![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [182 Issues] [1805 Articles] |
Issue No. 29
![]() இதழ் 29 [ நவம்பர் 16 - டிசம்பர் 15, 2006 ] ஓவியர் சில்பி சிறப்பிதழ் ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
வாசகர்களுக்கு வணக்கம்.
சிலருக்கு கலை என்பது பொழுதுபோக்கு. சிலருக்கு நேரவிரயம். வேறு சிலருக்கு அது சில்லரை அல்லது மொத்த வியாபாரம். மிகச் சில பேருக்குத்தான் கலை என்பது ஆன்ம இராகம். அந்தச் சிலருள் குறிப்பிட்ட பேருக்குத்தான் கலை என்பது வாழ்க்கை. அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சிலருள்ளும் ஓரிரண்டு பேர்க்குத்தான் கலை என்பது மூச்சு. உயிர்க்காற்று. உதிரம். இந்த மாகலைஞர்கள் தம் வாழ்வை கலைக்காக அர்ப்பணிக்கிறார்கள். அப்படிச் சொல்வது கூட தவறு. கலை வேறு இயல்பு வாழ்க்கை வேறு என்று இரட்டை வாழ்வு வாழாமல் - வாழ முடியாமல் - வாழத் தெரியாமல் - கலையே வாழ்வாக, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் தெய்வீகக் கலையை வெளிப்படுத்தும் மணித்துளிகளாக அவர்கள் மாற்றிக்கொள்கிறார்கள். ஆன்மாவின் இரகசிய தாகங்களை, அறிவு தொடமுடியாத ஞானத்தின் சிகரங்களை, வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களை இவர்கள் தம் கலையால் வெளிப்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் அத்தி பூத்தார்போல் எப்போதோ ஒரு முறைதான் தோன்றுகிறார்கள். பெரும்பாலானோர் தாம் வாழும் காலத்தில் புரிந்துகொள்ளப்படாமலே இறந்து போகிறார்கள். இன்னும் சிலரோ தாம் வாழும் காலம் கழிந்து பல ஆண்டுகள் ஆன பின்னரும் சரிவரப் புரிந்து கொள்ளப்படாமல்தான் இருக்கிறார்கள். என்றாலும் அவர்களின் கலைப்படைப்புக்கள் ஆன்மாவிலிருந்து அறுந்து விழுந்த இரகசிய நட்சத்திரம் என்பதால் அவர்களின் அத்தனை கலாவீரியத்தையும் அவை உள்வாங்கி அமர்ந்திருக்கின்றன. தாம் புரிந்துகொள்ளப்படும் நாளுக்காக அவை இரகசிய நோன்பு நோற்கின்றன. பசியோடு தம்மைத் தேடி வருபவரிடம் படையல் வைக்கின்றன. இப்படிப்பட்ட மாகலைஞர்களை தமிழகம் பெரும்பாலும் புரிந்துகொண்டதில்லை. மதித்ததில்லை. போற்றியதில்லை. புரந்ததில்லை. வாழும் காலத்தை அரைவயிற்றுப்பட்டினியோடுதான் அவர்களில் பெரும்பாலானோர் கழித்துள்ளனர். உலகம் காணாத ஒப்புயர்வற்ற கலைஞர்கள் இத்தனை இடர்பாடுகளையும் மீறித் தமிழகத்தில் தொடர்ந்து தோன்றிக்கொண்டிருப்பது ஏதோ நமது மூத்தோர் செய்த புண்ணியம்தான் என்று சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட அமர கலைஞர்களுள் ஒருவர்தான் அமரர் சில்பி. கவனிப்பாரற்றுத் தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் திருக்கோயில்களின் கலைச் செல்வங்களைக் கோட்டோவியங்களிலும் வண்ண ஓவியங்களிலும் பதிவாக்க வேண்டும் என்கிற வீரியத்துடனும் முனைப்புடனும் வாழ்நாள் முழுவதும் அவருடைய பாதங்கள் பயணப்பட்டன. கேமராக்களில் பதிவாக்க முடியாத கர்ப்ப கிருகத்தின் மூல மூர்த்தத்தை - அதன் உண்மைத் தன்மை கெடாதவாறு - அவருடைய தூரிகை படம்பிடித்தது. இன்றும் பெயர் தெரியாமல் இலட்சக்கணக்கான இல்லங்களின் பூஜையறைகளில் அவருடைய கலைப்படைப்புக்கள் இடம்பெற்று தெய்வங்களாகவே மாறிவிட்டன. பிழைப்புக்காக மட்டும் வாழ்க்கை நடத்திய கலைஞராக இருந்தால் கர்ப்பகிருக மூர்த்தங்களோடு மட்டும் தன் கலைப்பார்வையை நிறுத்திக்கொண்டிருந்திருப்பார். ஆனால் அவருள் கிளர்ந்த ஆன்மதாகம் அவர் பயணப்பட்ட ஒவ்வொரு திருக்கோயிலின் மூலை முடுக்குகளுக்கும் அவரது பார்வையைத் திருப்பியது. அவர் பயணித்த திருக்கோயில்களின் தேவகோஷ்டச் சிற்பங்கள், சிறு வடிவங்கள், கோபுரங்கள், செப்புத் திருமேனிகள் என்று அத்தனை கூறுகளையும் அது உள்வாங்கிக்கொண்டது - அழியாத கோட்டோவியங்களாக பதிவு செய்ய வைத்தது. அதுவரை பெரும்பாலான ஓவியர்களாலும் புகைப்படக் கலைஞர்களாலும் கண்டுகொள்ளப்படாமலிருந்த திருக்கோயில் கலைவடிவங்களை வியக்கத்தக்க முறையில் பதிவு செய்து பிரபல பத்திரிக்கைகளின் மூலம் வீடுதோறும் சென்றடைய வைத்தவர் என்கிற பெருமை திரு.சில்பி அவர்களுக்கு மட்டுமே உண்டு. அதேபோல வாழ்நாள் முழுவதும் தெய்வ உருவங்களையும் திருக்கோயில் படிமங்களையும் கட்டுமானங்களையும் மட்டுமே வரைந்தவர் என்பது அவரை மற்ற கலைஞர்களிடமிருந்து வேறு ஒரு தளத்திற்கு உயர்த்துகிறது. இந்திய அளவில் - ஏன், உலக அளவில்கூட இப்படி ஓவியத்தை ஒரு தவமாக வாழ்க்கை முழுவதும் மேற்கொண்ட கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பி.எம்.சீனிவாசன் என்னும் இயற்பெயர் கொண்டவரை சில்பி என்று நாமகரணம் சூட்டி அரவணைத்தவர் அக்காலத்தில் விகடன் பத்திரிக்கையில் மிகப்பிரபலமான ஓவியராய் இருந்த மாலி. பண்டைய சிற்பங்களைப் பதிவுசெய்வதற்காக வாழ்நாள் முழுவதையும் செலவிடப் போகிறவருக்கு இதைவிட நல்ல பெயர் அமைந்திருக்க முடியாதுதான். ![]() "தென்னாட்டுச் செல்வங்கள்" தொடரிலிருந்து ஒரு கோட்டோவியம். நன்றி - ஆனந்த விகடன் மற்றும் திரு.பசுபதி விகடன் முதலான பத்திரிக்கைகளின் வழியாகத்தான் சில்பி ஆரம்ப காலங்களில் வளர்ந்தார் என்று அறிகிறோம். குறிப்பாக தென்னாட்டுச் செல்வங்கள் என்னும் கட்டுரைத் தொடருக்கு தன்னுடைய அமர தூரிகையால் அழியாத இடத்தை சில்பி பெற்றுத்தந்தார். இந்நாள்வரை தென்னாட்டுச் செல்வங்கள் சில்பி ஓவிய இரசிகர்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து பல பத்திரிக்கைகளிலும் அவரது படைப்புக்கள் படையலாயின. பின்னாளில் தினமணிக் கதிரில் வெளிவந்த திரு.மைத்ரேயனின் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்னும் தொடருக்கு அவர் வரைந்த கோட்டுச்சித்திரங்கள் மிகப்பிரசித்தமானவை. வெவ்வேறு பத்திரிக்கைகள் வெளியிட்ட தீபாவளி மலர்கள்தோறும் அவர் வரைந்த திருவுருவங்கள் இடம்பெற்றன. விகடன் பத்திரிக்கை தன்னுடைய பவளவிழா மலரை சில ஆண்டுகளுக்குமுன் வெளியிட்டபோது அதில் இடம்பெற்றிருந்த அத்தனை தெய்வத்திருவுருவங்கள் யாவும் சில்பியின் படைப்புக்களே என்பது இன்றளவும் இத்துறையில் அவரை விஞ்சுவதற்கு ஆளில்லை என்பதையே சுட்டுகிறது. அமரர் சில்பியின் பார்வையும் கூர்மையும் அசாதாரணமானவை. மிக ஆழமாக அவருடைய ஓவியங்களையும் உண்மைச் சிற்பத்தையும் கவனித்தாலன்றி அவற்றின் அருமை முழுவதையும் உள்வாங்கிக் கொள்வது கடினம். "நல்லாயிருக்கு சார் !" அல்லது "நல்லாயில்லை சார் !" என்னும் மேம்போக்கான கருத்துக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவை அவருடைய படைப்புக்கள். சொல்லப்போனால் பல்வேறு ஆய்வுகளுக்கும் கருவூலமாகக்கூடிய கருப்பொருட்கள் அவருடைய ஓவியங்களின் இன்னமும் ஒளிந்துகொண்டிருக்கின்றன. உரிய ஆய்வாளருக்காக காத்துக்கொண்டிருக்கின்றன. இந்த அமர ஓவியரைப் பற்றி வரலாறு டாட்காமில் எழுதுவதற்குக் முக்கியமாக இரண்டு காரணங்களுண்டு. 1. தமிழகக் கலை வரலாற்றின் மிக முக்கியமான எச்சங்களாக மிச்சமிருக்கும் திருக்கோயில் பிரதிமங்களை உள்ளது உள்ளபடியே பதிவாக்கிய மாகலைஞர் என்பது ஒரு காரணம் 2. இவருடைய பதிவுகள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குமுன் குறிப்பிட்ட திருக்கோயில்கள் எவ்வாறு விளங்கின என்பதை அறிய உதவும் வரலாற்றுக் கருவூலங்களாக இருக்கின்றன என்பது மற்றொரு காரணம் இந்தப் பின்புலத்தில் இரண்டு கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. "Master's Storkes"என்னும் விரிவான ஆங்கிலக் கட்டுரை சில்பியின் கோட்டோவியங்கள் சிலவற்றை முன்னிறுத்தி அவற்றின் வழி அவருடைய கலை மரபை அடையாளம் காண முயற்சி செய்கிறது. "சில்பியே சிகரம்" என்னும் கட்டுரை அந்த ஓவியரின் வாழ்க்கைப் பயணத்தை சுருக்கமாக முன்வைக்கிறது. இக்கட்டுரையை தஞ்சை இராஜராஜீஸ்வரம் குடமுழுக்கு விழா மலரில் வெளியிட்ட பதிப்பாசிரியர்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். இந்தத் தலையங்கத்தை "மறக்கப்பட்ட மாகலைஞன்" என்ற தலைப்பில் நாம் எழுதுவதற்கும் கூட பல காரணங்களுண்டு. வாழ்நாள் முழுவதையும் ஒரு தவமாக மேற்கொண்டு கலை சமைத்த சில்பியின் படைப்புக்களை இப்போது பழைய பத்திரிக்கைகளிலும் தீபாவளி மலர்களிலும் காலண்டர்களிலும்தான் தேடியாகவேண்டும். அவருடைய கோட்டோவியங்களையும் வண்ண ஓவியங்களையும் ஒரு புத்தகமாகப் போடுவதற்கு இங்கே நாதியில்லை. அதுகூடப் பரவாயில்லை. இப்படியொரு புத்தகம் வரவில்லையே என்று ஆதங்கப்படும் ஆத்மாக்களைக்கூட விரல்விட்டு எண்ணிவிடலாம் என்பதை எண்ணும்போதுதான் நெஞ்சம் கொதித்துப் போகிறது. இதற்காக யாரை நோவது என்று தெரியவில்லை. ஒரு மாகலைஞன் இருந்திருக்கிறான் - அவனுடைய படைப்புக்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் உரியவை அல்ல, அவை இந்தியாவுக்கே - ஏன் உலகத்திற்கே உரியவை என்கிற முனைப்போடு அவருடைய படைப்புக்களை வெளியிட வேண்டுமென்று ஒருவருக்குக்கூடவா தோன்றாது ? அவரைப் பற்றிய ஒரு நினைவு மலரை வெளியிட்டோ அவருடைய கோட்டோவியப் படைப்புக்களை மீண்டும் பிரசுரித்தோ அந்தக் கலைஞனை மீண்டும் புதிய தலைமுறைக்கு சரியான முறையில் அடையாளம் காட்ட வேண்டுமென்கிற முனைப்பு யாருக்குமேவா எழாது ? ஒரு சில பக்திப் பத்திரிக்கைகள் அவ்வப்போது அவருடைய பழைய ஓவியங்களை சப்தமில்லாமல் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனதான் - ஆனால் அவற்றில் ஒரு வார்த்தைகூட அந்தக் கலைஞனைப் பற்றி இல்லை. அவற்றைப் பொருத்தவரை சில்பியின் ஓவியங்கள் நல்ல "space fillers" - அவ்வளவுதான். இவற்றையெல்லாம் முனைப்போடு கவனிப்பாரும் இல்லை. எடுத்துச் சொல்வாரும் இல்லை. கண்டுகொள்வாரும் இல்லை. "அவனவனுக்கு ஆயிரம் வேலை இருக்கு சார் - இதையெல்லாம் யாரு கவனிக்கறாங்க ?" - நாம் மக்களா மாக்களா என்பது பல சமயங்களில் சந்தேகமாக இருக்கிறது. சில சமயங்களில் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. சில்பி உலகின் வேறு மூலையில் - வேறு தளத்தில் - பிறந்திருந்திருந்தால் அவரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடியிருப்பார்கள். அத்தனை தூரம் போவானேன் ? இந்தியாவிலேயே சீக்கியர்கள் தங்கள் சமய குருக்களை அற்புதமான ஓவியங்களாக - திருவுருவங்களாக - வரைந்த ஒரு ஓவியரை எத்தனை தூரம் மதிக்கிறார்கள் தெரியுமா ? அத்தனை உயர்வைக் கொடுக்க நமக்குத் திராணியில்லாவிட்டாலும் ஒரு குறைந்தபட்ச மரியாதையாவது செய்யலாம் இல்லையா ? அரசாங்கம் அவருடைய வாழ்நாளிலோ அல்லது (கலைஞர்களை கெளவிக்கும் வழக்கமான முறைப்படி) அவர் இறந்த பின்போ கூட ஒரு கலைமாமணி விருது கொடுத்ததாகத் தெரியவில்லை. அப்படிக் கொடுக்கப்படாமலிருந்தால் வெட்கித் தலைகுனியவேண்டிய விஷயம் அது. ஒருவேளை திருக்கோயில்களையும் தெய்வங்களையும் மட்டுமே சுற்றிச்சுற்றி வந்ததால் அவர் அரசாங்கத்தின் "கவனத்தைக்" கவராமல் போய்விட்டாரோ என்னவோ. இதற்கு மேலும் என்ன எழுதுவது - எப்படி எங்களது உண்மையான ஆதங்கத்தை பகிர்ந்து கொள்வது என்று தெரியவில்லை. என்றாவது ஒருநாள் ஒரு இளைஞர் கூட்டம் வீடு வீடாக சில்பியின் ஓவியச் செல்வங்களைச் சேகரிக்கும். பதிப்பிக்கும். கர்வத்தோடு எழுந்து நின்று இந்த மாகலைஞன் எங்கள் ஊரனடா ! என்று உலகம் பார்த்து உரத்துச் சொல்லும் என்கிற ஒற்றை நம்பிக்கையோடு இந்தத் தலையங்கத்தை முடிக்கிறோம். நன்றி. வணக்கம். மிக்க அன்புடன் ஆசிரியர் குழு this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |