமான தொழிலும் அல்ல. மூவரில் ஒருவர் கண் மருத்துவர். இருவர் கல்லூரிப் பேராசிரியர்கள். இவர்கள் தொடர்ந்து ஈடுபடும் வரலாற்றுப் பணிக்குப் பெரிய அளவில் பொருளாதாரப் பின்புலமும் கிடையாது. முற்றிலும் நண்பர்களையும் உறவினர்களையும் வரலாற்றில் ஆர்வம் கொண்ட நல்லுள்ளங்களையும் நம்பியே இவர்களது பணி இத்தனை காலமும் நடைபெற்றுள்ளது என்பது ஆச்சரியமானது. இத்தனை நெருக்கடிகளுக்கிடையில் நின்றுகொண்டு இவர்கள் கடந்த முப்பத்து மூன்றாண்டுகளில் சாதித்துள்ளதை பெரிய பின்புலமுள்ள பல்கலைகளும் நிறுவனங்களுமே சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. மகத்தான தொடர் உழைப்பின் பயனாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுக்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட புத்தகங்கள் - ஆய்விதழ்கள் என்று இந்த சாதனைகள் பிரம்மாண்டமாக விரிகின்றன. ![]() முனைவர் இரா.கலைக்கோவன் ஏற்புரை. 'கோரிக்கைகளுக்காக மட்டும் கோயில்களை அணுக வேண்டாம்!' ஆனால் இந்தச் சாதனைகளையெல்லாம் தாண்டி மையத்தாரின் மிகவும் குறிப்பிடத்தக்க பணியாக ஒன்றைச் சுட்ட வேண்டுமானால் அது அடுத்த தலைமுறை திருக்கோயில் ஆய்வாளர்களை உருவாக்க அவர்கள் எடுக்கும் முயற்சியே எனலாம். பொறியியல் வல்லுனர்களையும் கணிப்பொறி வல்லுனர்களையும் கட்டுமானத் தொழிலதிபர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் வரலாற்று மாணவர்களாக்கி கோயில்களில் மேல் காதல் கொள்ளச் செய்து மெல்ல மெல்ல அவர்களை ஆய்வாளர்களாகவும் அறிஞர்களாகவும் ஆக்கும் இரசவாதம் இவர்களின் பணியை இன்னொரு தளத்தில் நிறுத்துகிறது. ![]() வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முனைவர் மு.நளினி, துணைப் பேராசிரியை, சீதாலட்சுமி இராமஸ்வாமி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி தாங்கள் அறிந்துள்ளதை தாங்கள் மட்டுமே வைத்துக்கொண்டு பயன் துய்க்காமல் அதனை ஆர்வமுள்ளோர் அனைவரிடமும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று எண்ணும் நினைப்பே மையத்தாரின் தலையாய சாதனை எனலாம். வெளியுலகம் அதிகம் அறியாத இந்தச் சாதனைகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். அவை பரந்துபட்ட தமிழுலகைச் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே இந்தச் சிறப்பிதழை உருவாக்கக் கருதினோம். அதற்காகவே சென்ற இதழில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டோம். இம்மூவரையும் வாழ்நாள் சாதனையாளர்களாக கௌரவிக்க இதுதான் சிறந்த தருணம் என்று இறைவன் கருதினான் போலும். ![]() வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் முனைவர் அர.அகிலா. உதவிப் பேராசிரியை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, முசிறி, திருச்சிராப்பள்ளி கும்பகோணம் எஸ். ஆர். எஸ்டேட்ஸ் கட்டுமானத் தொழிலதிபரும் நமது ஆசிரியர் குழு உறுப்பினருமான ரோட்டேரியன் திரு. சு.சீதாராமன் அவர்கள் குறுகிய காலத்தில் இந்த விருதுக்கான முழு முயற்சிகளை எடுத்து விழாவையும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். அவருக்கு நன்றி கூறுவது நமக்கு நாமே நன்றி கூறுவதற்கு ஒப்பாகும் என்பதால் வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். ![]() முனைவர் அர.அகிலாவின் ஏற்புரை சென்ற ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்ற விழாவில் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. கோவி. செழியன் அவர்களால் வழங்கப்பட்ட இந்த விருதுகள் வாழ்நாள் சாதனைக்காகவும் (Lifetime Achievement) மேற்கொண்ட பணியில் சிறந்து செயலாற்றியமைக்காகவும் (Vocational Excellence) திரு. இரா.கலைக்கோவன், பேராசிரியர்கள் மு. நளினி மற்றும் அர.அகிலா ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டன. ![]() இந்து நாளிதழ் செய்தி விருதுகளையும் அங்கீகாரங்களையும் எதிர்பார்த்து எவரும் வரலாற்றாய்வுப் பணிகளை மேற்கொள்வதில்லைதான். என்றாலும் அந்த அங்கீகாரத்தை வழங்க வேண்டிய பொறுப்பு சமுதாயத்திற்கு உள்ளது. அந்த முறையில் இந்த அங்கீகாரத்தை வழங்க முன்வந்த ரோட்டரி கிராண்ட் கும்பகோணம் நிறுவனத்தாருக்கும் செயலாளர் பொருளாளருக்கும் நிறுவன உறுப்பினர்களுக்கும் உடன் நின்று உதவிய அனைத்து நண்பர்களுக்கும் வரலாற்றுலகின் சார்பில் கரங்குவித்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் வாழ்க்கையை வரலாற்றோடு ஒட்டி அமைத்துக் கொண்டு அதனைத் தெளிவாக அறிந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் அடுத்தவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கும் வாழ்வின் முக்கியமான முப்பதாண்டுகளை மனமுவந்து செலவிட்ட இம்மூவரையும் ‘வாழ்நாள் சாதனையாளர்கள்’ என்று அழைக்காமல் வேறு என்னெவென்று அழைப்பது? இவற்றையெல்லாம் வரலாற்றில் உண்மையான அன்பும் அக்கறையும் கொண்ட உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் வேறு எவருடன்தான் பகிர்ந்து கொள்வது? அன்புடன் ஆசிரியர் குழுவின் சார்பில் கோகுல் சேஷாத்ரி. |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |