![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1800 Articles] |
Issue No. 3
![]() இதழ் 3 [ அக்டோபர் 15 - நவம்பர் 14, 2004 ] ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
'எங்கள் ஊரில் தஞ்சை பிரகதீசுவரரை விடப் பெரிய சிவலிங்கம் இருக்கிறது தெரியுமா?'
அந்த ஊர்மக்கள் இதைச் சொல்லக் கேட்டவுடன் நாங்களும் உங்களைப் போல்தான் அதிர்ச்சிக்குள்ளானோம். அப்படியானால் இந்தச் செய்தி ஏன் வெளியே யாருக்கும் தெரியவில்லை? எந்த மன்னரின் காலத்தில் கட்டப்பட்டிருக்கும்? என்பன போன்ற கேள்விகள் மனதைக் குடைய, உடனே காரில் ஏறிப் பறந்தோம். 'பெரம்பலூர் மாவட்டம் ஆறகளூர் என்ற ஊரிலிருக்கும் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்குமுன் அங்குள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த உதவுங்கள்' என்று, டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்திற்கு அழைப்பு வந்தது. அவ்வாறு அழைத்தவர்கள் அரும்பாவூர்த் தமிழ்ச்சங்கத்தை அமைத்து, அதில் ஒரு சிறு நூலகத்தையும் தம் சொந்த செலவில் வைத்து இளைஞர்களிடம் தமிழ்ப்பற்றை விதைக்கும் திரு. செல்வபாண்டியனும் அவரது நெருங்கிய நண்பர் தமிழ்த்திரைப்பட உதவி இயக்குனர் திரு. சரவணனும்தான். மையத்தினர் அவ்வழைப்பை ஏற்று, கடந்த அக்டோபர் 3-ம் தேதி ஆய்வுக்காக ஆறகளூர் நோக்கிப் பயணப்பட்டபோது, வரலாறு.காம் குழுவினரும் சேர்ந்து கொண்டோம். எங்களுக்கு அந்த ஊரில் நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தன. காலை 6 மணிக்கே திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு விட்டாலும், அரும்பாவூரில் சரவணனின் வீட்டில் அன்பான உபசரிப்புடன் காலை உணவை முடித்து விட்டு, ஆறகளூரை அடைய மணி 12 ஆகிவிட்டது. சரவணனின் வீட்டில் இருந்த எந்தக் குழாயைத் திருகினாலும் நல்ல தண்ணீர் வந்ததைப் பார்த்துக் கிருபாவுக்கும் பூங்குழலிக்கும் ஒரே ஆச்சரியம். சென்னையில் இதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. பயணநேரம் என்னவோ மூன்று மணிநேரந்தான். ஆனால், வழியெங்கும் விரவிக் கிடந்த புத்தர் சிலைகளைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டே சென்றதால்தான் அவ்வளவு நேரம். ஒரு காலத்தில் அந்தப் பகுதியில் புத்த மதம் தழைத்தோங்கியிருந்திருக்க வேண்டும். சைத்தியங்களும் விகாரைகளும் அங்கு இருந்திருக்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி என்ற பிக்குகளின் சரண கோஷங்கள் இரவு பகலாக அந்தப் பகுதிகளில் எதிரொலித்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் தெருவுக்கு ஒன்று வயலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அத்தனை புத்தர் சிலைகள் எப்படி வந்திருக்க முடியும்? அதிலும் அமர்ந்த நிலையிலிருந்த ஒரு சிற்பம் கிட்டத்தட்ட ஆறு அடிக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. இதில் வருத்தம் தரக்கூடிய சுவாரசியமான நிகழ்ச்சி என்னவெனில், 'இதை புத்தர் என்று யார் சொன்னது? இவர் கொங்குச் சாமியார்!' என்று அங்கே இருந்தவர்கள் கூறியதுதான். அடடா! இனவேற்றுமையை எதிர்த்த மகானுக்கு இப்படியொரு பட்டமா? அதை ரசித்துவிட்டு ஒருவழியாய் ஆறகளூரை அடைந்தோம். அவ்வூர்க் கோயிலின் குடமுழுக்கு ஏற்பாடுகளை முன்நின்று செய்யும் ஊர்ப்பெரியவர் திரு. வீராசாமி அவர்கள் இல்லத்தில் வடை பாயசத்துடன் தயாராக இருந்த மதிய உணவை ஒரு பிடி பிடித்துவிட்டு சிறிய மயக்கத்துடனேயே அங்கிருந்த விஷ்ணு மற்றும் சிவன் கோயில்களைக் காணச் சென்றோம். அடுத்த வீட்டில் இருப்பவர் யாரென்றே தெரியாமல் வாழும் சென்னை மாநரகத்தின் (எழுத்துப்பிழையல்ல) வாழ்க்கைமுறைக்குப் பழக்கப்பட்டுப்போன எங்களுக்கு, முன்பின் அறிந்திராத பதினைந்து பேருக்கு உணவு தயார் செய்து அதை இன்முகத்துடன் பரிமாறியதைக் கண்டது ஆச்சரியமாகத்தானிருந்தது. கைத்தொலைபேசியில் அழைத்த என் மனைவியிடமிருந்து, இப்போது சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது என்ற தகவலைக் கேட்டதும், ' .... நல்லார் ஒருவர் உளரேல்... ' நினைவுக்கு வந்து போனது. அங்கு ஆய்வு செய்து கொண்டிருந்தபோதுதான் அவ்வூரிலுள்ள சோழீசுவரத்தைப் பற்றிய மேலே உள்ள தகவலைத் தெரிவித்தனர் அவ்வூர் மக்கள். உடனே திரு. வீராசாமி ஐயா அவர்கள் நான் வழி காட்டுகிறேன் என்று கூறிவிட்டு டிவிஎஸ் 50 இல் முன்னே சென்றார். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் சென்ற பிறகு ஒரு மாட்டுக் கொட்டிலின் முன் வண்டியை நிறுத்தினார். ![]() பரவாயில்லையே! இந்த ஊரில் மாட்டுக்கொட்டிலைக் கூடக் கருங்கல்லில் கட்டியிருக்கின்றார்களே! என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தபோது, இந்தக் கோயிலைப் பார்க்க வந்தீங்களா? என ஊர்மக்கள் விசாரித்தனர். கோயிலா? அட! 'பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்' என்று பாரதி அன்று பாடியதை இவர்கள் இன்று நனவாக்கியிருக்கிறார்களே! என்று வியந்து கொண்டே உள்ளே நுழைந்தோம். அதாவது பள்ளர்கள் என்ற பிரிவினரை மேல்சாதி எனப்பட்டவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்ததால், பள்ளர்கள் வாழுமிடத்தையே கோயிலாகச் செய்து விட்டால் மேல்சாதியினரால் என்ன செய்துவிட முடியும் என்ற அர்த்தத்தில்தான் பாரதி பாடினார். ஆனால் இவ்வூர் மக்கள் ஒருபடி மேலே போய், கால்நடைகளைக் கூடத்தான் கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. ஆகவே அவை வசிக்கும் இடத்தையும் கோயிலாக ஆக்கிவிட்டால் அவை மிக்க மகிழ்ச்சியடையுமல்லவா என்ற எண்ணத்தில் அப்படி ஆக்கிவிட்டார்கள் போலிருக்கிறது. 'இருக்கிற கோயிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்' என்ற வரிகளின் படி வருங்காலத்தில் அதைப் பள்ளிக்கூடமாக ஆக்குவார்களா என்று தெரியவில்லை. 'இன்னும் அந்தப் பெருவுடையாரைக் கண்ணிலேயே காட்டவில்லையே? இதையெல்லாம் திரும்பி வரும்போது பார்த்துக் கொண்டால் என்ன?' என்று பொறுமையிழந்து கொண்டிருந்தபோதே, அந்தப் பெரியவர் மாட்டுக்கொட்டிலுக்குள் நுழைந்து பார்க்கச்சொன்னார். அந்த ஊர்க்காரர் ஒருவர் சாவியை எடுத்து வருவதாகச் சொன்னார். ஆடு மாடுகளை நாம் பார்த்ததில்லையா? எதற்காக இதைத் திறக்கப் போகிறார்? இங்கே என்ன இருக்கிறது? ஏதாவது புத்தர் சிலை இருக்குமோ? இருந்தாலும் இருக்கும். இந்தப் பகுதியில்தான் திரும்பிய பக்கமெல்லாம் புத்தர் அருள் புரிந்து கொண்டிருக்கிறாரே? நெல்வயலுக்கு நடுவில் இருக்கும்போது மாட்டுக்கொட்டிலுக்குள் இருப்பதில் என்ன ஆச்சரியம்? என்று எண்ணமிட்டபடி உள்ளே நுழைந்தோம். கதவைத் திறந்து, 'இதுதான் அந்தச் சிவலிங்கம்' என்றவுடன், அதிர்ச்சி விலகாமல் நாங்கள் ஒருவரையொருவர் மவுனமாகப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். சாதாரணமாகப் பல கோயில்களிலும் தென்படும் அளவில்தான் அந்த லிங்கமும் இருந்தது. 'பாவம். ஊர்மக்கள் தஞ்சைப் பெருவுடையாரைப் பார்த்ததில்லை போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டே வெளியில் வந்தோம். ![]() வெளியில் வந்தபிறகு இடதுபுறம் சென்று பார்த்தால், தாங்குதளம், சுவர், அரைத்தூண்கள், கோட்டங்கள், கபோதம் ஆகியவை இருந்தன. 'ஆஹா! மாத்தீட்டாங்கய்யா! மாத்தீட்டாங்க!' என்று வடிவேலு பாணியில் புலம்பிக்கொண்டே, மாட்டுத்தொழுவமாக மாற்றப்பட்ட அந்தக் கோயிலைக் கண்டு வேதனையடைந்தோம். கட்டட உறுப்புகளின் அமைப்பை வைத்து, இக்கோயில் பிற்காலச் சோழர்களின் பிற்பகுதியில் (12 ம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 13 ம் நூற்றாண்டின் முற்பகுதி) கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். இது என்ன? ஏதோ கல்வெட்டுப் போல இருக்கிறதே? நெருங்கிப் படித்துப் பார்த்தால், வாணகோவரையன் என்பவனால் எடுப்பிக்கப்பட்ட இக்கோயில் 12 ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தது என்ற தகவலைத் தெரிவித்தது. இக்கோயிலின் பெயர் தாயிலும் நல்ல ஈசுவரம் என்றும், வாணகோவரையனுக்குத் தாயிலும் நல்லான் என்ற இன்னொரு பெயர் இருந்ததையும் அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்த வாணகோவரையன் வேறு யாருமல்ல. நமது கதாநாயகன் வந்தியத்தேவனின் வழித்தோன்றல்தான். சோழ சாம்ராஜ்யத்துக்கு அடங்கி நடக்கும் சிற்றரசர்களாக இருந்த வாணர்குலத்தில் பிறந்து, கிஸ்தி, திரை, வரி, வட்டி எனச் சோழர்களிடமே வீரவசனம் பேசியவன். மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் இராஜராஜன் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் வீழ்ச்சியடையத் தொடங்கியபோது குறிப்பிடத்தகுந்த அளவு பெரியதொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் இந்த வாணகோவரையன். வாணர்கள் மட்டுமல்ல; மற்ற பல சிற்றரசர்களும் எதிர்க்க ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து அடக்கப்பட்டபோது வேறுவழியின்றிப் போராட்டத்தைத் திரும்பப்பெற்று அமைதியாக இருந்தனர். ஆனால் இன்று அரசு சற்றே வளைந்து கொடுக்க ஆரம்பித்ததும் மீண்டும் போராட்டத்தைத் துவங்குவதை இதனுடன் ஒப்பிடலாம். வரலாறு என்பது இறந்தகாலமல்ல. இன்றைய பல பிரச்சினைகளுக்குத் தீர்வு என்னும் வெளிச்சம் பாய்ச்சும் ஒளிவிளக்கு என்பது நிரூபணமாகின்றதன்றோ? இதற்காக, அரசாங்கங்களைச் சோழசாம்ராஜ்யத்துடனும் தொழிற்சங்கங்களைச் சிற்றரசர்களுடனும் ஒப்பிடுவதாகவோ அல்லது நாங்கள் வேலைநிறுத்த உரிமைக்கு எதிரானவர்கள் என்றோ நினைக்க வேண்டாம். இது ஒரு பொருள் சார்ந்த ஒப்பீடு மட்டுமே. Just a context wise comparision. ![]() ஊருக்குள் இப்படி ஒரு பழங்கோயில் பாழடைந்து கிடக்கும்போது, எதற்காக நல்ல நிலைமையிலிருக்கும் வேறொரு கோயிலுக்குக் கும்பாபிஷேகம்? தொண்டைவரை வந்துவிட்ட இந்தக் கேள்வியை உணர்ந்து கொண்டவர்களாக, இந்தக் கோயிலுக்கென்று பணம் கேட்டால் மக்கள் யாரும் கொடுப்பதில்லை என்றனர் உடனிருந்தோர். இரண்டு கோயில்களும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில்தான் கட்டப்பட்டிருக்கின்றன. பிறகு ஏன் இந்தக் கோயிலுக்கு மட்டும் ஓரவஞ்சனை? என்ற கேள்விக்கு, ஏதாவது தீவினைகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற பதில் வந்தது. சரிதான். நம் மக்கள் பெரியகோயிலுக்கே 'அதைத் தரிசிக்கும் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து' என்று கண்ணை மூடிக்கொண்டு கதை கட்டி மகிழ்ந்தவர்களாயிற்றே! இது எம்மாத்திரம்? சரி. அது போகட்டும். குறைந்த பட்சம் சுவர்களின் மேல் வளர்ந்திருக்கும் செடி கொடிகளையாவது அகற்றக்கூடாதா? என்று கேட்டால், அதற்குத்தான் ஆடு மாடுகளை வளர்க்கிறோமே! அதற்கு உணவு? என்ற எதிர்க்கேள்வி வருமென்பதால் கேட்கவில்லை. அந்த மரம் மண்டியிருக்கும் கோட்டத்தைப் பார்த்தவுடன், அடர்ந்த காட்டுக்குள் அமர்ந்து, சனகாதி முனிவர்களுக்கு வேதம் கற்பிக்கும் தட்சிணாமூர்த்தி அமர, இதைவிடப் பொருத்தமான கோட்டம் வேறெதுவும் இருக்க முடியாது என்றே தோன்றியது. ![]() இதைத்தவிர, எங்கோ ஒரு கோயிலில் மக்களைக் காப்பதற்காகச் செதுக்கப்பட்ட அம்மன் சிலை ஒன்று இங்கே கொண்டுவரப்பட்டு, 'நீ மக்களைக் காத்தது போதும். இந்த வைக்கோல்போருக்குக் காவலாய் இரு.' என்று சிதைக்கப்பட்ட கைகால்களுடன் மக்கள் அதைக் காக்க வேண்டிய நிலையில் பரிதாபமாகக் காட்சியளித்தது. ![]() மக்களுக்குத்தான் இதுபோன்ற கோயில்களின் அருமை தெரியவில்லை. HR&C (இந்து சமய அறநிலையத்துறை) -யும் ASI (தொல்லியல் பரப்பாய்வுத்துறை) -யும் என்ன செய்து கொண்டிருக்கின்றன? ஏன் இது கவனிப்பாரின்றிக் கிடக்கிறது? இதற்குப் பதில் சொல்வது மிகவும் சுலபம். அறநிலையத்துறைக்கு, கோயில்கள் எக்கேடு கெட்டுப்போனாலும் கவலையில்லை. உண்டியலில் விழும் பணம் மட்டும் போதும். ஏதாவது ஒரு கோயிலிலிருக்கும் உண்டியலில் காணிக்கையே விழுவதில்லையென்றால் அதைக் கோயிலாகவே மதிப்பதில்லை. கலிகாலத்தில் காசு மனிதருக்கு மட்டுமல்ல. கடவுளுக்கும் தேவை. தொல்லியல்துறை மத்திய அரசு நிறுவனம். எனவே, அதற்குரிய ஆமை வேகத்தோடுதான் பணிகள் நடைபெறும். ஒரு கோயிலை அவ்வளவு விரைவாகத் தங்கள் பராமரிப்பின்கீழ்க் கொண்டு வந்துவிட மாட்டார்கள். அக்கோயில் கல்வெட்டு, சிற்பம், கட்டடக்கலை என ஏதாவதொரு வகையில் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். இல்லாவிடில் பொதுமக்கள் யாராவது பரிந்துரை செய்ய வேண்டும். அதுவும் புதுடெல்லியிலிருக்கும் தொல்லியல்துறை இயக்குநருக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும். பிறகு அவர் அதைச் சென்னையிலிருக்கும் தலைமை அதிகாரிக்கு அனுப்புவார். ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஒன்று பராமரிப்புச் செலவு பற்றிய ஆய்வறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கும். அதன்பின் நிதி ஒதுக்கீடு ஒப்புதலுக்காகத் தமிழக அரசுக்கு அனுப்பப்படும். பிறகு அது வழக்கம்போல ஏதாவது ஒரு அரசு அதிகாரியின் மேஜை மீது கேட்பாரின்றிக் கிடக்கும். இந்தத் துறையில் லஞ்சம் கேட்கவும் வழியில்லை. கொடுப்பாருமில்லை என்பது ஆறுதலான விஷயம். இவையெல்லாம் வேலைக்குதவாது என்று பட்டால் அந்தந்த ஊர்மக்கள் ஒன்றுகூடி முயற்சியெடுத்து அவரவர் ஊர்க்கோயிலை ஓரளவிற்குப் பராமரிக்கலாம். இது ஓரளவுக்குச் சாத்தியமாகக்கூடிய விஷயம். ஊர்மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க வேண்டும். கொடுத்ததுடன் நின்று விடாமல், அதன் நிலை என்ன என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதற்கு வரலாற்றாய்வாளர்களும் துணை நிற்க வேண்டும். முழுக்க முழுக்க வரலாற்றாய்வாளர்களால் மட்டுமே இதைச் செய்து விட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்களை ஆய்வு செய்யும் அவர்கள் ஒவ்வொன்றையும் ஆழ்ந்து கண்காணிப்பதிலேயே கவனம் செலுத்தினால், ஆய்வுகளை நிறைவு செய்ய இயலாது. மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தால் மாவட்ட ஆட்சியர் நிச்சயம் அதைத் தமிழக அரசுக்கு அனுப்புவார். அந்தந்த ஊர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் ஆகியோரை அரசிடம் எடுத்துச் சொல்லச் சொல்லி வலியுறுத்த வேண்டும். இதற்கு ஊர்மக்கள் ஒன்றுகூடிச் செயல்படவேண்டியது அவசியம். உதாரணமாக, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையிலிருக்கும் சிறுகனூரிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கைலாச நாதர் கோயிலைத் தொல்லியல் துறையின் பராமரிப்பின்கீழ்க் கொண்டுவர டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்கள் முயற்சியெடுத்தார். பிறகு அந்த ஊர்மக்களுக்கு இதுபற்றிய தகவல்களைக் கூறி, அரசாங்கத்திடம் மனுக் கொடுக்க வைத்தும் அங்கு வரும் பெரிய மனிதர்களிடம் குருக்கள் மூலம் பரிந்துரைக்க வைத்தும், தற்போது ஆட்சியரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. விரைவில் தொல்லியல்துறை வசம் வந்துவிடும் என நம்பப்படுகிறது. இதேபோலத்தான், ஆறகளூர் மக்களிடமும், அரசிடம் மனுக் கொடுக்க வரலாறு.காம் ஆலோசனை வழங்கியுள்ளது. அடுத்தமுறை செல்லும்போது, மேலும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் மக்களிடம் தெரிவிக்கப் போகிறோம். சிதிலமடைந்துள்ள கோயிலை முழுமையாகப் புனரமைக்க முடியாவிட்டாலும், எஞ்சியுள்ள பகுதிகளையாவது நல்ல நிலைமையில் வைத்துப் பராமரிக்கத் தொல்லியல்துறை முன்வரும் என்ற நம்பிக்கையிருக்கிறது. காலம் நமக்கு அளித்துள்ள கலைச்செல்வங்களை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. வறுமையின் கோரப்பிடியில் இருந்து கொண்டு கலையை வளர்ப்பது இயலாத காரியம்தான் என்றாலும், வறுமை நீங்கிக் கலை வளர ஆரம்பிக்கும் காலம் வரும் வரை அவற்றை மேலும் அழியாமல் பாதுகாத்து உரியவர்களிடம் சேர்க்க வல்லமை தாராயோ சிவசக்தி!!! this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |