![]() |
![]() |
![]() |
http://www.varalaaru.com A Monthly Web Magazine for South Asian History [181 Issues] [1796 Articles] |
Issue No. 26
![]() இதழ் 26 [ ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15, 2006 ] 2ம் ஆண்டு நிறைவு - மகேந்திரர் சிறப்பிதழ் ![]() இந்த இதழில்.. In this Issue.. ![]() |
மகேந்திரவர்மர் என்ற பெயரில் சிம்மவிஷ்ணு பல்லவ மரபில் மூன்று மன்னர்கள் இருந்தபோதும், அந்தப் பெயரைக் கேட்கும்போதெல்லாம் அப்பெயருக்கு உரியவர் ஒருவரே என்பதுபோல் சட்டென்று நினைவில் மலர்பவர் முதலாம் மகேந்திரவர்மரே. இந்தப் பெருமை சோழப் பரம்பரையில் முதலாம் இராஜராஜருக்கு உண்டு. மூன்று இராஜராஜர்களில், இராஜராஜர் என்ற பெயரை உச்சரித்த மாத்திரத்தில் விசுவரூபமெடுத்து விழிகளின் முன் நிற்பவர் அவர்தான். நித்தவினோதரான அவரைப் போலவே முதலாம் மகேந்திரருக்கு நித்யவினிதன் என்று பெயர். 'என்றும் அடக்கமுள்ளவன்' என்று தம்மை இந்தப் பெயரின் வழி அறிமுகப்படுத்திக்கொள்ளும் இப்பெருந்தகை, தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்குமாறு தம் பெயரைச் செதுக்கிக் கொண்ட அற்புத மனிதராவார். சோழர்களை வெற்றிகொண்டு சிராப்பள்ளியைக் கைப்பற்றிய சிம்மவிஷ்ணுவிற்கு மகனாகப் பிறந்து, கி.பி 590ல் இருந்து 630 வரை ஏறத்தாழ நாற்பதாண்டுகள் பல்லவப் பேரரசை வழிநடத்திய முதலாம் மகேந்திரவர்மரின் பண்புநலன்களையும், ஆளுமையையும், கலையாற்றலையும், அறிவுத்திறத்தையும் அவர் விட்டுச் சென்றிருக்கும் கலைப்படைப்புகளும் அங்குப் பொறிக்கப்பட்டிருக்கும் கல்வெட்டுகளும் அவருடைய எழுத்தோவியங்களும் இனிதே அடையாளப் படுத்துகின்றன. தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு எனும் மூன்று மொழிகளிலும் வழங்கும் மகேந்திரரின் விருதுப் பெயர்களுள் பொருள் புலப்படுத்தும் அனைத்துமே, அவ்வேந்தரைப் புரிந்துகொள்ளப் பாதை போட்டுத் தருகின்றன. இறப்பிலி, நேரியவர், மேன்மையாளர், படைப்பாளி, தம்மை உணர்ந்தவர், தடையகற்றி, முதன்மையானவர், வலிய தேர், காற்று, கலைப்புலி, நடிகர், அனைத்துத் திசைகளிலும் பரவியவர், நல்லது-கெட்டது-சீரழிவு பற்றிய உள்ளுணர்வுடையவர், பண்புகளின் இருப்பிடம், புனிதமானவர், ஆற்றலாளர், தெளிந்தவர், கடுமையான ஆணையாளர், காட்டுத்தீ, அச்சமற்றவர், வெல்லமுடியாத அம்பு, நிறைவான-நிலையான பத்திமை உடையவர், நிறைவான அறிஞர், பெருமின்னல், மறுமலர்ச்சியாளர், உத்தமர், பெருந்தீ, புத்தர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர், மின்முகில், மயக்கி, களியாட்ட விரும்பி, உண்மையாளர், புதியவர், நீரோடை, தடுத்து நிறுத்த முடியாத சக்தி, அரசியல் வித்தகர் முதலிய நூற்று இருபத்தொன்பது விருதுப் பெயர்களால் சூழப்பட்டிருக்கும் மகேந்திரரின் ஆளுமையை அறிய இப்பெயர்களை ஆய்வு செய்தாலே போதும். அனைத்துத் திசைகளிலும் பரவியவர் என்ற பெயர் மகேந்திரவர்மருக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதை அவர் அகழ்ந்த குடைவரைகளைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். ஏழே குடைவரைகளை அகழ்ந்திருந்தபோதும், அவை நாற்றிசைப் பார்வையும் பெறுமாறு, மூன்றைத் தெற்கு நோக்கியும், இரண்டைக் கிழக்கு நோக்கியும், ஒன்றை வடக்குப் பார்த்தும் மற்றொன்றைத் தெற்கு வீச்சிலும் அமைத்தவர் மகேந்திரர். முகப்புப் பார்வை மட்டுமல்லாது கருவறைப் பார்வையும் நாற்றிசை நோக்கி நிலைக்குமாறு செய்த வித்தகர் அவர். முகப்புப் பார்வை மகேந்திரப்பார்வை. கருவறைப் பார்வை அவர் தம்மில் நிறுத்திய எருது ஊர்ப் பரம்பொருளாகிய சிவத்தின் பார்வை. காற்று, நீர்(நீரோடை), நிலம்(உலகடக்கி), தீ(பெருந்தீ, காட்டுத்தீ), ஆகாயம்(மின்முகில், பெருமுகில்), எனும் பஞ்ச பூதங்களையும் புனைபெயர்களாக்கிக் கொண்ட மகேந்திரரின் பெருமிதம் அவரது நிகரற்ற ஆற்றலுக்கு வெளிச்சமிடுவதாய் ஒளிர்கிறது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இதுபோல் பஞ்ச பூதங்களையும் பெயர்களாக்கிப் பூண்ட ஆற்றல் மிகு வேந்தர் வேறொருவர் இருந்ததாகத் தெரியவில்லை. மகேந்திரருடைய வீரத்தையும் போர்த்திறனையும் எதிர்க்கும் ஆற்றலையும் வெளிப்படுத்தும் பல பெயர்களுள் போரில் மரணக் கடவுள், கருணையற்றவர், அறுக்கும் அரம், வலிய தேர், துன்பப்படுத்துபவர், அழிவு, வன்சக்தியர், சோழர்க்குச் சூறாவளி, புருவங்களை உயர்த்தி நெறிப்பவர், பெருமைக்கு நஞ்சு, வெறியர், கசக்குபவர், தடுத்து நிறுத்தமுடியாத சக்தி, வன்மை வெல்வோர், பகைவரை அழிப்பவர், உலகடக்கி, மூர்க்கர்களையும் திருடர்களையும் அறிந்தவர், தடி என்பன குறிப்பிடத்தக்கன. அவரது பன்முகக் கலையாற்றலை, அறிவியல் திறனைச் சோதிட அறிஞர், நடிகர், கலைப்புலி, வில்லாளி, பலவும் பாடுபவர், மயக்கர், நிறைவான அறிஞர், விற்பனையாளர், தேர்ந்த ஞானர், கோயிலெழுப்பி, பன்முக அறிஞர், வெள்ளி நாவினர், சங்கீர்ண்ணஜாதி எனும் சிறப்புப் பெயர்கள் முன்னிறுத்துகின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றும் அவருக்குப் பொருந்துமாற்றை அவரது எள்ளல் இலக்கியங்களும் அவர் தோற்றுவித்திருக்கும் குடைவரைகளும் நிறுவவல்லன. மிகச் சிறந்த உளவியல் மேதையாக அவர் விளங்கியிருக்க வேண்டும் என்று உறுதிபடக் கூறுமாறு, தம்மை உணர்ந்தவர், இதுவுமல்ல-அதுவமல்ல, காரணம் காண்பவர், தெளிந்தவர், நீரோடை, நல்லது-கெட்டது-சீரழிவு பற்றிய உள்ளுணர்வு உடையவர், மகிழ்வின்பால் நிரந்தரமான ஈர்ப்பற்றவர் எனும் பெயர்கள் கண்சிமிட்டுகின்றன. வரலாற்று நோக்குடைய இம்மன்னர் கால நிகழ்வுப் பதிவுகளாகவும் சில பெயர்கள் அமைந்துள்ளன. புத்தர்களின் வீழ்ச்சிக்குக் காரணமானவர், மறுமலர்ச்சியாளர், கோயிலெழுப்பி, எருதுடையார், கைவலியால் உலகைப் புரப்பவர், சங்கீர்ண்ணஜாதி என்பன அவற்றுள் சில. மகேந்திரரின் இரக்கச் சிந்தனைகளை, ஆதரவற்றவர்களிடம் அவருக்கிருந்த அன்பை, அக்கறையை அவருடைய இரண்டு எள்ளல் படைப்புகளுமே உள்ளங்கைக் கனியாய்க் காட்டுகின்றன. பகவதஜ்ஜுக சாண்டில்யனும், மத்தவிலாசப் பித்தரும் எக்காலத்துச் சமுதாய அடுக்குகளிலும் காணக்கூடியவரே. சுமைநீக்கி, அறங்காவலர், துன்பிகளின் நலம்நாடி, தெப்பம், தடையகற்றி எனும் மகேந்திரப் பெயர்கள் சமூகத்தின் கீழ்நிலைகளிலிருந்த இத்தகு மக்களிடம் அவர் கொண்டிருந்த கனிவை, பரிவை, சுற்றமாய்ச் சூழும் பண்பை வெளிப்படுத்துவனவாய் அமைந்துள்ளமை கவனித்தற்குரியது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதலாம் மகேந்திரருக்கு முன்பு வாழ்ந்த எம்மரபு மன்னரும் பொருந்தப் பெற்ற இத்தகு புனைபெயர்களால் தங்களை வெளிக்காட்டிக் கொண்டமைக்கு இலக்கியப் பக்கங்களிலோ, கல்வெட்டுப் பொறிப்புகளிலோ சான்றுகளில்லை. அரசுப் பொறுப்பில் அமரும்போது அமையும் பெயருக்கு இணையாகவே புனை பெயர்களையும் நிலைநிறுத்திப் பலபெயர் ஒரு மன்னராய் வரலாற்றில் காட்சியளிக்கும் முதல் வேந்தர் மகேந்திரர்தான். மரபுவழி பேசும் பல்லவர் செப்பேடுகள் அனைத்தும் அவரை, 'மகேந்திரர்' என்றே அழைத்துப் பெருமைப்படுத்தியபோதும், தாம் எடுப்பித்ததாக அறிவித்திருக்கும் குடைவரைகள் ஐந்தனுள் எதுவொன்றிலும் அப்பெயரை எடுத்தவர் பெயராக அவர் பதிவுசெய்யவில்லை என்பது வியப்பூட்டும் செய்தியாகும். முதல் குடைவரையை விசித்திரசித்தன் அமைத்ததாகவும், இரண்டு குடைவரைகளை லளிதாங்குரன் அகழ்ந்ததாகவும், ஒரு குடைவரையை குணபரன் செய்ததாகவும் ஐந்தாம் குடைவரையை சத்ருமல்லன் வடிவமைத்ததாகவும் கூறித் தம் புனைபெயர்களை வரலாற்றுப் பதிவுகளாக்கியிருக்கும் மகேந்திரர், குடைவரைகளைப் பெயரிட்ட நிலையிலும் அவனிபாஜனன், லக்ஷிதன் என மேலுமிரண்டு புனைபெயர்களை முன் நிறுத்தியிருப்பதுடன், மகேந்திரவாடிக் குடைவரைக்குத் தம்முடைய மகேந்திரர் எனும் பெயரையும் தந்து அப்பெயரையும் கலைவரலாற்றுக் கருவூலமாக்கியுள்ளார். அவரைப் பின்பற்றித் தாம் எடுத்த கோயில்கள் பலவற்றிற்குத் தம் புனைபெயர்களை வைத்த மற்றொரு மன்னராக வரலாறு விரல்சுட்டி அடையாளப்படுத்துவது இராஜசிம்மரை மட்டுமே. யாரும் செய்யாததை, செய்யத் துணியாத ஒன்றை ஒருவர் செய்யும்போது அல்லது செய்ய முனையும்போது அந்த மனிதரை விசித்திரசித்தர் என்பது வழக்கம். கி.பி ஆறாம் நூற்றாண்டின் இறுதியிலோ, ஏழாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியிலோ வடதமிழ்நாட்டின் மண்டகப்பட்டு எனும் சிற்றூரில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலொன்று, 'பிரம்ம, ஈசுவர, விஷ்ணுவிற்காகச் செங்கல், மரம், உலோகம், சுதையில்லாமல் நிர்மாணிக்கப்பட்ட லக்ஷிதாயதனம்' என்ற கல்வெட்டுப் பொறிப்புடன் கலையுலகிற்கு அறிமுகமானது. பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த நிலப்பகுதியில், அதற்கு முன் கல்லைக் குடைந்து கோயிலமைக்கும் பழக்கம் இல்லாமையாலும், முதல்முதலாக கல் ஊடகத்தில் இறைவன் திருக்கோயில், அதுவும் மும்மூர்த்திகளுக்காக உருவாக்கப்பட்டமையாலும், அதை எதிர்காலத் தலைமுறைகளுக்குத் தெளிவாகப் புலப்படுத்திடும் வரலாற்று நோக்குடன் அதுநாள்வரை கோயிலெடுக்கப் பயன்படுத்தப்பட்ட பொருள்களையும் சுட்டி, இக்கல்வெட்டைப் பொறித்த மகேந்திரர், இதுபோன்ற புதுமைகளைத் தாம் அவாவிச் செய்யும் பண்பினர் என்பதையும் வரலாற்றில் பதிவாக்கக் கருதியே இந்தத் திருப்புமுனையான இடத்தில் தம்மை விசித்திர சித்தராக அடையாளப்படுத்தியுள்ளார். மண்டகப்பட்டைத் தொடர்ந்து, மாமண்டூர், மகேந்திரவாடி, பல்லாவரம், சீயமங்கலம், தளவானூர், சிராப்பள்ளி ஆகிய ஆறு இடங்களில் குடைவரைகளை அமைத்த மகேந்திரர், ஒவ்வோர் இடத்திலும் புதுமைகளைப் புகுத்தியுள்ளார். மாமண்டூரிலுள்ள நான்கு குடைவரைகளில் முதற் குடைவரை மகேந்திரரின் வடமொழிக் கல்வெட்டைப் பெற்றுள்ளது. இரண்டாம் குடைவரை மூன்று கருவறைகளுடன் அக்கருவறைகளுக்கான காவலர்களையும் அடியவர்களையும் பெற்றுள்ளது. மூன்றாம் குடைவரை முகப்பு வழியுடன் பக்க வழியும் பெற முயற்சிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் குடைவரையாக மலர்ந்துள்ளது. நான்காம் குடைவரை நிறைவடையாத முயற்சி. அதனால் அதில் 'என் செயக் கருதி'க் குடைவு நிகழ்ந்ததோ தெரியவில்லை. மகேந்திரவாடி தமிழ்நாட்டின் முதல் விஷ்ணு குடைவரையைக் கண்ட களம். ஐந்து கருவறைகளையும் மூன்றாகப் பகுக்கப்பட்ட அர்த்த மண்டபக் கூரையையும் பெற்றுத் தனித்துச் சிறக்கிறது பல்லாவரம். முதல் முன்றில், முதல் வாயில் தோரணம், முதல் முழுமைக் கபோதம், முதல் பூமிதேசம், முதல் மழுவடியார் என எத்தனை முதல்கள் தளவானூரில். சீயமங்கலமோ சிற்பக் களஞ்சியமாய். மகேந்திரர் காலச் செதுக்குத் திறத்தின் செழுமைகளைப் பதிவுசெய்துள்ளது. அமலையர், புஜங்கத்ராசிதர், நந்தியணுக்கர், பூப்பெண்கள் என எத்தனை சிற்பங்கள்! முதல் சூலதேவரும் இங்குதான் உதயம். இலளிதாங்குரம் எழுந்துள்ள சிராப்பள்ளி பாடல் பெற்ற ஊர். இங்குதான் தமிழ்நாட்டின் முதல் கங்காதரரைச் சுவர் பரவிய சிற்பமாய் மகேந்திரர் உருவாக்கியுள்ளார். இக்குடைவரையும் பல முதல்களுக்குச் சொந்தமானது. தமிழ்நாட்டின் பெண் தெய்வ வழிபாடு குறித்த முதல் கல்வெட்டு இங்குதான் கிடைக்கிறது. நிலமட்டத்தில் அமைந்துள்ள கோயிலில் நின்றுகொண்டு சோழர்களின் மகத்தான ஆற்றலையும் காவிரி நதியையும் நான் எப்படிப் பார்க்க முடியுமென்று சிவபெருமான் மகேந்திரரிடம் கேட்டுப் பெற்ற மலைக்கோயில் இது. திட்டமிடல்களில், உருவாக்கத்தில், புதிய கட்டுமான உறுப்புகளை இடத்திற்கேற்ப அறிமுகப்படுத்துவதில், சிற்பங்களின் தேர்வில், அவற்றின் அமைப்பில் என ஒரு குடைவரையின் ஒவ்வொரு கட்டத்திலும் மகேந்திரர் காலச் சிற்பிகள் காட்டியுள்ள அக்கறையும் தந்துள்ள உழைப்பும் அவர்களைப் பின்னிருந்து இயக்கிய மேதையின் கற்பனைத்திறன் காட்டுவதுடன், கலைகளின் மேல் அந்த மனிதருக்கிருந்த ஆழ்ந்த பிடிப்பையும் தெளிவாய்ய் உணர்த்துகின்றன. 'சேத்தகாரி' என்ற பெயருக்கேற்ப கோயில்களைப் பலவாய் எடுத்த பெருமான் மகேந்திரர். விசித்திரசித்தரின் பெரும்பாலான கோயில்களில் இன்றும் வண்ணப் பூச்சுகளின் எச்சங்களைப் பார்க்க முடிகிறது. அவர் கால ஓவியங்களை இன்று காணமுடியாதவாறு அவை முற்றிலுமாய் மறைந்து போயிருப்பினும், எஞ்சியிருக்கும் இராஜசிம்மர் கால ஓவியங்கள் பல்லவக் கலைஞர்களின் வண்ணத் தேர்வு பற்றியும் உருவமைப்பில் அவர்களுக்கிருந்த தேர்ச்சி பற்றியும் இடப்பகிர்வில் அவர்கள் பெற்றிருந்த திறன் பற்றியும் மிகத் தெளிவாகப் பேசுகின்றன. பனைமலை உமையின் ஒசிந்த கோலமும், இராஜசிம்மேசுவரத்து சோமாஸ்கந்தரின் கம்பீரமும் கண்முன் நிற்கும் காட்சிகளாய்ப் பல்லவத் தூரிகைகளின் பெருமை பேசுகின்றன. இத்தகு ஓவிய எழுச்சிக்கு வித்திட்டவரும் வீறு தந்தவருமான மகேந்திரர் தம்மைச் சித்திரகாரப் புலி என்று அறிமுகப் படுத்திக் கொள்வதுதான் எத்தனை பொருத்தமானது. மாமண்டூர்க் கல்வெட்டு மகேந்திரரின் இசையறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதுடன் இசை சார்ந்த அவருடைய கண்டுபிடிப்புகளையும் அறிமுகப்படுத்துகிறது. குரலிசையின் தாளத்திற்குக் கருவியிசையின் ஆற்றலை முன்பு எப்போதும் இல்லாத நிலைக்கு உயர்த்த அவர் மேற்கொண்ட 'இசையெழுத்துப் புணர்ப்புகள்' பரதரின் நாட்டிய சாத்திரம் சுட்டும் மூவகை விருத்திகளையும் முன்நிறுத்தி ஆராயப்பட்டவை. பல்லாவரம் கல்வெட்டில் உள்ள மகேந்திரரின் பல்வேறு விருதுப் பெயர்களுள் ஒன்றான, 'பல பாடி' அவரைப் பலவும் பாடும் குரலிசை விற்பன்னராகக் காட்டுகிறது. சிராப்பள்ளி, பல்லாவரம் குடைவரைகளில் உள்ள மகேந்திரவர்மரின் புனைபெயர்களுள் ஒன்று அவரை சங்கீர்ணஜாதி என்றழைத்துப் பெருமைப்படுத்துகிறது. தாளத்தின் இருகூறுகளுள் ஒன்றான லகுவின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் ஜாதிகளுள் சங்கீர்ணஜாதி ஒன்று. மகேந்திரர் தம்மைச் சங்கீர்ணஜாதி என்றழைத்துக் கொள்வதை நோக்குகையில், உயர் எண்ணிக்கையான ஒன்பதில் அமையும் இலகு மகேந்திரரின் அறிமுகமோ என்று கருதத் தோன்றுகிறது. தாளக்கூறுடன தொடர்புடைய புனைபெயரில் அறியப்படும் ஒரே இந்திய மன்னரென்ற பெருமையைப் பெறும் இவ்வரசரின் தேவியும் ஓர் இசையறிஞரே என்பது ஈண்டு கருதத்தக்கது. குடுமியான் மலையிலும் திருமெய்யத்திலும் செதுக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களில் அமைந்த இசைக்கல்வெட்டுகள் எம்மன்னரின் காலத்தில் வெட்டப்பட்டன என்பதிலும், மலையக்கோயிலிலும் திருமெய்யத்திலும் காணப்படும் இசை தொடர்பான பழந்தமிழ்க் கல்வெட்டுகள் யாருடையன என்பதிலும், மலையக்கோயில், திருமெய்யம், குடுமியான்மலை ஆகிய மூன்றிடங்களிலும் வெட்டப்பட்டுள்ள 'பரிவாதிநி' எனும் வீணை எவருடைய கண்டுபிடிப்பு என்பதிலும் இன்றளவும் ஆய்வாளர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. பல்லவகிரந்தத்திலும், வல்லம், சிராப்பள்ளி, பல்லாவரம் ஆகிய இடங்களில் காணப்படுவது போன்ற பழந்தமிழ் எழுத்துக்களிலும் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகளுடன் முதலாம் மகேந்திரரை இணைத்து எழுதியுள்ள அறிஞர்கள் பலராவர் என்பதும் இங்கு நினைக்கத்தக்கது. வால்மீகியையும் வியாசரையும் நாட்டிய வேதத்தை உருவாக்கிய நான்முகனையும் கல்வெட்டுகளில் நினைவுகூறும் மகேந்திரவர்மர், இலக்கியச் சிந்தனையாளராகத் திகழ்ந்தமைக்கு அவர் நூல்களே சிறந்த சான்றுகளாக அமையும். மத்தவிலாசப் பிரகசனம், பகவதஜ்ஜுகம் எனும் இவ்விரும் நூல்களும் இன்று அச்சில் கிடைப்பது நம் பேறாகும். எள்ளல் வகை நாடகங்களாய் எழுதப்பட்டுள்ள இவையிரண்டுமே கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கக் காலச் சமுதாயத்தைப் பறவைப் பார்வையாகப் பார்க்கின்றன. மத்தவிலாசப் பிரகசனம் சமயவாதிகளின் நெறிமீறல்களைத் தெளிவுபடுத்துவதுடன் சட்டம், நீதி, ஒழுங்கு ஆகிய மூன்றும் அக்காலத்தில் எந்த அளவிற்குப் பாழ்பட்டிருந்தன என்பதையும் வெளிச்சப்படுத்துகிறது. நாடகம் அமைந்திருக்கும் முறை, அதன் காட்சிகள் ஓடும் பாங்கு, மையக்கருத்து ஆகிய இம்மூன்றுமே இந்நாடகம் ஏழாம் நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான புதுமுயற்சி என்பதைத் தெளிவாக்குகின்றன. இந்நாடகத்தை அறிமுகப்படுத்தும் சூத்திரதாரியின் மனைவியான நடீ, 'போதை களிப்பு நிறைந்த இந்தக் கேலி நாடகம் புதுமுயற்சி' என ஒத்திசைவது நோக்கத்தக்கது. இந்நாடகத்தில் இருபத்து மூன்று இசைப்பாடல்கள் உள்ளன. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்களைச் சிலம்பில் சந்திக்க நேர்வதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதன் வளர்நிலை போல இடம்பெறும் மத்தவிலாசத்தின் இசைநய அங்கதங்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் எழுதுமுறைக்கு எடுத்துக்காட்டுகளாகின்றன. ஏழே உறுப்பினர்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நாடகத்தில் இருவர் அறிமுக நிலையோடு ஒதுங்குகின்றனர். ஒருவர் நாடகத்தின் இறுதியில் மட்டுமே இடம்பெறுகிறார். நால்வர் மட்டுமே முக்கிய உறுப்பினர்களாய் அமைந்து நாடகத்தை நடத்திச் செல்கின்றனர். மது, மங்கை, மாமிசம், சமய நம்பிக்கைகள் எனச் சுழலும் மத்தவிலாசம் மகேந்திரரை ஒரு பகுத்தறிவாளராகவும் வரலாற்று நோக்கராகவும் புலப்படுத்துவதை மறுக்கமுடியாது. 'இந்த மதுக்கடை வேள்விக்கூடத்தை ஒத்து விளங்குகிறது. இங்கிருக்கும் அடையாளக் கொடிக்கம்பத்தைப் பார். அதுதான் வேள்விக்குண்டத்துக் கம்பம். மதுதான் சோமரசம். ஜாடிகள் புண்ணியப் பாத்திரங்கள். பொரித்த கறியும் மற்ற பொருட்களும் சுவைக்கும் நைவேத்தியங்கள். போதைப் பிதற்றலகள் யஜூர்வேத மந்திரங்கள். பாடல்கள் சாமவேத கீதங்கள். தோல்பைதான் வேள்வி அகப்பை. தவிப்பே தீ. கடைக்காரர்கள் வேள்வி நேர்ந்தவர்கள் எனும் கபாலிகனின் உடையாடல் ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. காஞ்சிபுரத்தைப் பற்றிய வண்ணனைகளும், ஆடல், இசை பற்றி அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும் மறைமுகமான தரவுகளும் மகேந்திரரின் கலைஞானம் காட்ட, துறவிக்கும் கபாலிகனுக்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் தத்துவ விசாரணையில் அவருக்கிருந்த அளப்பரிய அனுபவத்தைப் பிரதிபலிக்கின்றன. நாடகம் முழுவதும் ஒரு மெல்லிய இழை போல ஓடும் இயல்பான நகைச்சுவை இந்நாடகத்தைச் சமுதாயத்தின் அனைத்துத் தள மக்களுக்கும் கொண்டு சேர்த்ததாக நம்பலாம். மிக மென்மையாகச் சமுதாய, சமயப் புன்மைகளை எள்ளலுடன் வெளிச்சப்படுத்தியிருக்கும் மகேந்திரரின் எழுத்துப்பாங்கு, அவரைச் சிறந்த நாடகக் கலை அறிஞராகவும் சமுதாயச் சிந்தனையாளராகவும் படம்பிடிக்கின்றது. நாடகமேடையில் நுழையும் பைத்தியக்காரனை, புழங்கிய ஒட்டுக் கிழிசல் கந்தை மழியாத் தூசுப் பரட்டைக் கேசம் பழகிய தாரைத் திரளாய்ச் சுற்றி விலக்கிய உணவுத் துகள்கள் கொள்ள வலஞ்செய் காகக் கூட்டஞ் சூழ மனுடர் உருவங் கொண்டே திரியும் நாட்டுக் குப்பைப் போலா வானே. என்று அறிமுகப்படுத்ட்தும் பாடல், குறிப்பாக, 'நாட்டுக்குப்பை' என்ற அந்தச் சொல்லாட்சி எண்ணி எண்ணி உருகத்தக்கது. எத்தனை விரிந்த பார்வை! எத்தனை கூர்ந்த நோக்கல்! இவர் மன்னராய் அந்தப்புரம், அரண்மனை எனச் சுகங்களில் வாழ்ந்தவரா அன்றி மக்களோடு மக்களாய் வீதிகளில் நடந்து துன்பச் சூழல்களை நித்தமும் அனுபவித்தவரா என்று வியக்குமாறு விளங்குகின்றன. நாடகத்தின் பல காட்சிகள், ஏழ்மையின் தன்னிரக்கமான நிலையையும், பொருள் படைத்தவர்கள் செல்வாக்கால் நீதிதேவதையையே வீட்டுக் காவலாக்கும் வல்லமை பெற்றிருந்த ஏழாம் நூற்றாண்டுச் சூழலையும் கண் முன் காட்டும் மகேந்திரர், கடமையே தாமாய் மக்கள் வாழ்வதே நாடு நன்மையடையும் வழி என்பதை முத்தாய்ப்பாகக் கூறி மத்தவிலாச அங்கதத்தை நிறைவு செய்கிறார். இரண்டாம் நூலான பகவதஜ்ஜுகம் இந்து சமயத் துறவி, அவர் சீடர் எனும் இருவர்தம் உறவின் உள்ளடக்கத்தை வெளிச்சப்படுத்துவதுடன் அக்கால அரச கணிகையர் நிலையையும் பதிவு செய்துள்ளது. இதுவும் மத்தவிலாசம் போலவே பல இசைப்பாடல்களைப் பெற்றுள்ள எள்ளல் வகை நாடகமாகும். இந்நூலுக்குப் 'பாடங்கேள்' எனும் தலைப்பு பகவதஜ்ஜுகம் என்பதினும் பெரிதும் பொருந்தியிருக்கும். துறவி தம் சீடரைப் பாடங்கேட்க வற்புறுத்தி அழைக்கும் இடங்கள் அனைத்துமே, எக்காலத்துமிருக்கும், 'சமயப் போலிகளை' அடையாளம் காட்டுமாறு அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் வழக்கிலிருந்த நாடக வகைகள் (வேண்டுதல் நாடகம், ஒருத¨லைக் காதல் நாடகம், முற்றுகை நாடகம், தொடர்பற்றுத் தொடங்கி ஒன்றாகக் கூடிவரும் நாடகம், போர்ப்பூசல் நாடகம், ஓர் ஆள் காதல் வீரநாடகம், தொடர்பற்ற பேச்சு உரையாடல் நாடகம், ஒருவர் அல்லது இருவர் காதல் நாடகம், ஓரங்க துக்க நாடகம், அங்கத நாடகம்) சமய ஒழுகலாறுகள், வாழ்க்கை நிலை, மெய்யியல் வெளிப்பாடுகள், ஆன்மா பற்றிய நம்பிக்கைகள், பந்தம் தொடர்பான சிந்தனைகள், மரவகைகள், அழகியல் நோக்கு, ஒவ்வொருவரும் பாடங்கேட்க வேண்டியதன் இன்றியமையாமை, யோகாசனம், நிலவியல் படப்பிடிப்பு, மருத்துவ ஏமாற்றுக்கள், ஊழ்வினையை எதிர்கொள்ளும் துணிவு என்று பகவதஜ்ஜுகம் முன்னிலைப்படுத்தும் முதன்மையான தரவுகள் எந்த ஒரு வரலாற்று நூலிலும் இதுநாள் வரையிலும் இடம்பெறாமல் போனமை பேரிழப்பே. பதினொரு உறுப்பினர்கள் இடம்பெற்றபோதும், நாடகம் சுழல்வது மூவரைச் சுற்றியே. துறவியான பரிவிராசகர், அவர் சீடரான சாண்டில்யன், அரசகணிகையான அஜ்ஜுகா (வசந்தசேனை) எனும் இம்மூவரும் மகேந்திர வர்மரின் மகத்தான சமுதாயப் பதிவுகள். இவர்களைச் சூழவரும் எமதூதரும் மருத்துவரும் நாட்டு நம்பிக்கைகளையும் நோய்-மருந்து-நலம் குறித்த நிலைப்பாடுகளையும் நகைச்சுவை உணர்வுடன் பரிமாறிச் செல்கிறார்கள். சூத்திரதாரி நாடகவகைகளை அறிமுகப்படுத்தி, ஜோதிடத்தைச் சாட முயல்கிறார். 'கற்றுக்கொள். கற்பிக்காமல் எதையும் விளங்கிக் கொள்வது சாத்தியமன்று' என ஓங்கி ஒலிக்கும் சூத்திரதாரியின் குரலில், 'கற்க' எனும் வள்ளுவத்தின் அழுத்தமான கட்டளைக் குரலின் சாயலைக் காணமுடிகிறது. இந்த நூல் மகேந்திரவர்மரைச் சிந்தனைச் சிற்பியாய் வெளிப்படுத்துவதுடன், எத்தனை விரிந்த பார்வையில் சமுதாயத்தின் அனைத்துத் தளங்களையும் அவர் ஆழ்ந்து நோக்கியுள்ளார் என்பதையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. சமயவாதிகளின் போலித்தனமும் சமுதாயத்தில் மிக்கிருந்த அறியாமையும் வறுமையும் அவரை எந்த அளவிற்குப் பாதித்திருக்க வேண்டும் என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது. யோகாசனத்தை, 'அறிவின் வேர், தவத்தின் சாரம், மெய்யின் அடித்தளம், மிரட்டுக்கு முடிவு, விருப்பு வெறுப்பினிடை விடுதலை' என மகேந்திரர் வரையறுத்திருக்கும் அழகு இன்றைக்கும் பொருந்துமாறு உள்ளமை நினைந்து மகிழத்தக்கது. ஒரு மனிதனை அடையாளப்படுத்துவன வாழும்போது அவன் விட்டுச் செல்லும் முத்திரைகள்தான். காலம் இந்த முத்திரைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்து வரலாற்றுக் கண்களின் முன் எடைபோட நிறுத்துகிறது. எதையும் எவ்விதச் சார்புமின்றிப் பார்வையிடும் வரலாறு, அந்த முத்திரைகளுள் மகத்தானவற்றைத் தன் தலைமேல் சுமந்து தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்கிறது. அப்படித் தலைமுறை தலைமுறையாக வாழும் அபூர்வ மனிதர்களுள் ஒருவர்தான் மகேந்திரவர்மர். அவர் அந்தப்புரத்து மனிதராகவோ அல்லது ஆசனத்தை அலங்கரிக்கும் அரசராக மட்டுமோ இருந்து மறைந்திருந்தால் வரலாற்றுப் பக்கங்களின் வரியடுக்குகளில் தேய்ந்துபோன என்னோரற்ற ஜீவன்களுள் ஒன்றாய் ஒடுங்கியிருப்பார். தீர்க்கமான பார்வையுடன் கலைகளின் தழுவலில் மக்கள் மன்னனாக அவர் வாழ்ந்ததால்தான், அந்த சத்யசந்தரை இறந்த காலம் மதித்தது. நிகழ்காலம் போற்றுகிறது. எதிர்காலமும் வாழ்த்தும் என்ற நம்பிக்கையில். காலநடையில் அறிவியல் அற்புதங்கள் வளரும், மாறும், தேயும், அழியும். ஆனால் கலைப்படைப்புகள் எவ்வளவுதான் மாற்றங்களை, முன்னேற்றங்களைச் சந்திக்க நேர்ந்தாலும், பழமைக்குள்ள மதிப்பும் சிறப்பும் குன்றுவதேயில்லை. இராஜராஜீசுவரத்தின் பதினைந்து தள விமானத்தைப் பார்க்கும் கண்களுக்கு மகேந்திரரின் சத்ருமல்லேசுவராலயம் கொய்யாப் பிஞ்சுதான். என்றாலும், அந்தப் பிஞ்சின் வனப்பும் வாளிப்பும் பார்வையைச் சிறப்பிடித்து உள்ளத்தை நெக்குருகச் செய்வதை எப்படி மறுக்க முடியும்? கலையின் கைகள் வானத்தையளப்பவை என்பதை மிகநன்றாக உணர்ந்திருந்ததால்தான் அந்த விசித்திரசித்தர் கல்லில் கற்பனை விதைத்தார். சித்திரகாரப் புலியாய்ச் சுவர்களிலும் தூண்களிலும் சித்தம் காட்டினார். குணபரனாய்ப் பண்பும் பயனும் காட்டும் சிற்பங்களைச் சமைத்தார். வாழ்க்கையும் தாமும் அநித்யம் என்பதை உணர்ந்த நிலையில், சரித்திரம் மட்டுமே சாசுவதமானது என்பதைக் கலைத்திரையில் காட்சிப் பொருளாக்கிய சேத்தகாரி அவர். அவரைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இலளிதாங்குரத்துக் கங்காதரரைப் பாருங்கள். பக்தனுடைய தேவைக்காகக் குடும்பத்தைக்கூடக் குலைத்துக்கொண்ட கோலமது. மத்தவிலாசம், பகவதஜ்ஜுகம் படியுங்கள். ஒழுங்குபடுத்தவேண்டிய சமயமும் ஒழுங்குடன் நிற்கவேண்டிய சமுதாயமும் கைகோத்துப் புரையோடிப்போன அவலங்களை முன்னிலைப்படுத்தி, 'நம்பிக்கை கொள்ளுங்கள், கடமையுணர்வுடன் வாழுங்கள். சத்ருமல்லர் வருபகை தனைத் திறமொடு களைந்திடுவார்' என்று உறுதிபகரும் உன்னத நூல்கள் அவை. இவர்கள் சற்றுமுன் சச்சரவிட்டுத் தாக்கிக் கொண்டவர்கள்தானா என வியக்கவைக்குமாறு மத்தவிலாச உறுப்பினர்கள், ஒருவருக்கொருவர் குற்றங்களை மன்னிக்க வேண்டுவதும், 'உன்னை மகிழச் செய்ய நான் என்ன செய்ய வேண்டும்' எனக் கேட்பதும், 'என்னால் நீங்கள் மகிழ்வீர்கள் என்றால் அதைவிட எனக்கு என்ன வேண்டும்' என்று மறுமொழி உரைப்பதும் எத்தனை சிறப்பான வாழ்வியல் போக்குகள்! எவ்வளவு வளமான எதிர்பார்ப்புகள்! மத்தவிலாசம் மத்தவிலாசம்தான். அதைப் படைத்த மகேந்திரர் மகத்தானவர்தான். கலைஞர்கள் கடவுளைப்போல, அவர்களும் படைப்பதால். கலைஞர்கள் கவிஞர்கள் போல, அவர்கள் படைப்புகளும் கவிமொழி பேசுவதால். கலைஞர்கள் சரித்திரம் போல, அவர்தம் படைப்புகள் காலங்கடந்தும் நிற்பதால். மகேந்திரவர்மர் கலைஞர்களின் கலைஞர். கலைவரலாற்று முதல்களை முடிவின்றிச் சுமப்பதால். முன்னோக்கிப் பார்ப்பதையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்த இப்பேரறிவாளரை, எண்ணிக்கையில் பலவாயுள்ள இவரின் புனை பெயர்களுள் ஒன்று, 'அபிமுகன்' என்று அழைத்துப் பெருமைப்படுத்துவதுதான் எத்தனை பொருத்தமானது? this is txt file |
![]() சிறப்பிதழ்கள் Special Issues ![]() ![]() புகைப்படத் தொகுப்பு Photo Gallery ![]() |
(C) 2004, varalaaru.com. All articles are copyrighted to respective authors. Unauthorized reproduction of any article, image or audio/video contents published here, without the prior approval of the authors or varalaaru.com are strictly prohibited. |