இதழ் - 68
|
எஸ்.ராஜம் - சங்கீத ஓவியம்
ஆசிரியர் குழு
|
|
|
வாசகர்களுக்கு வணக்கம்.
கடந்த மாதம் 29-ம் தேதி ஓவியரும் பாடகருமான எஸ்.ராஜம் இயற்கை எய்தினார். இரு இதழ்களுக்கு முன் தான் அவரைப் பற்றிய கட்டுரைகளை இங்கு இட்டிருந்தோம். இன்று அவர் நம்மிடையில் இல்லை.
பிறந்தவர் எல்லோரும் ஒரு நாள் மறைய வேண்டியவர்தான். இருந்தாலும் சிலரது மரணங்கள், எத்தனை காலம் தாழ்த்தி வந்தாலும் அநியாயமாகவே படுகிறது. எழுபதைத் தாண்டினாலே இன்றோ நாளையோ என்று நாளைக் கடத்துபவராகவோ, உடல் உபாதையால் அவதிப் படுபவராகவோ இருப்பவர் மறைந்தால், அந்த மரணம் நம்மை அதிகம் பாதிப்பதில்லை. ஆனால், தினமும் இசை பயில்வித்தும் ஓவியங்கள் தீட்டியும் கலைப் பணி செய்து கொண்டிருந்தவர் மறையும் போது, அவருக்கு வயது தொண்ணூறைத் தாண்டி விட்டது என்ற போதும், "இன்னும் இவர் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறதே. அவற்றை யார் முடிப்பது?", என்றெண்ணத் தோன்றுகிறது.

1920-களில் இருந்து, 1980-கள் வரை உள்ள காலத்தில் சென்னையின் நிகழ்வுகளை விரல் நுனியில் வைத்திருந்தவர் ராஜம். பேசும் சினிமா நம் நாட்டில் பரவ ஆரம்பித்த காலத்தில் கதாநாயகனாகத் தோன்றி, அக் காலப்படப்பிடிப்பைப் பற்றி விரிவாகப் பேசக் கூடியவர் அவர். அவர் மறையும் போது, தமிழ் கதாநாயகர்களுள் மூத்தவராக இருந்தவர். தொலைக்காட்சி ஊடுருவலுக்கு முற்பட்ட காலத்தில், பிரபலமாக இருந்தவை வானொலி நிகழ்ச்சிகளே. சென்னையில் அகில இந்திய வானொலி ஆரம்பித்த இரண்டாவது நாளில் கச்சேரி செய்தவர் ராஜம். அதன் பின், மிகத் தரமான தயாரிப்புகள் மூலம் மக்களை மகிழ்வித்தவர் அவர். 'சமுதாயத்தில் வானொலியின் தாக்கம்' என்பது பற்றி கூற அவரை விட வேறொருவர் இருந்திருக்க முடியாது. பிரபலங்களின் தொடர்பு, பன்னாட்டுப் பயணம், உண்மையை மட்டுமே பேசும் பாங்கு, துல்லியமான நினைவாற்றல் என்று ஒரு வரலாற்றுப் பெட்டகமாக இருந்தவர் ராஜம். இசைத் துறையையும் ஓவியத் துறையும் தவிர வரலாற்றுத் துறைக்கும் ராஜத்தின் மறைவு பேரிழப்புதான்.
வரலாறு என்றால், பல நூறு வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்தவைதான் என்று ஒரு போதும் வரலாறு.காம் எண்ணியதில்லை. நம்மிடையே வாழும் வரலாறுகளாய் விளங்குபவர்களை இயன்ற வரை கௌரவப்படுத்துவதும் இவ்விதழின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று. அவ்வகையில், இந்த மாதம் மலரும் வரலாறு.காம் இதழை, எஸ்.ராஜத்திற்குக் காணிக்கை ஆக்குகிறோம்.
வரலாறு.காமில் இது வரை வந்த சிறப்பிதழ்கள் அனைத்தையும் மட்டற்ற மகிழ்ச்சியுடந்தான் வெளியிட்டோம். இந்த மாதம் மலரும் எஸ்.ராஜம் சிறப்பதிழை மிகுந்த வருத்தத்துடன் வெளியிடுகிறோம்.
விவாதி ராகங்களும், இந்தியப் பாரம்பரிய ஓவியங்களும் இருக்கும் வரை ராஜத்தின் பெயர் நிலைத்து நிற்கும்.
வாசல்
பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்
ஃபேஸ்புக்கில்
|
|