www.varalaaru.com
A portal for
South Indian History
 
72 இதழ்கள்...
1004 படைப்புக்கள் !
  Home    About US    Font Problems   
இதழ் - 52
தலையங்கம்
எங்கே போயின ஏரிகளும் குளங்களும்?
சுடச்சுட
சிவிகை பொறுத்தாரும் ஊர்ந்தாரும்
கதைநேரம்
சேரர் கோட்டை(சரித்திரத் தொடர்)
கலைக்கோவன் பக்கம்
திரும்பிப் பார்க்கிறோம் - 24
கலையும் ஆய்வும்
சிதையும் சிங்காரக் கோயில்கள் - 6

திரிபுவன வீரனே! பாண்டியாரியே! - முதல் பாகம்
பயணப் பட்டோம்
VIRTUAL TOUR ON KUNDRANDARKOIL - PART - IV
ஐராவதி சிறப்புப் பகுதி
ஐராவதி நூல் வெளியீட்டு விழா - ஒளிப்படத் தொகுப்பு (Videos)
இதரவை
அவர் - ஆறாம் பாகம்
இலக்கியச்சுவை
நீங்கல் சரியோ நீயே சொல்!
நூல்முகம்
பழந்தமிழர் பொறியியல் நுட்பத்திறன்
நீங்கல் சரியோ நீயே சொல்!


பிரியப்போகிறேன் என்று நீ சொன்னதுமே அவள் நெற்றி குழைந்தது. தோள்கள் நொடியில் மெலிந்தன. அடிவயிற்றில் அழகாய்த் தெரிகின்றன என்று நீ அடிக்கடி பாராட்டும் அந்த வரியடுக்குகளும் வாடின! பகல் எது இரவு எது என்பதுகூடத் தெரியாதவள் ஆனாள் தலைவி. பெய்யும் மழையில் நனையும் மலர்களைப் போல அவள் கண்களை நனைத்துப் பெருகுகிறது கண்ணீர். இவள் தனித்து வருந்துவாளே எனக் கருதாமல், பொருளீட்டவேண்டும் என்று கூறிப் பிரிய நினைக்கிறாயே! இது சரிதானா தலைவா?

பொருளீட்ட நீ செல்லவிருக்கும் வழி எளிமையானதா? வேங்கையை விரட்டிய யானை மதச்செருக்குடன் வழிச் செல்வாரை அலைக்கழிக்கும் நெறியல்லவா நீ செல்ல விரும்பியுள்ள வழி! அங்கு முள்ளம்பன்றிகள் மேய்வதாகச் சொல்கிறார்கள்!

அந்த வழியில் ஒரு காலத்தில் மக்களால் வணங்கப்படும் இடமாக, வளமாக இருந்த பொதியில் இன்று அழிந்துள்ளதாம்! அதைப் புதர்கள் முடியுள்ளனவாம். சுற்றுச் சுவரைப் பெரும் புற்றுகள் சூழ்ந்துள்ளனவாம் பெரிய கைகளையுடைய கரடிகள் அப்புற்றுகளைச் சூழ்ந்து சோற்றுக்காக ஆராய்வதாகவும் கூறுகிறார்கள். யாரும்வருவதில்லை என்ற நிலையில் அந்தப் பொதியிலில் நடப்பட்டிருந்த கந்தில் (தூண்) குடியிருந்த கடவுள்கூட இடம் நீங்கி வேறெங்கோ போய்விட்டாராம்!

ஆனால், நெடுங்காலம் அங்கு உறைந்திருந்த பற்றின் காரணமாகப் பொதியில் வாழ் புறாக்கள் மட்டும் தத்தம் துணைகளுடன் அங்கேயே தங்கியிருந்து இடையறாது ஒலி செய்து தங்கள் ஆற்றாமையைப் புலப்படுத்துகின்றனவாம். பெரிய, பெரிய கற்களால் சூழப்பட்ட நெடுந்தொலைவு ஊர்கள்அமைந்த அந்தத் தனி வழியில் தலைவியைப் பிரிந்து நீ செல்வது தேவைதானா?

ஈழத்துப் பூதன் தேவனாரின் (அகம் 307) இந்தப் பாடல் வழிபாடிழந்த பாலை நிலக் கோயில் ஒன்றின் படப்பிடிப்பைத் தருகின்றது. பொதியில் - கந்து - சுற்றுச் சுவர் - புறாக்கள் எனும் அந்த அமைப்பில், கந்திற்கு மாறாக எழுதணி கடவுளைக் காட்டுவார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் (அகம் 167). அவர் சுட்டும் பொதியிலைக் கடவுளைப் போலப் புறாக்களும் நீங்கினவாம்.

அகம் - 167.

தலைமகன் கூற்று

தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது

திணை : பாலை
ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்

வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின்
பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு
வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை,
விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே
இனிது உடன் கழிந்தன்று மன்னே; நாளைப்
பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச்
சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து
அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ,
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ்,
முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி
இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென,
மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து
எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப்
பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில்,
குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க்
கூர் முகச் சிதலை வேய்ந்த
போர் மடி நல் இறைப் பொதியிலானே?


இன்றும் கோயில்களில் கந்தாய் இலிங்கமும் சுற்றுச் சுவர்களும் புறாக்களும்தான் உள்ளன. ஆனால், 'பொதியில்' என்ற அழகான, இயல்பான, இனிமையான அந்தப் பொதுவுடைமைச் சொல்தான், 'கோயில்' என்ற தனியுடைமைச் சொல்லாக மாறிப்போய் நிலைத்துவிட்டது.

வாசல்     பரிந்துரைக்கவும் மின்னஞ்சலில்     ஃபேஸ்புக்கில்
இப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் இடலாம். We welcome your feedbacks. Please use the form below to provide the same.
 
பெயர் / Name
மின்னஞ்சல் / E-Mail
தங்கள் மறுமொழி /
Your Feedback
(C) 2008, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited.
web page hit counter